Saturday, 28 March 2015

இலை விபூதியின் மகிமை

இலை விபூதியின் மகிமை

 
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"

 பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."

ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?

விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.

இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.

இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.

தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.

ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
 ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.

அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.

"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.

"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.

விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."

என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer