Monday, 27 October 2014

மகாபாரதம் பகுதி 036


மகாபாரதம் பகுதி-36

அர்ஜூனன் அந்த வீரமகனுக்கு அபிமன்யு என்று பெயர் சூட்டினான். இந்த சமயத்தில், அக்னி பகவான் அர்ஜூனனை சந்திக்க தேவலோகத்தில் இருந்து, அந்தணர் வேடத்தில் வந்தான். அவனுக்கு காண்டவவனத்தின் மீது ஒரு கண். அடர்ந்த அந்த காட்டில் லட்சக்கணக்கில் மரங்கள், செடி, கொடிகள், சிங்கம், கரடி, யானைகள், முக்கியமாக தக்ஷகன் என்ற நாகங்களின் தலைவன், அவனது மனைவி நாகமாது, மகன் அசுவசேனன் ஆகியோர் வசித்து வந்தனர். அவர்கள் எல்லாரையும் தன் நாக்கிற்கு இரையாக்கி விட அவனுக்கு ஆசை. இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால், அவனுக்கு அர்ஜூனனின் உதவி தேவை. அதெப்படி? ஒரு தேவன், மானிடனின் உதவியை நாடுவதாவது என்ற சந்தேகம் உங்களுக்கு எழும். காரணமில்லாமல், எதுவும் நிகழ்வதில்லை. அக்னியும், இந்திரனும் உடன் பிறந்தவர்கள் என்றாலும் பகைவர்கள். அக்னி எங்கெல்லாம் செல்கிறானோ, அவனை மழைக்கு அதிபதியான இந்திரன் தடுத்து விடுவான். பெருமழையைப் பெய்து தீயை அணைத்து விடுவான். அக்னியோ கொடும்பசியுடன் திரிவான். போதாக்குறைக்கு காண்டவவனம் இந்திரனுக்கு சொந்தமான இடம்.

தன் சொந்த இடம் அழிய அவன் சம்மதிப்பானா? எனவே அர்ஜூனனின் உதவியுடன், 60 யோஜனை தூரமுள்ள (ஒரு யோஜனை என்பது 24 கி.மீ.,) காட்டை சாப்பிட வேண்டும் என வந்து விட்டான். மூன்று லோகங்களிலும் வில் வித்தையில் சிறந்தவன் அர்ஜூனன் என்பது தேவர்களே ஒத்து  கொண்ட விஷயம். ஒருவேளை இந்திரன் மழையைப் பொழிந்தாலும், அர்ஜூனன் வானத்தில் சரமழை பொழிந்து அதை நிறுத்திவிடுவான் என்பது அக்னிக்கு தெரியும். மேலும், அர்ஜூனனின் மைத்துனர் கிருஷ்ணன் வேறு பூமியில் இருக்கிறார். ஒருமுறை, ஆயர்பாடி மக்கள் நடத்திய விழாவிற்கு தன்னை அழைக்காததால் ஆத்திரமடைந்த இந்திரன் பெருமழையை  பெய்வித்தான். அப்போது, பகவான் கிருஷ்ணர் கோவர்த்தனகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்து, அதனை குடையாகப் பிடித்து மக்களை  காத்தார். அர்ஜூனன் தனக்கு உதவும் போது, கிருஷ்ணரும் தனக்கு உதவியாக வேண்டும் என்பது அக்னியின் கணக்கு. அவன் நினைத்தது போலவே நடந்தது. அக்னியின் வேண்டுகோளை அர்ஜூனன் ஏற்றான். காண்டவவனம் தனக்கு கிடைக்கப்போகும் மகிழ்ச்சியில், அக்னி பகவான் அர்ஜூனனுக்கு எடுக்க எடுக்க அம்புகள் குறையாத இரண்டு அம்பறாத்துணிகள், காண்டீபம் என்ற பெயர் கொண்ட ஒரு வில், அனுமனின் சின்னம் பொறித்த கொடி, தேர், நான்கு வெள்ளைக் குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்ததுடன், ஒரு தேரோட்டியையும் வழங்கினான்.

அர்ஜூனன் பிற்காலத்தில் தர்மத்தை நிலைநாட்ட குரு÷க்ஷத்ர களத்தில் பகவான் கிருஷ்ணனுடன் போராடப் போகிறான் என்பதை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட தேவர்கள் இவ்வாறு அவனுக்கு உதவினர். கிருஷ்ணரும், அர்ஜூனனும் காண்டவவனத்துக்குள் அக்னியுடன் புகுந்தனர். காட்டில் அக்னி தன் ஜ்வாலைகளை படர விட்டது தான் தாமதம்! உலகம் தீயால் அழியும் போது, எப்படி எரியுமோ, அதுபோல் காட்டில் பெரும் தீ மூண்டது. மரங்கள் கரிக்கட்டையாயின. செடி கொடிகள் பாழாயின. மிருகங்கள் ஓலமிட்டபடியே அழிந்தன. பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தன் இனத்தாரைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோற்றது. பாம்புகள் கூண்டோடு அழிந்தன. கலவரமடைந்த தக்ஷகனின் மனைவி நாகமாது தன் குழந்தையான அஸ்வசேனனை வாயில் கவ்விக்கொண்டு, தீயில் இருந்து தப்பி ஓடியது. இவ்வளவு தீயிலும் தப்பி ஓடிவரும் அந்தப்பாம்பு அர்ஜூனனின் கண்களில் பட்டுவிட தன் அம்பால் அதன் தலையைத் துண்டித்தான். துண்டித்த தலையில் சிக்கியிருந்த அஸ்வசேன பாம்பு அந்த தலையுடன் வெகு தூரத்தில் போய் விழுந்தது. பின்பு தன் வாயிலிருந்து விடுபட்ட அந்த பாம்பு, வெகுதூரத்தில் போய் விழுந்தது. தாயின் மரணத்திற்காக வேதனைப்பட்ட அசுவசேன பாம்பு, வேகமாக ஊர்ந்து சென்றது. அது செல்லும் வழியிலுள்ள மற்ற பாம்புகளிடம் விசாரித்ததில், அர்ஜூனனின் கொடும் பகைவன் கர்ணன் என்பது தெரிய வந்தது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில், அர்ஜூனனின் எதிரியான கர்ணனின் அவைக்குள் நுழைந்த அந்தப்பாம்பு, அவனைச் சரணடைந்தது. பின்னர் ஒரு அம்பாக மாறி, கர்ணனின் அம்பறாத்துணியில் நாகாஸ்திரமாக அமர்ந்து கொண்டது. இதை எய்தால், எதிரே இருப்பவனை மாய்த்து விட்டு எய்தவனிடமே மீண்டும் திரும்பி விடும். மீண்டும் இதைப் பயன்படுத்தலாம். இப்படி காடு எரிந்து கொண்டிருக்க, காண்டவ வனத்தின் சொந்தக்காரனான இந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்களுடன் காண்டவ வனத்திற்கு வந்துவிட்டான். பெருமழை பெய்தது. அர்ஜூனன் இதை எதிர்பார்த்திருந்தான். சரமாரியாக அம்புகளை வானத்தில் ஏவி, மழையை காட்டுக்குள் விழாமல் தடுத்தான். எனவே, இந்திரன் தான் பெற்ற சொந்த மகனான அர்ஜூனனனுடன் மோதும் நிலை ஏற்பட்டது. கடும்போர் நடந்தது. இந்திரனாலோ, தேவர்களாலோ அர்ஜூனனை அசைக்க முடியவில்லை. அதே நேரம், அர்ஜூனனுக்கு பாம்புகளின் தலைவனான தக்ஷகன் தப்பி ஓடிவிடக்கூடாது என்பதிலும் கவலை.


கண்களை நாலாபுறமும் ஓடவிட்டு, அவன் இந்திரன் விடுத்த பாணங்களுக்கு, பதில் பாணங்களை அனுப்பிக் கொண்டிருந்தான். இதற்குள் அக்னி காட்டை முழுவதுமாக எரித்து விழுங்கிவிட்டான். அவனுக்கு பரமதிருப்தி. அவனது வயிறு குளிர்ந்தது. இந்திரனின் வயிறு எரிந்தது. இந்தக் காட்டில் தான் மயன் என்ற தேவசிற்பியும் வசித்தான். அவனும், சார்ங்கம் என்ற பறவை இனத்தின் நான்கு குஞ்சுகளும் மட்டும் தீயில் இருந்து தப்பினர். தக்ஷக பாம்பு என்னாயிற்று என்பது அர்ஜூனனுக்கு தெரியவில்லை. காடு முழுமையாக காவு போனதால் ஆத்திரமடைந்த இந்திரன், தாக்குதலை தீவிரப்படுத்தினான். அப்போது வானில் இருந்து ஒரு குரல் எழுந்தது. நிறுத்துங்கள் போரை! இந்திரனும் தேவன் தான். அர்ஜூனனும், கிருஷ்ணரும் தேவர்கள் தான்! எனவே வெற்றி தோல்வி யாருக்கு என்பதை இப்போர் நிர்ணயிக்காது. இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். தக்ஷகப்பாம்பு இங்கிருந்து தப்பி விட்டது. அது குரு÷க்ஷத்திரத்தை சென்றடைந்து விட்டது, என்றது.


             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer