Friday, 25 April 2014

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்

ஞாயிற்றுக்கிழமை: (சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை: (கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை: (மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

புதன்கிழமை: (மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை: (தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை: (ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

சனிக்கிழமை: (மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும். கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம். தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்: ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்: துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார். எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:

சித்திரை அம்சுமான்  சண்ட பைரவர்
வைகாசி தாதா  ருரு பைரவர்
ஆனி ஸவிதா  உன்மத்த பைரவர்
ஆடி அரியமான்  கபால பைரவர்
ஆவணி விஸ்வான்  ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன்  வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன்  ÷க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா  பீஷண பைரவர்
மார்கழி மித்திரன்  அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு  குரோதன பைரவர்
மாசி வருணன்   ஸம்ஹார பைரவர்

பங்குனி பூஷா   சட்டநாத பைரவர்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer