மகாபாரதம்
பகுதி-79
அலம்புசனுக்கும்
அரவானுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. நாக வடிவ அரவானை
ஏதும் செய்ய முடியாததால், மாயையில்
சிறந்த அலம்புசன் கருட வடிவம் எடுத்தான்.
கருடனைக் கண்டால் நாகம் அஞ்சுவது
இயற்கை தானே! அரவான் அதிர்ச்சியடைந்தான்.
தன் பலத்தையெல்லாம் இழந்து நின்ற வேளையில்
இதுதான் சமயமென அவனை வாளால்
வெட்டி வீழ்த்தினான் அலம்புசன். அரவானின் மரணம் கவுரவ சேனைக்கு
புதிய ஆற்றலைத் தந்தது. அரவான் மடிந்தான்,
அலம்புசன் வாழ்க, துரியோதன மாமன்னர்
வாழ்க என்ற கோஷத்துடன், பாண்டவப்
படைகளை உக்கிரத் துடன் தாக்கின கவுரவப்படைகள்.
தாய் வேறானாலும், தன் சொந்த தம்பியாகவே
அரவானைப் பாவித் தவன் அபிமன்யு.
அவன் அரவானின் மரணம் கண்டு கலங்கினான்.
கண்களில் வெள்ளம் பொங்கியது. அதுவே,
கோபத்தால் கனல் நீராக மாற,
அவன் ஆர்ப்பரித்து போரிட்ட கவுரவப்படைகள் மீது
அம்புகளை வாரியிறைத்தான். ஆர்ப்பரித்த கவுரவ படைகளும், அவர்களுக்கு
தலைமை தாங்கிய பலநாட்டு மன்னர்களும்
ஏராளமாக மண்ணில் சாய்ந்தனர். தம்பி
மகனான அரவான் இறந்ததைக் கண்ட
பீமனும் கூட்டத்துக்குள் புகுந்து பலரையும் தூக்கி வீசியே கொன்று
ஆவேசத்தை வெளிப்படுத்தினான்.
அரவான்
மரணத் துக்குப் பழிக்குப்பழியாக எப்படியேனும், துரியோதனப் படையின் முக்கியஸ்தர்கள் சிலரை
அழித்தே தீருவதென கங்கணம் கட்டி முன்னேறினான்.
அவனது முன்னேற்றத்தைக் கண்ட துரியோதனன், தன்
தம்பிமார்களுடன் அவனை எதிர்க்க ஆவேசத்துடன்
ஓடிவந்தான். சற்றும் தாமதிக்காமல், கணநேரத்தில்
தன் வில்லை வளைத்து, பீமன்
அம்பு மழையைப் பொழிந் தானோ
இல்லையோ.... ஆ...ஆ...என்ற
அலறலுடன் ஏழு பேர் சாய்ந்தனர்.
துரியோதனன் இப்படி நடக்குமென கனவிலும்
நினைக்கவில்லை. ஏற்கனவே நடந்த போரில்
எட்டு தம்பிமார்களை இழந்திருந்த அவன், நொடிப்பொழுது நேரத்தில்
மேலும் ஏழு பேரை இழந்தான்.
குண்டலபோசன், தீர்க்கநயனன், குண்டலன், குண்டலதாரன், திம்மவாகு, கனகத்துவஜன், அனாதியக்கன் ஆகியோர் அவர்கள். துரியோதனன்
திகைத்து நின்ற வேளையில், இன்று
நீயும் என்னிடம் அழிந்து போவாய், எனச்
சொல்லி ஆக் ரோஷமாகப் போரிட்
டான். துக்கத்தில் இருந்த துரியோதனனால் பீமனை
சற்றும் எதிர்க்க முடியவில்லை. அவன் தோற்று ஓடிவிட்டான்.
இத்துடன் அன்றையப் போர் முடிந்தது. படைகள்
தங்கள் இருப்பிடம் திரும்பினர். அன்று இரவில் அரவானின்
மரணம் பற்றி பாண்டவர்கள் பேசி
வருந்தினர். கிருஷ்ணர் அவர்களைத் தேற்றினார்.
பாண்டவச்
செல்வங்களே! அரவான் ஏற்கனவே தன்னைக்
காளிக்கு பலியிட்டு இறந்து போனவன் தான்.
அவன் கேட்ட வரத்தால், போர்க்களக்
காட்சிகளைக் காணும் பாக்கியத்தைக் கொடுத்தேன்.
அவன் விதி முடியும் நேரம்
வந்ததும், அவனுக்கு ஆக்ரோஷத்தைக் கொடுத்து சொர்க்கத்திற்கு அனுப்பிவிட்டேன். இறந்தவன் மீண்டும் இறந்தது பற்றி கவலைப்பட
வேண்டாம், என்றார். பாண்டவர்கள் மனம் தேறினர். இதே
போல, கவுரவர்களின் பாசறையில்
துரியோதனன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.
தன் மனஆறுதலுக்குரியவன் நண்பன் கர்ணனே என்பதால்,
அவனை அழைத்து வர உத்தரவிட்டான்.
கர்ணனிடம், நண்பா! பார்த்தாயா! நமது
சகோதரர்கள் பலரை கொடிய பீமன்
கொன்று விட்டான். பீஷ்மரும், துரோணரும் இருக்கும் நமது படையை நினைத்தாலே
வெட்கமாக இருக்கிறது. அவர்களால் போர் செய்ய முடியவில்லை
என்றே நினைக்கிறேன். இந்நிலையில், என்னைக் காக்கும் கருணைக்கடல்
நீ மட்டுமே! என்னைக் காப்பாற்று. நம்
தேசத்தைக் காப்பாற்று, என்றான். கர்ணனுக்கு ஆவேசம் அதிக
மாயிற்று.
நண்பா!
இப்போது வருத்தப்பட்டு என்ன லாபம்? அன்று,
படைகளைப் பிரித்த போது, என்னை
ஒரு கடைநிலை பணியான அர்த்தரத
சேனாதிபதியாக்கி உத்தரவிட்டாரே பீஷ்மர்! அப்போது, அவையில் இருந்த நீ
அடக்கமாகத்தானே இருந்தாய். மேலும், யாரை நீ
நம்பினாயோ, அந்த பீஷ்மரே உன்னைக்
காப்பாற்றுவார். நான் ஏற்கனவே சொன்னபடி,
பீஷ்மர் களத்தில் என்று தோற்றோடுகிறாரோ, அடுத்த
கணமே நான் உன்னருகில் இருப்பேன்.
உன்னைக் காப்பாற்றுவேன். கிருஷ்ணரையும், பாண்டவர்களையும் கொல்வேன். அதுவரை என்னை அழைக்காதே,
என சொல்லி விட்டு சென்று
விட்டான். துரியோதனனை பயம் கவ்விக் கொண்டது.
கர்ணன் தன்னிடம் சொன்னதை அப்படியே பிதாமகர்
பீஷ்மரிடம் சொல்லி வரும்படி, தன்
தம்பி துச்சாதனனை அனுப்பி வைத்தான். துச்சாதனனும்
அதையே செய்ய, பீஷ்மர் சிரித்தார்.
ஒன்றைச் சொல்கிறேன் கேள் துச்சாதனா! நீங்கள்
நினைப்பது போல், ஒருவேளை கர்ணன்
பலரை கொன்றாலும்,
அர்ஜுனனை அவனால் ஏதுமே செய்ய
முடியாது. அது மட்டுமல்ல! பீமன்
வல்லவன், பலசாலி. நீங்கள் திரவுபதியை
துகிலுரிந்து அவமானம் செய்தது, ஆறா
வடுவாக அவன் மனதில் பதிந்து
விட்டது. அதற்கு, அவன் உங்களைப்
பழிவாங்கியே தீருவான். இதுதான் நடக்கப் போகிறது.
நாளை ஒன்பதாம் நாள் போர். நாளை
மட்டுமே நான் உங்கள் படையில்
இருப்பேன். பத்தாம் நாள் போரில்
நான் இறந்து போவேன். என்
ஆயுள் முடியும் நேரம் வந்துவிட்டதை நான்
அறிவேன். அதன் பிறகு கர்ணனோ
வேறு பலசாலியோ உங் களைப் பாதுகாக்கட்டும்,
என்று சொல்லி அனுப்பி விட்டார்.
துச்சாதனன்
அவரிடம் விடைபெற்று குழம்பிய மனதுடன் கிளம்பிவிட்டான். மறுநாள்
காலை. ஒன்பதாம் நாள் விடியலில் போர்
துவங்கியது. பீமன் ஆத்திரத்துடன் களத்தில்
புகுந்தான். அரவானைக் கொன்ற அசுரன் அலம்புசனை
இன்று கொன்றே தீருவதென்பது அவன்
இலக்கு. அந்த ஆவேசத்துடன், களத்தில்
இறங்கியவன், ஏ அலம்புசா! அரவான்
ஏற்கனவே களப்பலியானவன். செத்த பாம்பை அடித்து
விட்டு, நீ வீரம் கொண்டாடுகிறாயோ!
உங்கள் பாசறையில் நேற்று, அரவானைக் கொன்றதற்காக
உன்னை தலையில் தூக்கி வைத்து
ஆடினார்களாமே கவுரவர்கள்...அட மடையனே! வா,
என்னோடு போர் புரி, என்னை
ஜெயித்தால் நீயே பலசாலியென ஒப்புக்கொள்கிறேன்.
வா சண்டைக்கு, என அவனது உணர்வுகளைத்
தூண்டி விட்டான். அசுரனாகிய தன்னை மானிடனான ஒருவன்
வம்புக்கு இழுக்கிறானோ என ஆவேசப்பட்டான் அலம்புசன்.
No comments:
Post a Comment