Thursday, 19 March 2015

பங்குனி உத்திர சிறப்புகள்.........


பங்குனி உத்திர சிறப்புகள்..

சம்பந்தர் பாட்டில் உத்திர விழா:
 சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார். பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள். பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள்.

பங்குனியில் நந்தியின் திருமணம்:
 சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார். சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்! என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார். சிவனருளை எண்ணி சிலாதமுனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். இறைவன் அருளிய வண்ணம் யாக முடிவில் பூமியை உழும்போது ஒரு பெட்டகம் அகப்பட்டது. முனிவர் அதைத் திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார். ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், முனிவரே! பெட்டியை மூடித்திற என்று கட்டளையிட்டருளினார். பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர்.

பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார். அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, நிலைத்த பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டும் என்று வரமாக அருளினார். மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடபநந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாதமுனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார்.

இறைவன் ஐயாறப்பர்; இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திரதினத்தில் செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது. பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும்; அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள். இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும் வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.

பகீரதனுக்கு அருளிய முருகன்:

 கங்கையை பூமிக்கு வரவழைத்த பகீரதன் ராமாயண காலத்துக்கு முன்பே வாழ்ந்தவன். ஆனால், அவனுக்கு தமிழ்க்கடவுளான முருகனின் அருள் கிடைத்தது என்பது தேனூர் வரகவி சொக்கலிங்கனார் எழுதிய "சேய்த்தொண்டர் புராணம் என்ற நூல் மூலம் தெரிய வருகிறது. "சேய் என்றால் "குழந்தை முருகன். அவரது தொண்டர்கள் 78 பேர் வரலாறு இந்த நூலில் சொல்லப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பகீரத நாயனார். இவர் சென்னை தாம்பரம் அருகிலுள்ள வல்லக்கோட்டை பகுதியை ஆண்டார். திருப்புகழில் அருணகிரியார் இவ்வூரை "கோடைநகர் என குறிப்பிட்டுள்ளார். பகீரதனுக்கு கோரன் என்ற எதிரி இருந்தான். இவன் பகீரதனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினான். பகீரதன் சுக்ராச்சாரியாரை சரணடைந்து, இழந்த நாட்டை மீட்க வழி கேட்டான். வெள்ளிக்கிழமைகளில் பாலமுருகனை வழிபாடு செய்தால் குறை தீரும் என்றார் சுக்ரன். அதன்படி, அவனும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து கோரனை ஜெயித்து நாட்டை மீட்டான். முருகனுக்கு பிடித்தமான பங்குனி உத்திர விரதத்தையும் பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளலாம்.

வயது மூத்த பிரம்மனை சின்னமுருகன் தண்டித்தது ஏன்?

முருகன் பிரம்மனைக் குட்டிய வரலாறு கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. சிவனை வணங்க கயிலாயம் வந்தார் பிரம்மா. படைப்புக்கடவுள் என்ற கர்வத்தோடு, முருகன் சிறுவன் தானே என்ற எண்ணத்தில் வணங்காமல் உள்ளே நுழைந்தார். ஆனாலும், முருகன் பிரம்மனைத் தண்டிக்க விரும்பவில்லை. சிவதரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்த போதும் பிரம்மாவுக்கு அகங்காரம் நீங்கவில்லை. "வழிபாடு என்ற சொல்லுக்கு "அகங்கார நீக்கம் என்று பொருள். இதைக்கூட உணராத பிரம்மனை தண்டிக்க முடிவெடுத்தார். அவரது தலையில் குட்டி சிறையிலிட்டார். தானே படைப்புக்கடவுளாகி சிருஷ்டித் தொழில் செய்தார். செல்வமும், திறமையும், புகழும் இருந்தாலும் இறைவனுக்கு அடங்கி நடப்பது கடமை என்பதை இதன் மூலம் உணர்த்தினார். இதையே வள்ளுவர், "எல்லாருக்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்கிறார். செல்வச்செழிப்புள்ளவர்க்கும் பணிவு தேவை என்பது இது உணர்த்தும் கருத்து.

