Monday 27 October 2014

மகாபாரதம் பகுதி 046


மகாபாரதம் பகுதி-46

பரமசிவன் சிரித்தார். தேவீ ! உன் கருணைக்கு தான் ஏது எல்லை. பக்தர்கள் துன்பப்படுவதை நீ சகிக்க மாட்டாய். அவர்கள் எந்தத் துன்பத்தையும் தாங்கும் சக்தியைப் பெற வேண்டும் என்ற பக்குவ நிலையை அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அர்ஜுனனை நான் கவனிக்காமல் இல்லை ! அவன் அக்னியின் மத்தியில் நின்று செய்யும் கொடிய தவம் என்னை ஈர்க்கத்தான் செய்திருக்கிறது. கவலை கொள்ளாதே. இனி அவனுக்கு துன்பமில்லை என்றவர் நந்தீஸ்வரனை திரும்பிப் பார்த்தார். இறைவனின் பார்வையிலேயே குறிப்பறிந்த நந்தீஸ்வரர் தன் கணங்களுடன் தயாராகி விட்டார். பார்வதியிடம், நான் வேடனாக வேடம் கொள்கிறேன். நீ வேடுவச்சியாக வேடம் தரித்து வா ! மற்றவர்களும் வேடர் கோலம் பூணுங்கள். வேதங்களே ! நீங்கள் நாய் வடிவில் என்னைத் தொடருங்கள், என உத்தரவிட்டார். கணநேரத்தில் எல்லாம் முடிந்தது. அவர்கள் முகாசுரனை அழிக்க புறப்பட்டனர். முகாசுரன் கெடிய முள்ளம்பன்றி வடிவம் கொண்டு அர்ஜுனனை அழிக்க காத்திருந்தான்.

சிவபெருமான் அவன் இருந்த இடத்தை அடைந்து, வில்லில் அம்பைப் பொருத்தி காத்திருந்தார். முகாசுரன் பயங்கர உறுமலுடன் அர்ஜுனனை நெருங்கினான். அதுகேட்டு, அர்ஜுனனின் நிஷ்டை கலைந்துவிட்டது. தனது வில்லில் அம்புதொடுத்து பன்றியின் மீது எய்தான். அதே நேரத்தில் மறைந்திருந்த சிவபெருமானும் ஒரு அம்பை பன்றியின் பின்பக்கமாக விட இரண்டும் ஒன்றாய் தைத்தன. முகாசுரன் இறந்தான். அப்போது சிவகணங்களாக வந்த வேடர்கள், அடேய் வாலிபனே ! இந்த மலையில் பல்லாண்டுகளாய் வசிக்கும் எங்கள் குலத்தலைவர் பன்றிக்கு குறி வைத்திருக்க, எங்கிருந்தோ வந்த நீயும் பன்றியை அடித்தாயே ! இது முறையா ? என வம்புச்சண்டைக்கு இழுத்தனர். அர்ஜுனன் அவர்களது தலைவனாய் வந்திருக்கும் சிவபெருமானை நோக்கிச்சென்று, அவர் சிவன் என்பதை அறியாமல், வேடர் தலைவா ! நீ விட்ட அம்பு பின்பக்கமாக விடப்பட்டது. ஆனால் நான் அதன் முகத்துக்கு நேராக அம்பெய்தி கொன்றேன். என் அம்பு துளைத்த பிறகு தான் உனது அம்பு அதன் மீது பாய்ந்தது. இதை தவறாகச் சொல்கின்றார்களே உன் வீரர்கள் ! போகட்டும். நான் கடும் தவம் மேற்கொண்டுள்ளேன். நான் காய்ந்த இலைகளை மட்டுமே உணவாகக் கொண்டு விரதமிருக்கிறேன். இந்தப் பன்றி எனக்குத் தேவையில்லை. இதை நீங்களே எடுத்துச் சென்று சாப்பிடுங்கள். இதை விடுத்து, என்னிடம் வம்பு இழுத்தால் உனக்கும், உள்னோடு வந்துள்ளவர்களுக்கும் தலை இருக்காது. என் எச்சரித்தான்.

சிவன் அவனிடம் நீ தவம் செய்பவன் என்கிறாய், தவம் செய்பவன் ஆழ்ந்த நிஷ்டையில் ஆளாமல், பன்றியின் உறுமல் சத்தம் கேட்டு விழித்திருக்கிறாய் ? இதெல்லாம் ஒரு தவமா ? உனக்கு தவத்தில் சிரத்தையில்லை. மேலும், தவகாலத்தில் ஒரு மிருகத்தை கொன்றிருக்கறாய். அது போகட்டும். இப்படி தவம் செய்கிறாயே ! அதற்காக காரணத்தை தெரிந்து கொள்ளலாமா ! என்றார். அர்ஜுனன் பொறுமையுடன் தன் வரலாறையும், தன் குடும்பத்தாருக்கு துரியோதனனால் இழைக்கப்பட்ட கொடுமையையும் விளக்கினான். அதுகேட்ட சிவன் அந்த அர்ஜுனனா நீ ! ஒரு காலத்தில் அக்னியின் ஆசையை நிறைவேற்ற காண்டவ வனத்தை எரித்தவன் நீதானே ! அந்த நெருப்பில் சிக்கி எங்கள் வேடர் குலத்தவர் பலர் அழிந்தார்களே ! ஏகலைவனின் மீது பொறாமைப்பட்டு, அவனது விரல் பறிபோக காரணமாய் இருந்தவனும் நீ தானே ! உன்னை விட வில்வித்தையில் உயர்ந்தவர் யாருமில்லை என எண்ணியிருந்தாய். இதோ ! நீ உண்மையிலேயே வலிமை உள்ளவன் என்னை ஜெயித்துப் பார். வா சண்டைக்கு ! என்றார்.

அர்ஜுனன் சற்றும் யோசிக்காமல், ஒரு அம்பை சிவன் மீது விட்டான். இப்படியாக போர் துவங்க அர்ஜுனனின் கணைகளால் சிவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் ஆச்சரியமும் கோபமடைந்தான். சிறிது நேரம் தளர்ந்தும் தெம்பானான். அவனது கால்கள் நடுங்கின. அச்சமயத்தில் பார்வதிதேவி, சிவனிடம் மீண்டும் அர்ஜுனனுக்காக மன்றாடி, போதும் சோதித்தது எனச்சொல்ல, சிவபெருமான் கடைசியாக தனது அம்பு ஒன்றை வீசி, அர்ஜுனனின் வில் நாணையே அறுத்து விட்டார். கோபமடைந்த அர்ஜுனன் அவர் மீது பாய்ந்து, உடைந்த வில்லால் தலையில் தாக்க, அவரது தலையில், இருந்த அமிர்தம் சிந்தியது, கங்காதேவி நிலை குலைந்து விண்னைநோக்கி எழுந்தாள். அவரது தலையை அலங்கரித்த நாகங்கள், வலி தாளமல் துடித்தன. சிவபெருமான் அடிபட்டதும், விண்ணுலகில் பிரம்மாவுக்கு வலித்தது. திருமால் அடிபட்டார். உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் தலையில் சம்மட்டியால் அடித்தது போல வலி, மிருகங்கள் எல்லாம் வலி தாளாமல் அங்குமிங்கும் ஓடின. தாவரங்கள் அங்குமிங்கும் ஆடின. பின்னர் இருவரும் மல்யுத்தம் செய்தனர். அதிலும் இருவரும் விடாக்கண்டர்களாக இருந்தனர். சிவன் அர்ஜுனனை தூக்கி வானில் எறிந்தார். இது கண்ட தேவர்கள் வானில் இருந்து வந்து மலர் தூவ, சிவபெருமான் அர்த்தநாரீஸ்வர வடிவில் ரிஷபத்தின் மீது காட்சி தந்தார்.

எந்தையே ! தாங்களா இந்த சிறுவனுடன் போரிட்டது ! என்னால் நம்ப முடியவில்லை ! நான் பிறந்த பயனை அடைந்து விட்டேன், என்று பல நாமங்கள் சொல்லி அவரை பூஜித்தான். சிவபெருமான் மகிழ்ந்து, அர்ஜுனா ! நீ விரும்பியது போல பாசுபதாஸ்திரம் தருகிறேன் எனச் சொல்லி அதைக் கொடுத்தார். பின்னர் மறைந்து விட்டார். அப்போது அங்கு வந்த இந்திரன், மகனே ! உன்னைப் பெற்ற நான் மகிழ்கிறேன். பூலோகத்தில் வாழ்பவர்க்கு சிவதரிசனம் என்பது சாதாரணமான விஷயமா ? உன் தவத்தை மெச்சுகிறேன். வா, என்னுடன் தேவலோகத்துக்கு, என்று அழைத்துச் சென்றான். அங்கே இந்திராணியின் காலில் விழுந்து வணங்கினான். தங்கள் நண்பனான கண்ணனின் சகோதரியே இந்திராணி. தந்தையின் மனைவி என்பதால் அர்ஜுனனுக்கு தாயாகவும் ஆகிறாள். அவளது பாதத்தில் விழுந்து ஆசிபெற்றான் அர்ஜுனன். உனக்கு உன் தந்தையைப் போலவே சகல செல்வமும் கிடைக்கட்டும், என அவள் வாழ்த்தினாள்.


தனது சிம்மாசனத்தில் தன்னருகிலேயே மகனை அமர வைத்த இந்திரன், தேவலோக இன்பங்களையெல்லாம் அவனை அனுபவிக்கச் செய்தான். பின்னர் அவனை ஒரு தனிமாளிகையில் தங்க வைத்தான். அப்போது நாட்டியத்தாரகை ஊர்வசி அங்கு வந்தாள்.


             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer