மகாபாரதம்
பகுதி-27
உங்களைக்
கொல்ல சதி செய்யப்படுகிறது என்பதை பீமன் புரிந்து கொண்டான். அதை உறுதிப்படுத்தும்
வகையில் சிற்பி மேலும் சொன்னான். பீமராஜா! தங்கள் முகக்குறிப்பு உணர்த்துவது சரிதான். பாண்டவ
வம்சத்தை பூண்டோடு அழிப்பது துரியோதனனின் திட்டம். அதற்கு
திருதராஷ்டிரரும் சூழ்நிலைக் கைதியாகி தலையசைத்து விட்டார். அரக்கு
எளிதில் தீப்பிடிக்கும் என்பதால், அதைத் தேர்ந்தெடுத்தான்
புரோசனன். இதை விதுரர் தெரிந்து கொண்டார். அவர் என்னிடம் ரகசியமாக, பாண்டவர்கள் தப்பிச்
செல்லும் வகையில், ஒரு சுரங்கப்பாதை அமைத்து விடு என்றார்.
அதை நானும் செய்தேன். அந்தப்பாதை வெகுதூரம்
செல்லும். அந்தப்பாதை ஒரு காட்டில் போய் முடியும். அதை இடும்பிவனம் என்பர். குகையின் வாசல் தெரியாமல்
இருப்பதற்காக அந்த இடத்தை மறைத்து ஒரு தூண் அமைத்துள்ளேன். பராக்கிரமசாலியான
நீங்கள் அதை உடைத்து நொறுக்கி விடுவீர்கள் என எனக்குத் தெரியும். அந்த தூணை அகற்றிவிட்டால் நீங்கள் சுரங்கத்துக்குள் நுழைந்து விடலாம்,
என்றான்.
பாண்டவர்களிடம்
இந்த சதிதிட்டம் பற்றி சொன்னான்.
அவர்கள் சுதாரித்துக் கொண்டனர். புரோசனனிடம்
இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் போல் காட்டிக் கொண்டனர். அவனது
ஆலோசனைகளை அப்படியே செயல்படுத்தினர். அவனை வெளியே அனுப்பாமல்
தங்களுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். ஒருநாள் இரவில்,
ராஜாங்க விவகாரங்களை அவனுடன் பேசுவது போல நடித்துவிட்டு, புரோசனரே! தாங்கள் எங்கும் போகக்கூடாது. எங்களுடன் தான் இன்று படுத்துக் கொள்ள வேண்டும், என்றான்
பீமன். புரோசனனும் வேறு வழியின்றி அவர்களின் அறையிலேயே தங்கி
அயர்ந்து உறங்கி விட்டான். உடனே பீமன் சுரங்கப்பாதை
வாசலுக்கு சென்று அங்கிருந்த தூணை பெயர்த்தான். வாசலை
திறந்து வைத்து விட்டு, தாய் குந்தியையும் சகோதரர்களையும்
எழுப்பி, அவர்களுடன் அதன் வழியாக தப்பிவிட்டான். குகையைத் தாண்டியதும் அவர்களை விட்டு விட்டு மீண்டும் அரண்மனைக்குள்
வந்தான். அரண்மனைக்கு தீ வைத்தான். அரக்கு
மாளிகை என்பதால் வேகமாகத் தீப்பற்றியது. அவன் குகைக்குள்
நுழைந்து வெளியேறி விட்டான். சகோதரர்களுடன் இடும்பிவனம்
நோக்கிச் சென்றான்.
மறுநாள்
காலையில் வாரணாவத நகரத்து அரண்மனை சாம்பாலாகிக் கிடப்பதை மக்கள் கண்டார்கள். பாண்டவர்கள் மற்றும்
குந்திதேவியின் மறைவுக்காக கண்ணீர் விட்டார்கள். ஏழுபேர்
அங்கு கருகிக்கிடந்ததையும் அவர்கள் பார்த்தனர். புரோசனன் மட்டும்
தானே உள்ளே இருந்தான்! எப்படி ஏழு பேர் என நீங்கள்
கேட்பீர்கள். அரண்மனை பணிகள் முடிந்ததும் ஒரு சில
பணியாட்களைத் தவிர மற்றவர்களை புரோசனன் அஸ்தினாபுரத்துக்கு அனுப்பி விட்டான்.
அந்த பணியாட்களும் அரண்மனைக்கு வெளியே தான் இரவு நேரத்தில் காவல்
செய்வார்கள். மற்ற பணியாளர்கள் பகலில் தான் வருவார்கள்.
புரோசனனின் ஏற்பாட்டின்படி ஐந்து வேடர்களும், அவர்களின்
தாயும் பாண்டவர்களுக்கு விஷம் கொடுத்து கொல்வதற்காக அரண்மனைக்கு வந்திருந்தனர்.
அவர்கள் திட்டத்தை நிறைவேற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்
தான் தீயில் கருகி விட்டார்கள். தன் வினை தன்னைச்சுடும்
என்பது போல புரோசனனும் இறந்து விட்டான். இதைப் பார்த்த
வாரணாவத நகர மக்கள் வேடர்களை பாண்டவர்கள் என்றும், அவர்களது
தாயை குந்தி என்றும் நினைத்துக் கொண்டனர். அவர்களுக்கு
பரிதாப முடிவு ஏற்பட்டதாகக் கருதி கண்ணீர் வடித்தனர்.
இந்தத்
தகவல் பல நாடுகளுக்கும் பரவியது.
எல்லா தேசத்து மன்னர்களும், வீரம் மிக்க
குருகுலம் அழிந்ததே என வருத்தப்பட்டார்கள். இங்கே
இப்படியிருக்க அஸ்தினாபுரம் அரண்மனையில், மகிழ்ச்சி வெள்ளம்
தாண்டவமாடியது. துரியோதனனும் அவன் தம்பிகளும்
துள்ளிக்குதித்தனர். ஆனால், மக்கள்
முன்பும், பெரியோர்கள் முன்பும் வரும்போது கண்ணீர் வடித்து,
ஐயோ! எங்கள் சகோதரர்களை இழந்தோமே! என அழுவது போல் நடித்தனர். முக்கியமாக, பீமன் இறந்துபோனான் என நினைத்து துரியோதனனுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.
சிறுவயது முதல் பலவிதத்திலும் தப்பித்து வந்த அவன் இப்போது மடிந்தது
குறித்து இறுமாப்பும் ஏற்பட்டது. அந்த தடியன் பீமன்
சத்துருகாதினி என்ற கதாயுதத்தை வைத்துக் கொண்டு என்னமாய் நம்மை மிரட்டினான்,
இப்போது அரக்கோடு அரக்காக ஒட்டி உருகிப் போய்விட்டான், எனச் சொல்லி அட்டகாசமாக சிரித்தான். பாண்டவர்கள்
சரித்திரம் முடிந்தது என எல்லா நாட்டு அரசர்களுமே அவர்களை மறக்கத் தொடங்கியிருந்த
வேளையில், தப்பிச் சென்ற பாண்டவர்கள், பீமன்
முன்னால் செல்ல பின் தொடர்ந்தனர். ஒரு இடத்தில், அதிபயங்கரமாக சிரித்தபடி ஒரு அரக்கி பீமனின் முன்னால் வந்தாள். அழகுத்திலகமே! உன்னைப் போன்ற பலசாலியையும், கட்டழகனையும் நான் கண்டதில்லை.
நீ
யார்? எதற்காக
இங்கே வந்தாய்? எப்படி இந்த காட்டுக்குள் நுழைந்தாய்?
உன் பின்னால் வரும் இவர்கள் யார்? என்றாள்.
பீமன் அவளையும் விடஅதிரும் குரலில் சிரித்தான். ராட்சஷப் பெண்ணே! நாங்கள் எங்கள் வழியில் போய்க்
கொண்டிருக்கிறோம். முதலில் நீ யார் என்பதை என்னிடம் சொல்.
அதன் பிறகு நான் இங்கு வந்த கதையைச் சொல்கிறேன்,என்றாள். பீமனை பார்த்தவுடனேயே அவனை அடைந்து விட
வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ராட்சஷி, அவன் கேட்டதற்கு
பதில் சொன்னாள். மன்மதனின் எழிலை உன்னில் கொண்டவனே! எனது அண்ணன் இடும்பனுக்குரியது இந்த வனம். என் பெயர்
இடும்பி. நீங்கள் வருவதை என் சகோதரன் பார்த்து விட்டான்.
உடனே, என்னை அனுப்பி உனக்கு நல்ல தீனி
வருகிறது. அவர்கள் எல்லாரையும் விழுங்கிக் கொள் எனச் சொல்லி
அனுப்பினான். ஆனால், உன்னைப்
பார்த்ததும் நான் உன் மீது காதல் கொண்டு விட்டேன். என்னை நீ
திருமணம் செய்து கொள். நீங்கள் இங்கிருந்து தப்பிக்க வழி
செய்கிறேன். என் அண்ணன் கோபக்காரன். அவன்
சொன்னதைச் செய்யாவிட்டால், உங்களை மட்டுமல்ல! என்னையும் கொன்று விடுவான். என்ன சொல்கிறீர்கள்?
என்றாள்.


No comments:
Post a Comment