முருகனின் திருவடி உயர்வு:
எந்த தெய்வமாக இருந்தாலும் முகங்கள் பல, திருவடி இரண்டு மட்டுமே இருக்கும். முருகனுக்கு ஆறு முகம். பக்தன் எங்கெல்லாம் அழைக்கிறானோ, அங்கெல்லாம் திரும்பிப் பார்க்க பன்னிரண்டு கண்கள். அவனது கடைக்கண் பார்வை பட்டாலே போதும், நினைத்தது நடந்து விடும். கேட்டது கிடைத்து விடும். ஆனால், அவனையே வேண்டுமென கேட்கிறார்கள் அடியார்கள். அது அவ்வளவு சாதாரணமான விஷயமா என்ன! இருந்தாலும், தன்னையே தர அவர் தயாராக இருக்கிறார். அதற்கு அவரது திருவடியைத் தான் கெட்டியாகப் பிடிக்க வேண்டும். அருணகிரியார் தனது திருப்புகழில், அவனது திருவடி தரிசனத்தையே கேட்கிறார். காரணம் பிறப்பற்ற நிலையை அடைய! பக்தன் உலக வாழ்வை வெறுத்து, மனதார அவனது திருவடியில் ஐக்கியமாக வேண்டும் என உருகிக் கேட்டால், அந்த வரத்தை நிச்சயம் தருவான்.

சாஸ்தாவின் அவதார நாள்:
சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். ஐயப்பன் வழிபாட்டில் நெய்த்தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு. நெய்த்தேங்காய் இருமுடியில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றாகும்.தேங்காயில் வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்னும் மூன்று கண்கள் உண்டு. ஒரு கண்ணைத் தோண்டி அதில் இருக்கும் இளநீரை வெளியேற்றிவிடுவர். இளநீர் உலக இன்பத்தைக் குறிப்பதாகும். அதை வெளியேற்றுவதன் மூலம் நம் அஞ்ஞானம் விலகுகிறது. இன்ப வேட்கை மறைகிறது. நெய்யை நிரப்புவதன் மூலம் தெய்வீக சிந்தனை நம்முள் நிரம்புகிறது. இந்தச் சடங்கின் நோக்கமே மனத்தூய்மை பெற்று ஞானம் அடைவது தான். இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். சாத்து என்ற சொல்லுக்கு கூட்டம் என்று பொருள். இதனால், இவர் சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான் என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார். தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும்.

ஞானம் அருளும் தர்ம சாஸ்தா: செங்கல்பட்டு அருகில் உள்ள தலம் தாழக்கோயில். இங்கு தேவாரப்பாடல் பெற்ற பகத்வத்சலர் கோயில் உள்ளது. பக்தவத்சலர் என்பதற்கு தாயுள்ளம் கொண்டவர் என்பது பொருள். அம்பிகை திரிபுரசுந்தரிக்கு  பங்குனி உத்திரம், நவராத்திரி ஒன்பதாம் நாள், ஆடிப்பூரம் நாட்களில் மட்டும் அம்பிகைக்கு முழுமையான அபிஷேகம் நடைபெறும்.  மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். தேவாரம் பாடிய மூவரும் இங்கு பாடல் பாடியுள்ளனர். கோயில் வரலாறு அந்தகக்கவி வீரராகவரால் எழுதப்பட்டது. அகத்திய முனிவரும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட சிறப்புடையது.

அஷ்ட சாஸ்தா வழிபாடு:
 கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் சாஸ்தா. இவர் பங்குனி உத்திரத்தன்று அவதரித்தார். இவரை அஷ்டசாஸ்தா என எட்டுவித கோலங்களில் வணங்குவர். சம்மோகனசாஸ்தா, கல்யாணவரத சாஸ்தா, வேத சாஸ்தா, சந்தான ப்ராப்தி சாஸ்தா, மகாசாஸ்தா, ஞானசாஸ்தா, தர்மசாஸ்தா, வீரசாஸ்தா ஆகியோரே இவர்கள்.  சந்திரனைப் போல குளிர்ச்சியான அருளைக் கொண்ட சம்மோகன சாஸ்தா இல்லறவாழ்வில் நிம்மதியை அருள்வார். கல்யாண வரத சாஸ்தா செவ்வாய் தோஷம் போக்கி மங்கலவாழ்வு தருவார். ஆன்மிக வழியில் நம்மை நடக்கச் செய்பவர் வேதசாஸ்தா. மகப்பேறு வழங்கி வீட்டில் மகிழ்ச்சியை நிலைக்கச் செய்பவர் சந்தான ப்ராப்தி சாஸ்தா. ராகுதோஷம் போக்கி வாழ்வில் வளர்ச்சி தருபவர் மகாசாஸ்தா. தட்சிணாமூர்த்தியைப் போல விளங்கும் ஞானசாஸ்தா கல்வி வளர்ச்சிக்கு வித்திடுபவர். சனியின் கெடுபலன்களில் இருந்து பக்தர்களைக் காத்தருள்பவர் தர்மசாஸ்தா. குதிரை மீது காட்சியளிக்கும் வீரசாஸ்தா கைகளில் ஆயுதம் ஏந்தி தீயவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாப்பார். சாஸ்தாவை அஷ்ட சாஸ்தாவாகக் கருதி வழிபடுபவர்க்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

ஹரிவராசனம் இயற்றியவர் பூஜித்த ஐயப்பன்:
 வேலூர், சோளிங்கர் பாணாவரம் ரோடு லட்சுமிநரசிம்மர் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்மசாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் பங்குனி உத்திரத்தன்று (ஏப்.5) நடக்கிறது. மூலவர் ஐயப்பன் குளத்தூர் சீனிவாச ஐயரால் பூஜிக்கப்பட்டவர். நடை அடைக்கும் போது பாடப்படும் ஹரிவராசனம் தாலாட்டுப் பாடலை இயற்றியவர் இவர். இவருடைய காலத்திற்குப் பிறகு இச்சிலை கேரளம், புனலூரில் நீண்டகாலமாக இருந்தது. பலரும் தங்கள் ஊருக்கு கொண்டு செல்ல முயற்சித்தும் பயனில்லை. ஐயப்ப பக்தரான சோளிங்கர் டாக்டர் தனசேகரன் முயற்சியால், சிலை சோளிங்கருக்கு கொண்டு வரப்பட்டு கோயில் கட்டப்பட்டது. தர்மசாஸ்தா, மகாகணபதி, பகவதி விக்ரஹங்களும் உள்ளன. ஏப்.5 அதிகாலை 4-5 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில் பிரதிஷ்டையும், காலை 8.30- 9.30க்குள் கும்பாபிஷேகமும் நடக்கும்.

யாகத்தீயில் எழுந்த சாஸ்தா:
தசரதர் புத்ரகாமேஷ்டியாகம் செய்தபோது யாக குண்டத்தில் இருந்து யுகபுருஷன் ஒருவர் வந்தார். அவரை, "மஹத்பூதம் என்றும் வால்மீகி வர்ணித்துள்ளார். இவரே குழந்தை வரம் அருளும் மாணிக்கபாத்திரத்தை (பாயாச பாத்திரம்) கையில் ஏந்தி வந்தார். அந்த மஹத்பூதமே சாஸ்தா தான். இதனால் தான் சாஸ்தாவுக்கு "பூதநாதன், பூதத்தான் என்ற பெயர்கள் உள்ளன. ராமதரிசனம் பெற்ற சபரியன்னைக்கு முக்தி வழங்கியதும் சாஸ்தாவே. துவாபர யுகத்தில் அரக்குமாளிகையில் சிக்கிய பாண்டவரைக் காப்பாற்றியவர் சாஸ்தா என்றொரு செவிவழிக் கதையுண்டு. அர்ஜுனனின் வீரத்தை பரீட்சை செய்ய வேடுவனாக எழுந்தருளினார் சிவன். இருவருக்கும் இடையே பிரச்னையை உண்டாக்க சாஸ்தாவே முள்ளம்பன்றி ஒன்றை உசுப்பி விட்டார். இதன் மூலம், அர்ஜுனன் சிவபெருமான் அருள்பெற்றதோடு வெற்றி தரும் ஆயுதமான பாசுபதாஸ்திரத்தை பெற்றான். இந்த வரலாறு சிதம்பரம் அருகே உள்ள உசுப்பூர் சாஸ்தாகோவில் தலவரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

முருகனுக்கும் முந்தியவர்:
முருக வழிபாட்டுக்கும் முந்தியதாக சாஸ்தா வழிபாடு கருதப்படுகிறது. கந்தபுராணத்தில் இதற்கான ஆதாரம் உள்ளது. சூரபத்மனுக்கு அஞ்சிய தேவேந்திரன், பூலோகத்திலுள்ள வேணுபுரத்தில் (சீர்காழி) மனைவி சசிதேவியோடு மறைந்து வாழ்ந்தான். கைலாயம் சென்று சிவனிடம் முறையிடுவதற்காக தேவர்கள் இந்திரனை அழைத்துச் சென்றனர். தனியே இருந்த சசிதேவிக்கு பாதுகாப்பாக சாஸ்தாவை நியமித்தார். சூரபத்மனின் தங்கை அஜமுகி, சசியைத் துன்புறுத்த வேணுவனம் வந்தாள். அப்போது அவளை சாஸ்தா விரட்டியடித்தார். இதில் இருந்து முருகன் அவதரிப்பதற்கு முன், சாஸ்தா வழிபாடு இருந்ததை அறிய முடிகிறது.

சாஸ்தா பெயருடன் சங்ககாலப் புலவர்கள்


சாஸ்தா வழிபாடு சங்ககாலத்திலேயே இருந்துள்ளது. "ஐயன் என்பது சாஸ்தாவைக் குறிக்கும் சொல். அதோடு"ஆர் என்னும் விகுதி சேர்த்து "ஐயனார் என்று வழங்கினர். கிராமப்புறங்களில் சாஸ்தாவை "சாத்தன் என்று கூறுவர். சங்கப்புலவர்கள் பலரின் பெயர்களில் "சாத்தன் இடம்பெற்றுள்ளது. பாண்டியன் கீரன் சாத்தன், அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன், ஒக்கூர் மாசாத்தியார், பிரான் சாத்தனார், பெருந்தோள் குறுஞ்சாத்தன், மோசி சாத்தனார், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் அனைவரும் சாஸ்தாவின் பெயரையே கொண்டிருந்தனர். இதில் ஒக்கூர் மாசாத்தியார் மட்டும் பெண் புலவர். சாத்தன் என்ற சொல்லின் பெண்பாலான "சாத்தி என்ற பெயரை இவர் கொண்டிருந்தார்.

அவன் மட்டுமே ஆண்மகன்:
 வீரமில்லாத ஒருவனை "நீயெல்லாம் ஒரு ஆண்மகனா? என்று கேட்பது வழக்கம். உண்மையில், முருகன் மட்டுமே ஆண்மகன், மற்றவர்களெல்லாம் பெண்மகன் என்கிறார் வாரியார். காரணம், முருகன் மட்டுமே தாயின் சம்பந்தமில்லாமல், தந்தை சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். மற்ற எல்லாருமே தாயின் சம்பந்தத்துடன் பிறந்தவர்கள். எனவே, அவர்கள் "பெண்மகன் ஆகிறார்கள்.

நீலக்கடலில் முருகன்:
 இளஞ்சூரியன் நீலக்கடலில் இருந்து தினமும் எழுகிறான். இக்காட்சியைக் காணும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில், முருகனே சூரியனாக எழுந்தருள்வதாகக் குறிப்பிடுகிறார். கடல் மயில் வாகனம். அதன் நீலவண்ணம் தோகை. அதில் வரும் சூரியன் செக்கச் சிவந்தவனான முருகன். சூரியஒளி பரவியதும் உலக இருள் மறைகிறது. அதுபோல முருகனின் அருளால் அறியாமை இருள் மறைந்து ஞானஒளி எங்கும் பரவுகிறது என்று அவர் வர்ணிக்கிறார்.

பக்தியுள்ள கணவர் கிடைக்க:
தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

கால் கடுக்க நிற்கும் கருணை: பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில் ஆறுகால பூஜை நடக்கும். இதில் உச்சிக்காலம் (மதியபூஜை) முடிந்ததும் நடை சாத்தப்பட்டு, மாலையில் திறப்பர். ஆனால், அதிகாலை முதல் இரவு வரை நமக்காக நடையே அடைக்காமல், கருணையோடு கால்கடுக்க நின்றருள் புரிகிறான் பழநி முருகன். ஞானப்பழமாய் நிற்கும் அப்பெருமானின் நாமத்தைச் சொல்வதும், காதால் கேட்பதும் கூட நன்மையளிக்கும் என்று அருளாளர்கள் போற்றுகின்றனர். நெஞ்சமே! தஞ்சம் ஏதுநமக்கினியே என்று கந்தர் அலங்காரம் பழநியப்பனைக் குறிப்பிடுகிறது.  பங்குனி உத்திரத்தன்று இங்கு நடக்கும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மொட்டையாண்டி பழநியாண்டி என்றெல்லாம் இப்பெருமானை குறிப்பிட்டாலும், இவர் ஜடைமுடியோடு இருப்பதை அபிஷேக காலத்தில் தரிசிக்க முடியும். பழநி தலபுராணமும், முருகன் குடுமியோடு இருக்கும் காட்சியைப் போற்றுகிறது. சிவபெருமானின் அம்சமாகத் திகழும் இவர், அபிஷேகத்தால் மனம் குளிர்ந்து அருள்வதாகக் கூறுகின்றனர். சேரமன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால், கேரளமக்கள் பெருமளவில் வருகின்றனர். சபரிமலை செல்பவர்களும் இவரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பாம்புக்காவடி எடுத்தது எப்படி?

முருகனுக்கும் பாம்புக்கும் தொடர்புண்டு. பாம்பைக் கண்டால் "சுப்பா ஓடிப்போ! சுப்புராயா ஓடிப்போ! என்று சொல்லும் வழக்கம் கர்நாடகாவில் உண்டு. கர்நாடகத்தில் குக்கே சுப்பிரமணியர் நாகப்பாம்பின் அம்சமாக வணங் கப்படுகிறார். தமிழகத்திலும் பாம்பை காவடியில் வைத்து, சர்ப்பக்காவடியாக நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்தது. சர்ப்பக்காவடிக்குரிய விரதம் கடுமையானது. ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் சென்று ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்வர். முருகன், அந்த பக்தரின் கனவில் தோன்றி பாம்பிருக்கும் புற்றைச் சுட்டிக்காட்டுவார். அந்த புற்றுக்குள் இருக்கும் பாம்பைப் பிடித்து பச்சை மண் பாத்திரத்தில் இடுவர். அதனை காவடியாகக் கட்டி, திருச்செந்தூருக்கு சுமந்து செல்வர். வள்ளி குகை அருகில் மண்சட்டியோடு விட்டு விடுவர். பாம்பு அதிலிருந்து வெளியேறிச் சென்றபின், செந்தில் முருகனைத் தரிசிப்பர். இப்போது, சர்ப்பக்காவடி எடுக்கும் வழக்கம் இல்லை.

காவடி வழிபாடு!

பங்குனி உத்திரம் என்றாலே காவடி வழிபாடுதான் நினைவுக்கு வரும். முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பதைப் பற்றி ஒரு புராணக்கதை உண்டு. அகத்தியர் கந்தகிரியில் - சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைகளைச் சிவ - சக்தியராகக் கருதி பூஜித்து வந்தார். அவற்றை அவர் பொதிகை மலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு முருகப் பெருமானின் அனுமதிபெற்று, அந்த மலைகளை எடுத்து வருமாறு இடும்பன் என்பவனைப் பணித்தார். இடும்பன் தன் மனைவி இடும்பியின் துணையுடன் பூர்ச்சவனத்தை அடைந்தான். அங்கு பிரம்மதண்டமும் அஷ்ட நாகங்களும் அவனிடம் வந்தன. அஷ்ட நாகங்களால் உறிகளைச் செய்து, பிரம்ம தண்டத்தில் கோத்து இடும்பன் ஒரு காவடியைக் கட்டினான். மூலமந்திரத்தை உச்சரித்தபடியே அவன் மலைகளை எடுத்துக் காவடியில் வைத்தான். சுமந்து வரலானான். இடும்பன் திருவாவினன் குடிக்கு (பழநி) வந்தபோது மலைகள் மிகவும் கனத்தன. அதனால் காவடியைக் கீழே இறக்கினான். இளைப்பாறினான். இடும்பி கொடுத்த உணவுகளை உண்டான். மீண்டும் காவடியைத் தூக்க முனைந்தான். முடியவில்லை. அப்போது சிவகிரியில், குராமரத்தடியில் குமரன் நிற்பதை கண்டான். மலைகள் எடுக்க முடியாதபடி அவை கனப்பதற்குக் காரணம் அந்தச் சிறுவனே என்று இடும்பன் கருதி, அவனுடன் போரிட்டான், மாண்டான். இடும்பி அழுதும், தொழுதும் குமரனிடம் வேண்டினாள். முருகன் அருளால் இடும்பன் மீண்டும் உயிர் பெற்று எழுந்தான். முருகனை வணங்கி நின்றான். சிவகிரி, சக்திகிரிகளைக் காவடியில் சுமந்து வந்து முருகனது அருளைப் பெற்றான் இடும்பன். இவனைப் போல காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கும் அருள் தருவதாக அருளினான் முருகன். அதனால்தான் பக்தர்கள் முருகனருளை வேண்டி பங்குனி உத்திரத்தன்று பலவித காவடிகளை பக்தியுடன் ஏந்தி வந்து வழிபடுகின்றனர்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer