Friday, 7 October 2016

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

பத்திரகாளியம்மன் திருத்தாலாட்டு

1. அப்பம் அவல்விரும்பும் ஆனை முகன் அடியார்
ஒப்பரிய நலம்சேர் உளமென் உயர்தொட்டில்
இப்போ துனக்காக இங்கே விடுதந்தார்
செப்பரிய செல்வியே தாலேலோ
சிரவையூர் நாயகியே தாலேலோ.

2. இலகு தமிழ் இறையாம் எம்முருகன் தன்அடியார்
அலகில் மனமென்னும் அணிசேர் மணித்தொட்டில்
திலகநுதலா யுனக்குத் தேர்ந்து விடுதந்தார்
உலகு கொருதாயே தாலேலோ
உயர்சிரவை நாயகியே தாலேலோ.

3. தண்டாயுதபாணிச் சாமி அடியார்கள்
நண்பார் மனமென்னும் நலஞ்சேர் நற்தொட்டில்
பண்பாய் அமைத்துப் பாங்காய் விடுதந்தார்
விண்ணோர் பணிதேவீ தாலேலோ
வியன்சிரவை நாயகியே தாலேலோ

4. குன்றமாம் ரத்னகிரிக் குமரன் அடியார்கள்
பொன்றா மனமென்னும் புகழ்சேர் பூந்தொட்டில்
இன்றைக் கணிபூட்டி எழிலாய் விடுதந்தார்
என்றைக்கும் தாயேநீ தாலேலோ
எம்சிரவை நாயகியே தாலேலோ.

5. பொடியார் திருமேனிப் பொன்னம்பல வாணன்
அடியார் மனமென்னும் அன்புத் திருத்தொட்டில்
வடிவாம் பிகையுனக்கே வகையாய் விடுதந்தார்
முடியா முதலே தாலேலோ
முதற்சிரவை நாயகியே தாலேலோ

6. திருமண் அணிநெற்றித் திருமால் அடியார்கள்
இருகண் நிறைவாக இலங்கும் எழில்தொட்டில்
பெருகும் மனத்தொடு பெய்து விடுதந்தார்
உருகும் மனத்துமையே தாலேலோ
ஒண்சிரவை நாயகியே தாலேலோ

7. வெள்ளைக் கமலத்தாய் விரவும் அடியார்கள்
தெள்ளத்தெளியப் பாத்தொடுத்த செழுந்தொட்டில்
உள்ளத்தால் ஆக்கி உனக்கே விடுதந்தார்
ஒள்ளியசீர்க் காளியம்மை தாலேலோ
ஒளிர்சிரவை நாயகியே தாலேலோ.

8. செல்வத்திருமடந்தை சீரார் அடியார்கள்
நல்ல மனமென்னும் நயஞ்சேர் நறுந்தொட்டில்
வல்லி உனக்கே வகையாய் விடுதந்தார்
எல்லையில் கருணையாய் தாலேலோ
எழிற்சிரவை நாயகியே தாலேலோ.

9. வில்லார் நுதல்வீர மாச்சி அடியார்கள்
வெல்லும் மனமென்னும் விரைசேர் மலர்த்தொட்டில்
மல்லிகையாற்கட்டி மகிழ்ந்து விடுதந்தார்
தில்லை நடத் தாய் தாலேலோ
திருச்சிரவை நாயகியே தாலேலோ

10. வடகிழக்குத் திக்கில் வளர் மாரித் தாயடியார்
திடஞ்சேர் மனமென்னும் சீரார் பணித்தொட்டில்
படமார் அணிபூட்டிப் பாங்காய் விடுதந்தார்
அடல்மிகும் எம்தாயே தாலேலோ
அணிச்சிரவை நாயகியே தாலேலோ

Wednesday, 28 September 2016

திருச்செந்தூர்_கடலில்_நடந்த_அதிசயம்

#திருச்செந்தூர்_கடலில்_நடந்த_அதிசயம்

★ஒருமுறை திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள், அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர்.
மரக்கலம் சிறிது தூரம் கடலில் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியது.

★கடலும் கொந்தளித்தது. மரக்கலத்தில் இருந்த முருகப்பெருமானின் விக்கிரகத்தால்தான் இப்படி நிகழ்கிறது என்பதை உணர்ந்த அவர்கள், அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசினர். மழையும் நின்றது. கடல் கொந்தளிப்பு அடங்கியது.

★அக்காலத்தில் திருநெல்வேலியை தலைநகராகக் கொண்டு தென்பாண்டிய நாட்டை, மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் தீவிர பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார்.

★அன்றிரவு அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலில் தனது விக்கிரகம் கிடக்கும் இடத்தை அடையாளம் காண்பித்தார்.
அதாவது, சிலை கடலுக்குள் வீசப்பட்டு கிடக்கும் இடத்தின் மேலே ஒரு கருடன் பறக்கும், சிலை உள்ள இடத்தில் ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்பதை உணர்த்தினார்.

★மறுநாள் கடலுக்குள் மரக்கலத்தில் பயணித்த வடமலையப்பன், ஓரிடத்தில் கருடன் பறப்பதையும், அந்த பகுதியில் கடல்நீரில் எலுமிச்சம் பழம் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்து, அந்த இடத்தில் சிலையை தேடினார். நீருக்குள் வீசப்பட்டுக் கிடந்த சிலை மீட்கப்பட்டது.

★இந்த சம்பவக் காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டு வைக்கப்பட்டுள்ளதை திருச்செந்தூர் கோவிலுக்கு இப்போது சென்றாலும் பார்க்கலாம்.

#தகவல் : மாலை மலர்

Sunday, 21 August 2016

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்

#நமக்கு_தெரிந்ததும்_தெரியாததும்

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .
2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .
3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது
4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .
5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .
6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது
7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .
8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .
9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

#பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது ...

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.
2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)
3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .
4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.
5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.
6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .
7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது
8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .
9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .
10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது
11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

Wednesday, 17 August 2016

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

பத்திரகாளியம்மன் ஊஞ்சல்

1. தந்திமுகன் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
தக்கன்தன் குமரிநீர் ஆடீர் ஊஞ்சல்
செந்தமிழர் மனமென்னும் தொட்டில் தன்னில்
சேர்ந்திருக்கும் உமையம்மை ஆடீர் ஊஞ்சல்
திந்திமென முழவொலிக்கத் தில்லை மன்றில்
தேர்ந்தநடம் புரிகின்றீர் ஆடீர் ஊஞ்சல்
பந்தமற எமைக்காக்கும் சிரவை யூரில்
பத்ரகாளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

2. வேலவனின் தாயாரே ஆடீர் ஊஞ்சல்
வெள்ளிமலை வீற்றிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
ஞாலமெல்லாம் புகழாறு முகவன் கையில்
ஞானவேல் வடிவானீர் ஆடீர் ஊஞ்சல்
சீலமுடன் செம்மைசேர் வாழ்வளிக்கும்
திலகநுதல் தாயார்நீர் ஆடீர் ஊஞ்சல்
காலமெல்லாம் சிரவைமா நகரம் காக்கும்
காளிஉமை சங்கரிநீர் ஆடீர் ஊஞ்சல்

3. கொன்றைமணி செஞ்சடையான் செம்பா கத்தைக்
கோலமுறக் கொண்டருள்வீர் ஆடீர் ஊஞ்சல்
மின்றயங்கும் சிற்றிடையீர் ஆடீர் ஊஞ்சல்
மீனாட்சி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்
நின்றியங்கி உலகத்தை ஆட்டுவிக்கும்
நீலி, திரிசூலி, பரை, ஆடீர் ஊஞ்சல்
மன்றிலங்கும் நாயகிநீர் ஆடீர் ஊஞ்சல்
மாகாளி சிரவையுளீர் ஆடீர் ஊஞ்சல்

