Sunday, 21 September 2014

மகாபாரதம் பகுதி 011


மகாபாரதம் பகுதி-11

அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருளில் பிறந்ததால் அது கரிய நிறமுடையதாகக் காணப்பட்டது. அந்தக் குழந்தை தான் வியாசன். பிறக்கும் போதே அவனுக்கு ஜடாமுடி இருந்தது. பிறக்கும் போதே அவன் என்னிடம் பேசினான். அம்மா! நீ மீண்டும் கற்பு நிலையை அடையப் போகிறாய். அப்படியிருக்க நான் உன்னோடு இருக்க இயலாது. நான் தவம் முதலானவை இயற்றிக் கொண்டு கானகங்களில் வசிப்பேன். நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போது உன் முன் தோன்றுவேன். உனக்கு ஏதேனும் சிரமமான சூழ்நிலைகள் வந்தால், என்னை அழை! என்று சொல்லி விட்டு மறைந்து விட்டான். இன்று அவன் பெரியவனாக இருப்பான். அவனை நான் வரவழைக்கிறேன். அம்பிகா, அம்பாலிகாவுக்கு அவன் அத்தான் முறை ஆகிறது. முறை பிறழாமல், அரச தர்மத்தை மீறாமல், அவர்களை குழந்தை பெறச் செய்வோம், என்றாள் யோஜனகந்தி. பீஷ்மர் மகிழ்ந்தார். தாயே! இறைவன் யாரையும் கைவிடுவதில்லை. ஒரு பாதை அடைபட்டால், இன்னொரு பாதையைத் திறந்து விடுவான் என்பது இதுதான் போலும். கவலையை விடுங்கள்! நீங்கள் வியாச மாமுனிவரை அழையுங்கள். நம் கவலை நீங்கும், என்றார். யோஜனகந்தி அந்தக் கணமே, மகனே வியாசா, வா என் செல்வமே, என்றாள். மிகப்பெரிய ஜடாமுடி தரையில் புரள, கன்னங்கரிய நிறத்துடன், ஆஜானுபாகுவான ஒரு உருவம் அவள் முன்னால் வந்தது. என்னைப் பெற்றவளே, வணக்கம்.

உத்தரவிடுங்கள் தாயே! கட்டளைக்கு காத்திருக்கிறேன், என்று சாஷ்டாங்கமாக  அன்னையின் பாதத்தில் விழுந்தது அந்த உருவம். ஆம்... வியாசர் வந்து விட்டார். மகனை அள்ளியணைத்து உச்சி முகர்ந்தாள் யோஜனகந்தி. மகனே! என் நிலையை நீ அறிவாய். முக்காலமும் உணர்ந்த உனக்கு, எல்லாம் தெரிந்த உனக்கு எதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாட்டுக்கு வாரிசு வேண்டும். பீஷ்மனால் வாரிசுகளைத் தர இயலாத நிலையில் நீ தான் அம்பிகா, அம்பாலிகாவுடன் கூடி குழந்தைகளைப் பெற்று தர வேண்டும், என்றாள். தாய் சொல்லைத் தட்டவில்லை வியாசர். அம்பிகா, அம்பாலிகாவிடமும் நிலைமையை எடுத்துச் சொல்லி, வியாசருடன் மகிழ்ந்திருக்க சம்மதம் பெற்றாள் யோஜனகந்தி. அன்றிரவில், அம்பிகையும், அம்பாலிகாவும் பஞ்சணையில் படுத்திருக்க வியாசர் உள்ளே நுழைந்தார். அவ்வளவு நேரமும் அவரைப் பார்க்காத அந்தப் பெண்கள் அதிர்ந்து விட்டனர். வியாசர் என்றால் செக்கச்சிவந்த கோவைப்பழமாக இருப்பார் என நினைத்தோம். குறைந்த பட்சம் ஒரு இளமைத் தோற்றமாவது இருக்கும் என நினைத்தோம். இதென்ன ஜடாமுடியும், தாடியுமாய்... ஐயோ! சுந்தரன் ஒருவன் வருவான் என பார்த்தால், கோரத்தின் சொரூபமாய் ஒருவன் வருகிறானே. வியாசர் அம்பிகாவை நெருங்கினார். அவளை அள்ளி அணைத்தார். அவளோ அவரது உருவத்தைக் காண சகியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். வேண்டா வெறுப்பாக தன்னை அவரிடம் ஒப்படைத்தாள். அடுத்து அம்பாலிகா விடம் சென்றார் வியாசர். அவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுத்தாள். உடலில் உள்ள ரத்தமெல்லாம் வற்றி வெளுத்து விட்டது.


அந்த நிமிடமே அவர்கள் குழந்தைகளைப் பெற்றனர். ரிஷிகளுக்கு உடனடியாக குழந்தைகளைக் கொடுக்கும் சக்தி உண்டு என்கின்றன நமது இதிகாசங்களும், புராணங்களும். கந்த புராணத்தில் காஷ்யப முனிவர் அசுரக் குழந்தைகளை உடனுக்குடன் உருவாக்கியதாக தகவல் இருக்கிறது. மகாபாரதத்தில் வியாசர் பிறந்ததும் அப்படியே. அதுபோல், இப்போதும் குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். குழந்தைகளை ஆசையோடு எடுத்தார் வியாசர். அந்தக் குழந்தையை அசைக்கவே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. பத்தாயிரம் யானைகளை ஒரு சேர தூக்க முடியுமா? அவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தது அந்தக் குழந்தை. அதன் கண்களைப் பார்த்த வியாசர், இது பார்வையில்லாமல் பிறந்திருக்கிறதே, பிறந்தும் பயனில்லையே. இந்தக் குழந்தையால் எப்படி நாடாள முடியும்? என்றவராய், அம்பாலிகாவின் குழந்தையைப் பார்த்தார். அதன் முகம் வெளுத்துப் போயிருந்தது. மற்றபடி குறைகள் ஏதுமில்லை. இதனால் ஆறுதலுடன் வெளியே வந்து, யோஜனகந்தியிடம் நடந்ததை விவரித்தார். பீஷ்மர் தன் தாயிடம், அம்மா! நாடாள நல்லதொரு புத்திரன் வேண்டும். இன்னொரு முறை முயற்சித்துப் பார்ப்போம், என்றார். மூத்தவள் அம்பிகாவுக்கு பார்வையற்ற பிள்ளை பிறந்துள்ளதால், நல்ல குழந்தைக்காக அவளையே அனுப்பி வைக்க எண்ணினர். அவளும் சம்மதிப்பது போல நடித்தாள். ஆனால், துறவியைப் போல் கோரமாய் தோற்றமளிக்கும் இவனுடன் இன்னொரு முறை செல்வதா என வெறுப்படைந்து, தன்னைப் போலவே அலங்கரித்து தன் தோழிப் பெண் மாதுரியை அனுப்பிவிட்டாள். இருளில் அவளை வியாசர் அடையாளம் காணவில்லை. ஒருவேளை அவருக்கே இது தெரிந்திருந்தாலும் கூட, எது விதிக்கப்பட்டதோ அதன்படியே நடந்து கொண்டார். அவள் அந்த மகானை அடைவதை தன் பாக்கியமாகக் கருதி, நல்ல மனநிலையுடன் தன்னை ஒப்படைத்தாள். அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பேரழகுடன் விளங்கினான். வியாசரைப் போல் கருப்பாக இல்லாமல், தாயைப்போல் சிவப்பாய் இருந்தான். தாம்பத்ய வாழ்க்கையில் மனமொத்த நிலை வேண்டும். சண்டை போட்டுக் கொண்டோ, குடித்து விட்டோ, விருப்பமில்லாமலோ, இருவரில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில் கட்டாயத்துக்காகவோ உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைகள் உருவத்திலும், குணத்திலும் மாறுபாடு கொண்டதாக இருக்கும். கெட்ட குணமுடையவர்களை உருவாக்குவதே பெற்றவர்கள் தான்.வியாசர் விடை பெற்றார். மீண்டும் தன் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தாயிடம் வேண்டினார். முதல் குழந்தைக்கு திருதராஷ்டிரன், அடுத்த குழந்தைக்கு பாண்டு, மூன்றாவது குழந்தைக்கு விதுரன் என பெயர் சூட்டினர்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer