மகாபாரதம்
பகுதி-43
சபை
நடுவே இழுத்துச் செல்லப்பட்டாள் திரவுபதி.
கர்ணனும், துரியோதனனும், சகுனியும் கை கொட்டி சிரித்தனர். அந்த சபையில்
பீஷ்மர் மற்றும் பலநாட்டு அரசர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள்,
இந்தக் காட்சியை கண்டு தலை குனிந்தனர். திரவுபதியின்
கதறல் ஒலி சபையையே குலுக்கியது, இது காதில் விழுந்தும்
கண்கெட்ட திருதராஷ்டிரன் மனமும் கெட்டு ஏதும் பேசாமல் இருந்தான். திரவுபதியின் கூந்தல் துச்சாதனன் இழுத்து வந்ததில் அவிழ்ந்து தாறுமாறாகக்
கிடந்தது. அவள் பட்டுப் புடவை அணிந்திருந்தாள். அது கசங்கியிருந்தது. திருதராஷ்டிரனையும், பீஷ்மரையும் நோக்கி, மாமா, தாத்தா
! இதுதான் உங்கள் நாட்டின் நீதியோ ? என்னை
இங்கு இழுத்து வந்திருக்கிறீர்களே ! ஏன் கணவர் தர்மர்
தன்னைத் தோற்ற பிறகு என்னைத் தோற்க என்ன உரிமையிருக்கிறது ? என்று
நியாயம் கேட்டான்.
துரியோதனின்
தேரோட்டி பிரதிகாமிக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆஹா..நாம் கற்பனையாகச் சொன்னதை இவள் நிஜமாகச்
சொல்கிறாளே. நியாயமுள்ளவர்கள் மனதில் ஒரே மாதிரியான எண்ணம்
தான் எழும் போலும் ! என்று நினைத்துக் கொண்டான். பீஷ்மர் துரியோதனனிடம், துரியோதனா ! ஒரு பெண்னை சபை நடுவில் இழுத்து வந்து அவமானப் படுத்துவது முறையல்ல,
என்று புத்தி சொன்னார். அவன் காதில் விழவில்லை.
துச்சாதனன் அவளை நோக்கி, என்னடி அழுகிறாய் நீ
வேசி. வேசிகள் தான் நினைத்த மாத்திரத்தில் கண்ணீர்
சிந்துவார்கள் என்று அண்ணியாரை ஒருமையில் அவமானப்படுத்தி பேசினான். பாஞ்சாலி கொதித்து விட்டாள். பீமனும், அர்ஜுனனும் ஆயுதத்தில் கைவைத்து விட்டார்கள். தர்மர்
அவர்களைப் பார்த்து கண்ஜாடை காட்டவே, கோபத்தை
கட்டுப்படுத்தினார்கள்.
தர்மர்
அவர்களிடம், நடப்பது நடக்கட்டும். வினைப்பயனை நாம் எல்லாருமே
அனுபவித்தாக வேண்டும். இப்போது துரியோதனாதிகளுக்கு நல்ல
காலம். ஆனால், இது நிரந்தரமானதல்ல.
நம் நேரம் வரும்போது, நாம் தட்டிக் கேட்கலாம்
என்றார். அப்போது துரியோதனாதிகளில் நல்லவனான விகர்ணன்
என்பவன் எழுந்தான். அவன் நியாயம் பேசினான். அண்ணா ! நீ பாஞ்சாலி தேவியாரை இப்படி செய்தது
சரியல்ல. அவர்கள் நம் அண்ணியார். மேலும்,
அதற்கு நமக்கு அதிகாரமும் இல்லை. ஏனெனில்,
அவர்கள் கேட்டது போல, தர்மர் முதலில் தன்னைத்
தோற்றார். எனவே, அண்ணியாரை விடுவித்து
விடுங்கள், என்றார். பாஞ்சாலியின்
நிலைக்காக பரிந்து பேச நினைத்தாலும் துரியோதனனிடம் பயந்து போயிருந்த மற்ற நாட்டு
அரசர்கள், விகர்ணனின் பேச்சை மெச்சி இது நியாயமான பேச்சு, விகர்ணனே
யோக்கியன் என்று பேசினர்.
இந்த
முணுமுணுப்பு கர்ணனின் காதில் விழவே ஏ விகர்ணா ! யோக்கியன் என்ற பட்டம் பெறுவதற்காக நீ
செய்த தந்திரமே உனது பேச்சு. உன் பேச்சில் அர்த்தமே இல்லை.
தர்மன் என்ன சொன்னான் தெரியுமா ? என்னையும்
என் இல்லையும் பணயமாக வைக்கிறேன் என்றான். இல் என்றால்
இல்லாள் என்று பொருள். அவ்வழியில் அவன் மனைவியை தோற்கவே
செய்தான் என்றான். துரியோதனன் கர்ணனை பாராட்டு, இனியும் பேச்சு தேவை இல்லை. ஏ துச்சாதனா ! முதலில் பாண்டவ அடிமைகளின் ஆடையை அகற்று என்றான். துச்சாதனன்
பாண்டவர்களை நெருங்கவே, அவர்கள் தாங்களாவே தங்கள் ஆடைகளை
கொடுத்து விட்டு, கெவுபீனத்துடன் நின்றனர். அடுத்து, துச்சாதனா ! இந்த
திரவுபதியின் ஆடையை அவிழ்த்துப் போடு. நாமும் ரசிப்போம்.
மற்றவர்களும் இவளது பேரழகை ரசிக்கட்டும், என்றான்.
இதைக்கேட்டு சபையே கலங்கி விட்டது. எல்லோர்
கண்களிலும் கண்ணீர். கர்ணன், சகுனி
நீங்கலாக மற்றவர்கள் தலை குனிந்தனர். அப்போது வெளியில்
ரத்தமழை பொழிந்தது. சகுனக் குற்றங்கள் ஏற்பட்டன. பீமன் ஆயுதத்தை எடுத்தே விட்டான். அப்போதும் தர்மர்
அவர்களை கண்களால் கடுமையாகப் பார்த்தார்.
துச்சாதனன்
திரவுபதியின் அருகில் நெருங்கினான்.
அப்போது, பாஞ்சாலித் தாய் கைகுவித்து, கண்ணா, என் அண்ணா, நீயே கதி என
கரங் குவித்து வணங்கினாள். கண்களில் வெள்ளம் பொங்கி வழிந்தது.
அவன் நெருங்கவே, புடவைத் தலைப்பை இறுகப்
பற்றிக்கொண்டு, என்னைக் காப்பாற்ற இங்குள்ள யாருமே
தயாராயில்லை. என் கணவர்களும் செயலிழந்து நிற்கின்றனர்.
கட்டியவனும் கைவிட்ட பிறகு, கண்ணா, நீதானே துணை நிற்க முடியும். என்னைக் காக்க ஓடிவா,
என்றாள்.
அப்போது, கண்ணன் ருக்மணியுடன்
சொக்கட்டான். ஆடிக்கொண்டிருந்தார். மனதுக்குள்
சிரித்தார். இப்போதும் இந்த திரவுபதி தன் புடவையை
நம்புகிறாள் அது தன் மானத்தைக் காப்பாற்றும் என்று. என் மீது
நம்பிக்கையிருந்தால், புடவை தலைப்பை விட்டுவிட்டு என்னை
மட்டும் வண்ஙகி நிற்க வேண்டியது தானே என நினைத்துக் கொண்டார். துச்சாதனன் புடவைத் தலைப்பில் கை வைத்து அதை இழுக்க முயற்சிக்கவும் அதிர்ந்து
போன பாஞ்சாலி, நிஜமாகவே கண்ணனின் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்தாள். புடவைத் தலைப்பை விட்டுவிட்டு, தலைகளின் மீது கரங்களைக் குவித்து, சங்குசக்ர
கதாதாரீ! புண்டரீகாக்ஷ ! மதுசூதனா!
கோவிந்தா ரக்ஷமாம் சரணாகதம் என கூவி அழுதாள். ஏ
கோவிந்தனே ! உன்னை நான் முழுமையாக சரணடைந்து விட்டேன் எனக்
கதறினாள். அவ்வளவு தான் ! கண்ணன்
சொக்கட்டான் ஆட்டத்தில் இருந்து எழுந்து விட்டான். ருக்மணி,
பாதியில் எங்கே செல்கிறீர்கள் ? என்றாள்.
ருக்மணி ! இங்கே நாம் பொழுதுபோக்கிற்காக
சொக்கட்டான் ஆடுகிறோம். அங்கே என் பக்தை இதே ஆட்டத்தால்
துகிலையே இழக்கப் போகிறாள். என்றவர், அக்ஷய
(வளரட்டும்) என்றார்.
No comments:
Post a Comment