மகாபாரதம்
பகுதி-22
ஏகலைவா! நீ என் மாணவனாக இருக்க
அனுமதிக்கிறேன். நான் நேரடியாக உனக்கு பயிற்சி கொடுக்க
அவகாசமில்லை. எனினும், நீ என் மாணவன்
தான். என்னை மானசீக குருவாகப் பாவித்து பயிற்சி எடுத்து வா!
அதன்பின் உனக்கு தேர்வு வைக்கிறேன், என்றார்.
ஏகலைவனுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவன்
காட்டுக்குள் சென்றான். துரோணரைப் போலவே ஒரு பொம்மை செய்தான்.
அந்தப் பொம்மையை தன் குருவாகவே கருதி, பயிற்சி
எடுத்தான். அவனது வித்தை அர்ஜூனனை விட மேம்பட்டதாக இருந்தது.
இதையடுத்து அவன் துரோணரிடம் வந்தான். தேர்வு
வைக்கச் சொன்னான். துரோணர் அவனிடம், என்
அன்பு மாணவனே! உனக்கு தேர்வு வைக்கும் முன்பு, நீ என் முன்னால் எடுத்த பயிற்சிக்கான குருதட்சணையை தந்து விடு, என்றார். என்ன வேண்டும் சுவாமி? என அவன் கேட்க, ஏகலைவா! உன்னிடம்
ஏராளமான பொன் பொருள் கேட்பேன் எண்ணி விடாதே. உன்னிடம்
இருக்கும் ஒன்றைத் தான் கேட்கப் போகிறேன், என்ற துரோணரிடம்,
குருவே! தாங்கள் கேட்பது என்னிடம்
இருக்குமானால், அதை மறுக்காமல் தருகிறேன், இது சத்தியம், என்றான். துரோணர்
சிரித்தார். ஏகலைவா! உன் வலதுகை
பெருவிரலை என்னிடம் கொடு, என்றார் துரோணர். ஏகலைவன் தயக்கமே கொள்ளவில்லை. அவர் கண் முன்னாலேயே
தன் கட்டைவிரலை வெட்டிக் கொடுத்து விட்டான். இதன்பின் தேர்வு
ஆரம்பித்தது. மிக சிறப்பாக அம்பு வீசினாலும் கூட, கட்டைவிரல் இல்லாததால், அர்ஜூனனனைப் போல் அவனால்
முழு சக்தியுடன் அம்பு வீச இயலவில்லை.
துரோணர்
மனதிருப்தி அடைந்தார். அவரது சத்தியமும் பலித்தது. ஒரு மாணவனை
நிராகரித்தோம் என்ற அவப்பெயரும் ஏற்படவில்லை. இந்த நிகழ்வின்
மூலம் பாரதம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத்தருகிறது. ஒரு
மாணவனிடம் சிரத்தை இருந்தால், அவன் ஆசிரியர் இல்லாமலே
பாடங்களைப் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவான் என்பதற்கு இது ஒரு
உதாரணம். நம் மாணவர்களும், பள்ளிக்கு
ஆசிரியர் வரவில்லைல, பாடம் நடத்தவில்லை, புரியவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. சுயமுயற்சியே
வாழ்க்கையை பலமாக்கும் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் உணர வேண்டும். மேலும், ஒருவனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை
காப்பாற்ற இன்னும் சிலர் பாதிக்கப்படுவதனால், அந்த பாதிப்பை
பெரிதெனக் கொள்ளாமல், சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்
என்பதையும் இந்நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது. அதே நேரம்
பாவம் செய்தவர் அதற்குரிய பலனைப் பெற்றே தீர வேண்டும். இன்னும்
சில நாட்களில் துரோணர் இதற்குரிய பலனைப் பெறப் போகிறார். என்ன
பலன் அது? படித்துக் கொண்டே செல்வோமே! குறிப்பிட்ட
நாளில், கவுரவர்களும், பாண்டவர்களும்
யுத்த அரங்கத்தில் கூடினர். துரோணர், கிருபர்,
பீஷ்மர், திருதராஷ்டிரன், அவனது தம்பி விதுரன் என ஏகப்பட்ட முக்கியஸ்தர்கள் அங்கே குவிந்தனர்.
போட்டி துவங்கியது. எல்லாரும் தங்கள் வித்தையை
சிறப்பாகக் காட்டினர். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல
என்ற வகையில் நடந்த போட்டியை, பிரமாதம், பிரமாதம் என மக்கள் புகழ்ந்தனர். சிலர் தேரில் ஏறி
மின்னல் வேகத்தில் செலுத்தி வீரத்தை வெளிப்படுத்தினர். எல்லாருக்குமான
வித்தைகள் முடிந்த வேளையில் துரியோதனனுக்கும், பீமனுக்கும்
கதாயுதப்போர் நடந்தது. இருவரும் கடுமையாக மோதினர். பீமனை துரியோதனனுக்கு பிடிக்காது என்பதால், துரியோதனன்
மிகுந்த ஆக்ரோஷத்துடன் நிஜமாகவே தாக்க ஆரம்பித்தான். பீமன்
என்ன சாதாரணமானவனா! விடாக்கண்டனாயிற்றே! அவனும் துரியோதனனை உதைக்க ஆரம்பித்தான். அந்த
இருவரும் பத்தாயிரம் யானை பலம் கொண்டவர்கள் போல் தாக்கிக் கொண்டனர் என்று
சொல்கிறது வில்லிப்புத்தூரார் பாரதம்.
சற்று
நேரத்தில் இருவரும் போர்விதிகளை மறந்து விட்டு தாறுமாறாக தாக்க ஆரம்பித்தனர். உடனே, துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அவர்களிடையே புகுந்தான். வீரர்களே! இது போர் அல்ல! போட்டி!
போதும், போதும், உங்கள்
விளையாட்டு. இருவரும் வெளியேறுங்கள், என்றான்.
ஒருவரை ஒருவர் முறைத்தபடி இரண்ட மாவீரர்களும் களத்திற்கு வெளியே
சென்றனர். பின்னர் அர்ஜூனன் தன் வித்தையைக் காட்ட ஆரம்பித்த
போது அரங்கமே அதிரும் வகையில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் மக்கள். அதிபயங்கர அஸ்திரங்களை மேலே எய்து, அவற்றின்
உக்கிரத்தை மற்ற அஸ்திரங்களை எய்வதன் மூலம் தணித்தான். இப்படி
கூட்டத்தினர் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஒரு
மாவீரன் தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான். துரோணாச்சாரியார்
முன்னால் சென்றான். அவரது பாதங்களில் பணிந்தான். பெருமானே! நானும், இந்த யுத்த
அரங்கத்தில் என் வில் வித்தையைக் காட்ட விரும்புகிறேன். அனுமதி
கொடுங்கள், என்றான். துரோணர்
தலையசைத்தார். என்ன அதிசயம்! அந்த
வீரன் வில்வித்தையில் அர்ஜூனனை மிஞ்சி விட்டான். அர்ஜூனனின்
வித்தைகள் இவன் வித்தைக்கு முன்னால் தூசு துரும்பாக இருந்தது. ஏகலைவனை அடக்கி அனுப்பி விட்டோம். அந்தப் பாவம்
என்னை இந்த புதிய வீரனின் வடிவத்தில் தாக்குகிறதோ....? துரோணர்
அதிசயித்து போய்விட்டார். அர்ஜூனனும் தனது நிலைக்காக வெட்கப்பட்டான்.
இவ்வளவு அரிய கலைகளை இவன் எப்படி படித்தான்? நமக்கு
இதில் ஏதும் தெரியாதே? அவன் தலை குனிந்து நின்றான். கூடியிருந்த மக்களெல்லாம், அர்ஜூனனை விட புதிய வீரனே
சிறந்தவன் என கொண்டாடினர். இந்த புதிய வீரன் துரியோதனனின்
உயிர் நண்பன். பரிதாபத்திற்குரிய பிறவி. ஒரு தாய் செய்த தவறின் விளைவாக உருவான பிள்ளை. அரண்மனையில்
வளர வேண்டிய இவன், ஒரு தேரோட்டியின் வீட்டில் வளர்கிறான்.
No comments:
Post a Comment