4. நாமணக்க உம்புகழை நாங்களெல்லாம்
நலம்பாடி ஆடிடவே ஆடீர் ஊஞ்சல்
பாமணக்க மக்கள்மனப் பயிர்வா டாமல்
பாங்காய்நீர் வரந்தந்தீர் ஆடீர் ஊஞ்சல்
பூமணக்கக் கனிகனியக் கோயில் எல்லாம்
பொலிவடையச் செய்தவரே ஆடீர் ஊஞ்சல்
தேமணக்கும் அதுபோலச் சிரவை யூரைச்
செய்திடவே வேண்டும் எம்தாய் ஆடீர் ஊஞ்சல்

5. அருள்சுரக்கும் நீரூற்றே ஆடீர் ஊஞ்சல்
அடியவரைக்காக்கும் அம்மை ஆடீர் ஊஞ்சல்
பொருள்சுரக்கும் செந்திருவே ஆடீர் ஊஞ்சல்
புனிதநலத் தாயேநீர் ஆடீர் ஊஞ்சல்
மருள்சுரக்கும் மனம்தேர அஞ்சேல் என்று
வாழ்வளிக்கும் அன்னைநீர் ஆடீர் ஊஞ்சல்
தெருள்சுரக்கச் சேய் யானும் உம்மை பாடச்
சிரவைநகர் காத்தருள்வீர் ஆடீர் ஊஞ்சல்

6. அரும்பொருளே ஆரணங்கே ஆடீர் ஊஞ்சல்
அங்கயற்கண் நாயகியே ஆடீர் ஊஞ்சல்
வரும்பகைகள் மாற்றிடுவீர் ஆடீர் ஊஞ்சல்
வளர்காதல் பெண்ணுமையே ஆடீர் ஊஞ்சல்
பெரும்பகையைத் தீர்த்திடுவீர் ஆடீர் ஊஞ்சல்
பிஞ்ஞகனார் பங்கிருப்பீர் ஆடீர் ஊஞ்சல்
சுரும்பாரும் பூங்குழலீர் ஆடீர் ஊஞ்சல்
சொற்சிரவை நகருடையீர் ஆடீர் ஊஞ்சல்

7. விளங்குசிவ சங்கரியே ஆடீர் ஊஞ்சல்
வீரவிளையாட் டுடையீர் ஆடீர் ஊஞ்சல்
களங்கமிலா தெம்மையெல்லாம் காக்கும் தாயே
கன்னி, ஒளிர்சிவகாமி, ஆடீர் ஊஞ்சல்
குளங்காவும் சோலைகளும் வானை முட்டும்
கோபுரமும் ஒளிர்பெறவே விளங்கவேண்டும்
வளம்பலவும் சேர்சிரவை நகரந் தன்னில்
வளர்காளி அம்பிகையே ஆடீர் ஊஞ்சல்

8. ஓங்காரத் துட்பொருளே ஆடீர் ஊஞ்சல்
உத்தமியே மெய்த்தவமே ஆடீர் ஊஞ்சல்
ஆங்காரம் தீர்த்திடுவிர் ஆடீர் ஊஞ்சல்
ஆதிபரா பரையேநீர் ஆடீர் ஊஞ்சல்
தீங்கெம்மை அணுகாமல் காத்து நிற்கும்
திரிபுரைநற் சிவசக்தி ஆடீர் ஊஞ்சல்
பாங்காகச் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

9. அனைநடை யுடையவரே ஆடீர் ஊஞ்சல்
அபிராமி, புகழ்நாமி, ஆடீர் ஊஞ்சல்
மின்னிடையீர் என் அன்னை ஆடீர் ஊஞ்சல்
விழிக்கடையால் அருள்பவரே ஆடீர் ஊஞ்சல்
பொன்பொருளும் தருபவரே ஆடீர் ஊஞ்சல்
புவிஏழும் பூத்தவரே ஆடீர் ஊஞ்சல்
பன் நெடுநாள் சிரவையூர்ப் பாதுகாக்கும்
பத்ரகாளி அம்பிகைநீர் ஆடீர் ஊஞ்சல்

10. விரைமலர்க் குழல்வல்லி ஆடீர் ஊஞ்சல்
விமலிகற் பகவல்லி ஆடீர் ஊஞ்சல்
மரைமலர்ப் பதவல்லி ஆடீர் ஊஞ்சல்
மாதுளம்பூ நிறவல்லி ஆடீர் ஊஞ்சல்
வரையினிடை வளர்வல்லி ஆடீர் ஊஞ்சல்
வண்டாரும் தார்வல்லி ஆடீர் ஊஞ்சல்
சிரவையூர்த் தென்றிசையில் நின்று காக்கும்
சிற்சத்தி பராசத்தி ஆடீர் ஊஞ்சல்

வாழி வெண்பா

வாழ்க சிரவைநகர் வாழ்பத்ர காளிபுகழ்
வாழ்க அவர்பாதம் வாழ்த்துமன்பர் - வாழ்கவே
வையகமும் வண்தமிழும் வான்மழையும் மாதவரும்
சைவநெறி யாவும் தழைத்து

Wednesday, 27 July 2016

64 சிவ வடிவங்கள் image

64 சிவ வடிவங்கள்
1.லிங்கமூர்த்தி 2. இலிங்கோற்பவ மூர்த்தி
3. முகலிங்க மூர்த்தி 4. சதாசிவ மூர்த்தி
5. மகா சதாசிவ மூர்த்தி 6. உமா மகேச மூர்த்தி
7. சுகாசன மூர்த்தி 8.உமேச மூர்த்தி
9. சோமாஸ் கந்த மூர்த்தி 10. சந்திரசேகர மூர்த்தி
11. இடபாரூட மூர்த்தி 12.இடபாந்திக மூர்த்தி
13. புஜங்கலளித மூர்த்தி 14. புஜங்கத்ராச மூர்த்தி
15. சந்த்யாந்ருத்த மூர்த்தி 16. சதா நிருத்த மூர்த்தி
17. சண்ட தாண்டவ மூர்த்தி 18. கங்காதர மூர்த்தி
19. கங்கா விசர்ஜன மூர்த்தி 20. திரிபுராந்தக மூர்த்தி
21. கல்யாண சுந்தர மூர்த்தி 22. அர்த்த நாரீஸ்வர மூர்த்தி
23. கஜயுக்த மூர்த்தி 24. ஜ்வராபக்ன மூர்த்தி
25.சார்த்தூலஹர மூர்த்தி 26. பாசுபத மூர்த்தி
27.கங்காள முர்த்தி 28. கேசவார்த்த மூர்த்தி
29. பிட்சாடன மூர்த்தி 30. சிம்ஹக்ன மூர்த்தி
31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி 32. தட்சிணாமூர்த்தி
33. யோக தட்சிணாமூர்த்தி 34. வீணா தட்சிணாமூர்த்தி
35. காலந்தக மூர்த்தி 36. காமதகன மூர்த்தி
37. இலகுளேஸ்வர மூர்த்தி 38. பைரவ மூர்த்தி
39. ஆபத்தோத்தாரண மூர்த்தி 40. வடுக மூர்த்தி
41. சேத்திரபால மூர்த்தி 42. வீரபத்திர மூர்த்தி
43. அகோர அத்திர மூர்த்தி 44. தட்சயக்ஞஷத முர்த்தி
45. கிராத மூர்த்தி (வேட மூர்த்தி) 46. குரு மூர்த்தி
47. அசுவாருட மூர்த்தி 48. கஜாந்திக மூர்த்தி
49. சலந்தரவத மூர்த்தி 50. ஏகபாதத்ரி மூர்த்தி
51. திரிபாதத்ரி மூர்த்தி 52. ஏகபாத மூர்த்தி
53. கௌரி வரப்ரத மூர்த்தி 54. சக்கர தான மூர்த்தி
55. கௌரிலீலா சமன்வித மூர்த்தி 56. விசாபகரண மூர்த்தி
57. கருடன் அருகிருந்த மூர்த்தி 58. பிரம்ம சிரச்சேத மூர்த்தி
59. கூர்ம சம்ஹார மூர்த்தி 60. மச்ச சம்ஹார மூர்த்தி
61. வராக சம்ஹார மூர்த்தி 62. பிரார்த்தனா மூர்த்தி
63. இரத்த பிட்சா பிரதான மூர்த்தி 64. சிஷ்ய பாவ மூர்த்தி
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer