மகாபாரதம்
பகுதி-48
அர்ஜுனா!
கவலையை விடு ! அந்த அசுரர்களிடம்
நீ தோற்றோடுவது போல் பாவனை செய்.
அவர்கள் உன்னை எள்ளி நகையாடுவார்கள்.
யாரையாவது பரிகாசம் செய்தால், அவர்கள் இறந்து போவார்கள்
என்ற சாபம் பெற்றவர்கள் இந்த
அசுரர்கள். இவர்கள் உன்னைக் கேலி
செய்யும் போது, பிரம்மாஸ்திரத்தை விடு.
அனைவரும் அழிவர். என்றது அவன்
காதுக்கு மட்டும் கேட்கும்படியாக ! அர்ஜுனன்
அசரிரீயின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான். அசுரர்களின் அம்புகளை தாக்குபிடிக்க முடியாதவன் போல ரதத்தை திருப்பி
ஓட்டினான். எதிர் பார்த்தது போலவே
அசுரர்கள் அவனைக் கேலி செய்தனர்.
டேய் பயந்தாங்கொள்ளி என கத்தினர். ஆரவாரமாக
சிரித்தனர். அவ்வளவு தான் ! அர்ஜுனன்
தன் தேரை மின்னலென திருப்பச்
சொன்னான். மாதலி திருப்பவே, அர்ஜுனன்
பிரம்மாஸ்தரத்தை அவர்கள் மீது பாய்ச்ச,
மூன்று கோடி அசுரர்களின் தலையும்
வீழ்ந்தது. தேவர்கள் ஆனந்த பாட்டு பாடினர்.
அவனை புகழந்தனர்.
இதையடுத்து,
அவர்கள் தேவலோகம் திரும்பினர். வழியில் இரணியநகரம் என்ற
மிதக்கும் நகரைக் கண்டான் அர்ஜுனன்.
மிதக்கும் நகரம் எப்படி சாத்தியமாகும்
என நீங்கள் கேட்கலாம். இப்போது
கூட சர்வதேச விண்வெளி நிலையம்
விண்ணில் மிதந்து கொண்டிருப்பதை நாம்
படிக்கிறோம், பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞானத்துக்கு அடிப்படையாக
இருந்தது நம் நாட்டு புராணங்களே
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம்
ஆன்மீகம் நமக்கு அறிமுகப்படுத்தியவையே, இன்றைய அறிவியல்
கண்டுபிடிப்புகளாக வெளிநாட்டவரால் மார்தட்டிக் கொள்ளப்படுகிறது. இந்த மிதக்கும் நகரில்,
அசுரப் பெண்களான காலகை, புலோமை ஆகியோர்
பெற்றெடுத்த 60 ஆயிரம் அசுரர்கள் வசித்தனர்.
அவர்களையும் வென்றான் அர்ஜுனன். பின்னர், தேவேந்திரனிடம் சென்று ஆசி பெற்று,
சகோதரர்கள் தங்கியிருக்கும் காமிகவனத்திற்கு புறப்பட அவனை இந்திரன்
தடுத்தான்.
மகனே !
நீ இன்னும் சிறிதுகாலம் இங்கே
தங்கிவிட்டுச் செல். உனக்கு பொன்
மாளிகைøயும் ஐயாயிரம் தேவ
கன்னியரையும் தருகிறேன். அங்கே தங்கி, அவர்களுடன்
ஆனந்தமாய் இரு, என்றான். அர்ஜுனனும்
தந்தையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டான். அர்ஜுனனின் ஆற்றலை, அங்கே வந்த
உரோமச முனிவர் என்பவரிடம் சொன்ன
இந்திரன், அவன் அங்கு சிறப்புடன்
தங்கியுள்ள விபரத்தை தர்மர் மற்று சகோதரர்களிடம்
சொல்லிவிட்டால் அவர்கள் மகிழ்வார்கள் என்றும்
சொன்னான். உரோமசமுனிவர் அப்பணியை தானே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
இவர் உடலெங்கும் ரோமம் முறைத்துதிருக்கும். உலகம்
ஒவ்வொருமுறையும் அழியும்போது மட்டும் ஒரே இவரது
கையிலும் ஒரு ரோமம் உதிரும்.
அப்படி ஒரு ஜடாமுடி முனிவர்
அவர்.
அவர், தர்மரிடம் விஷயத்தை சொல்ல காமீக வனத்துக்கு
கிளம்பினார். தர்மரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.
தம்பி பாசுபதாஸ்திரத்தை சிவனிடம் பெற்றதும், தேவர்களுக்கு எதிரான அரக்கர்களை அழித்ததையும்
கேட்டு மகிழ்ச்சியடைந்த தர்ம சகோதரர்கள் திரவுபதியுடன்
தாங்களும் அர்ஜுனனை பார்க்க விரும்பினர். உரோமச
முனிவர் அவர்களை அழைத்துச் சென்று
காந்தர்ப்பம் என்ற மலைப்பகுதியில் அவர்களை
தங்க வைத்தார். தர்மருக்கு சகுனி என்ற கொடியவனால்
விதியின் வலிமையால் கெட்டநேரம் வந்தது. அதே, நேரம்,
அவருக்கு நல்ல நேரம் பிறப்பதற்கான
யோகம் இதுபோன்ற முனிவர்களால் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
அந்த மலையில் ஒருவருடம் தங்கியிருக்கும்
படியும், அதன் பிறகு அவர்களை
இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் சொல்லி விட்டார்.
பெரியவர்கள்
எது சொன்னாலும் காரண காரியமிருக்கும். அய்யா
முனிவரே ! எங்களை இந்திரலோகம் அழைத்துச்செல்வதாக
சொல்லிவிட்டு, நடுகாட்டில் விட்டுச் செல்கிறீரே! இது உமக்கே நன்றாயிருக்கிறதா?
என தர்மர் கேட்கவில்லை. ஏனெனில்
அவருக்கு தெரியும். அந்தப் பெரியவர் தங்களை
இங்கே தங்கச் சொல்வதில் ஏதோ
அர்த்தமிருக்கும் என்று. அதனால் அவர்கள்
அங்கேயே தங்கினர். அந்த நல்லநாளும் வந்தது,
ஒருநாள், திரவுபதி குடிசைக்குள் இருந்தபோது, இதுவரை அனுபவித்திராத நறுமணத்தை
அனுபவித்தாள். இப்படியொரு சுகந்தம் எங்கிருந்து வருகிறது என்பதை அறியும் பொருட்டு,
வெளியே வந்தாள். வாசலில் ஒரு செந்தாமரை
மலர் கிடந்தது. ஆஹா... இப்படியொரு அழகிய
மலரா ? உலகிலுள்ள மற்ற தாமரைகளெல்லாம் இந்தப்
பூவைக் கண்டால் தலை குனிந்து
விடுமே ! இது பரந்தாமனின் நாபியிலுள்ள
புஷ்பமோ! அதுதான் உதிர்ந்து பூமிக்கு
வந்துவிட்டதோ. சூரிய பகவான் தன்
கையில் ஒரு தாமரை வைத்திருப்பானே
! அதை தன் உலாவின் போது
நழுவ விட்டுவிட்டானா ! இப்படி அதைப்பற்றி பலப்பல
விதமான சிந்தனையுடன் நின்றபோது, பீமன் அங்கே வந்தான்.
சுந்தரி
! ஆஹா.... என்ன ஒரு நறுமணம்
! எடுத்த
மலரை கூந்தலில் சூடாமல் ஏன் கையில்
வைத்திருக்கிறாய் ? என்றதும், திரவுபதி அம்மலரை அவனிடம் காட்ட,
அவனும் அதிசயித்தான். அவள் சிணுங்க ஆரம்பித்தாள்.
அன்பே ! எனக்கு கீழே கிடந்த
இம்மலர் வேண்டாம். இதே போன்று காட்டில்
எங்கோ இருக்கத்தானே செய்யும். உங்களை விட மிகவிரைவில்
அவற்றைப் பறித்து வர யாரால்
முடியும் ! தாங்கள் பறித்து வாருங்கள்,
என்று சீதாதேவி மானுக்காக ராமனிடம் கொஞ்சியது போல், திரவுபதி மலருக்காக
கணவனிடம் கெஞ்சினாள். மாதர் ஒன்று உரைத்துவிட்டால்
மன்மதர்க்கு தாங்குமோ ? பீமன் கிளம்பி விட்டான்.
ப்பூ ! இந்த சாதாரண பூவுக்காக
என்னிடம் இப்படி கெஞ்ச வேண்டுமா
? மகாராணி கட்டளையிட்டால் உடனே பறித்து வருவேன்,
என அவளை பரிகாசம் செய்துவிட்டு,
காட்டுக்குள் அந்த மலர்ச் செடியைத்
தேடி புறப்பட்டான். எங்கும் காணவில்லை. அவன்
உரோமச முனிவர் தங்கியிருந்த இடத்துக்குச்
சென்று, அவரிடம் மலரைக் காட்டி,
சுவாமி ! இந்த மலர் எங்கிருக்கிறது
? என்றான். உரோமசர் அவனிடம், பீமா
! இது அபூர்வ மலராயிற்றே ! இது
இந்தக்காட்டில் கிடையாது. இதை யட்சர்களுக்கு சொந்தமான
அளகாபுரி பட்டணத்தில் அல்லவா இருக்கிறது. அந்த
ஊர் குபேரனுக்கு சொந்தமானது. அங்கே போனால் தான்
பறிக்கலாம். ஆனால், உன்னால் முடியாதது
ஏதுமில்லை. மனைவியின் நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுவது கணவனின் கடமை. புறப்படு
அளகாபுரிக்கு என்றார்.
No comments:
Post a Comment