மகாபாரதம்
பகுதி-25
தந்தையே! நீங்கள் சிரிப்பது
எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இது உங்களுக்கு சொந்தமான
பூமி. இந்த பூமியை பாண்டவர்களின் வசம் ஒப்படைப்பதில் எந்த
நியாயமும் இல்லை. தர்மன் முன்பு போல இப்போது இல்லை. அவனது தம்பிமார்கள் அகங்காரம் பிடித்து அலைகின்றனர். அவர்களால் எனக்கு இப்போது அரசாங்கத்தில் செல்வாக்கு இல்லை. பெருமை மிகவும் குறைந்து விட்டது. எனவே, இந்த ராஜ்யத்திற்கு என்னை யுவராஜா ஆக்குவதே முறையானது, என்றான் துரியோதனன். துரியோதனன் தன் நிலையை தானே
குறைத்து சொன்னது திருதராஷ்டிரனுக்கு அவமானமாக இருந்தது. தம்பி
புத்திரர்கள் பெருமையில் மேலோங்கி இருப்பதை தானே ஒப்புக்கொண்ட தன் மகனைப் பற்றி
அவன் வருத்தப்பட்டான். இருப்பினும், அவன்
மனுநீதி தவற விரும்பவில்லை. துரியோதனா! நீ நினைப்பது தவறு. இந்த ராஜ்யம் எனக்கு சொந்தமானது
அல்ல. இது இறந்து போன என் தம்பி பாண்டுவுக்கு உரியது.
எனவே, அவனது பிள்ளைகள்தான் இந்த ராஜ்யத்தை
ஆளுவதற்கு உரிமை பெற்றவர்கள். அவர்கள் சிறியவர்களாக
இருப்பதால் தம்பியின் ராஜ்யத்தை நான் பொறுப்பேற்று ஆண்டு வருகிறேன். சில காலம் நான் ஆண்டேன் என்பதற்காக ராஜ்யம் எனக்கு சொந்தம் என்று சொன்னால்
பெரியோர்கள் பழிப்பார்கள். நீ ஆத்திரப்படுவதில் அர்த்தம்
ஏதும் இல்லை. எனவே, பாண்டவர்களை
அனுசரித்து செல். தர்மன் ஆண்டால் என்ன? நீ ஆண்டால் என்ன? எல்லாம் ஒன்றுதான். பாண்டவர்களுக்கு சொந்தமான இந்த பூமியை அவர்களோடு இணைந்து நீங்களும்
ஆளுவதற்கு உரிமையுடைவர்கள் தான். ஆனால், தலைமை பொறுப்பு அவர்களிடம் தான் இருக்க வேண்டும். இதுதான்
ராஜநீதி, என்றான் திருதராஷ்டிரன்.
துரியோதனனுக்கு
கோபம் இன்னும் அதிகமானது. தந்தையின் கருத்தை ஏற்றுக்கொள்ள அவன் மறுத்து விட்டான். அப்பா! எனக்கு
என் தம்பிமார்கள் இருக்கிறார்கள். மாமா சகுனி சிறந்த
ஆலோசகராக இருக்கிறார். என் தாயின் சகோதரனான அவர் எப்போதும்
என் நலத்தையே விரும்புகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் மேல்
என் நண்பன் கர்ணன் என் மீது உயிரையே வைத்திருக்கிறான். இவர்களின்
கருத்துப்படி இந்த நாடு எனக்குத்தான் சொந்தம். அவர்களின் உதவியோடு
இந்த நாட்டை நான் கைப்பற்றி விடுவேன். பாண்டவர்கள் என் ஜென்ம
விரோதிகள். அந்த சிறுவர்களோடு நான் ஒருபோதும் சேரமாட்டேன்.
நீங்களாக எனக்கு பட்டம் சூட்டுகிறீர்களா அல்லது நானாக எடுத்துக்
கொள்ளட்டுமா? 99 பேரை தம்பிகளாக கொண்ட நான் யாருக்கு பயப்பட
வேண்டும்? அத்துடன் மிகப்பெரிய தம்பியாக என் நண்பன் கர்ணன்
இருக்கிறான். அனைவருமே மாபெரும் வீரர்கள். எனக்காக உயிரையும் கொடுப்பவர்கள். பாண்டவர்களுடன்
யுத்தம் செய்து நாட்டை எனக்கு வாங்கி கொடுப்பார்கள். இப்படியெல்லாம்
ஒரு நிலைமை உருவாவதை விட நீங்களே பாண்டு புத்திரர்களிடம் நயமாக பேசி நாட்டை
என்னிடம் வாங்கி கொடுங்கள், என சற்றும் நியாயம் இல்லாமல்
பேசினான். திருதராஷ்டிரனுக்கு என்ன செய்வது என்று
புரியவில்லை. அவனது மனம் அலைபாய்ந்தது. பீஷ்மரையும், தன் தம்பி விதுரனையும் வரச்சொல்லி ஆள்
அனுப்பினான். அவர்கள் அவசரமாக வந்து சேர்ந்தனர். ஆட்சி சூத்திரத்தில் சிறந்தவர்களே! நான் இப்போது
சிக்கலான நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். நீதி பெரிதா?
பாசம் பெரிதா? என்ற கேள்விகள் என்னை வட்ட
மிடுகின்றன. உங்களுக்கு தெரியாதது ஒன்றும் அல்ல. ஏற்கனவே என் பிள்ளைகளுக்கும், என் தம்பி பாண்டுவின்
பிள்ளைகளுக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதிலும், பலசாலியான பீமனைக் கண்டால் என் மகன்
துரியோதனனுக்கு அறவே பிடிப்பதில்லை. அர்ஜுனனின் வில் வீரம்
கண்டு மற்ற பிள்ளைகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.
என்
தம்பி குமாரர்கள் எல்லா வகையிலும்,
உயர்ந்தவர்கள் என்பதை நான் அறிவேன். என்
பிள்ளைகள் என்பதற்காக துரியோதனாதிகளை நான் உயர்த்திப் பேச விரும்பவில்லை. அதேநேரம், இந்த இருவரின் பகைமையையும் தீர்த்து வைக்க
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்கு உங்களின் ஆலோசனை
வேண்டும். இப்போதைக்கு அவர்கள் சேர்ந்திருப்பது நல்லதல்ல.
இருதரப்பாரையும் பிரித்து வைக்க வேண்டும். நான்
இப்படி செய்வதில் உங்களுக்கு ஏதும் ஆட்சேபம் இருக்கிறதா? என
கேட்டான். பீஷ்மரும்,
விதுரரும் ஆலோசித்தார்கள். அவர்களுக்கும்
திருதராஷ்டிரனின் நிலைமை நன்றாக புரிந்தது. இருவரும்
திருதராஷ்டிரரிடம், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும்
இளமைக் காலத்தில் இருந்தே போராட்டம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக கவுரவர்கள் எங்கள் சொல்லை கேட்கவே மாட்டார்கள். எனவே, அவர்கள் மனம் போன படி நடக்கட்டும். இது விஷயத்தில் எங்கள் முடிவை எதிர்பார்க்க வேண்டாம். நீங்களே உங்கள் விருப்பம் போல் செய்து விடுங்கள் என சொல்லிவிட்டு நகர்ந்து
விட்டனர். சிறந்த அரசியல் ஆலோசகர்களான பீஷ்மரும், விதுரருமே இப்பிரச்னையை கை கழுவியதும் திருதராஷ்டிரனுக்கு குழப்பம்
இன்னும் அதிகமாகிவிட்டது. குழப்பதின் முடிவில் பிள்ளைப்பாசமே
ஜெயித்தது. வஞ்சகம் செய்து தன் குழந்தைகளுக்கே நாடு சேர
வேண்டும் என முடிவு செய்து விட்டான். துரியோதனனையும் தனது
மந்திரி புரோசனனையும் அழைத்தான். சதி ஆலோசனை துவங்கியது.
துரியோதனன் மிக மெதுவாக தன் தந்தையிடம், தந்தையே!
பாண்டவர்களை எங்கோ ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பதில் எந்த பயனும்
இல்லை. ஏனெனில் அவர்கள் மீண்டும் திரும்பி வந்து ராஜ்யத்தில்
பங்கு கேட்பார்கள். எனவே, நான் சொல்வதை
கேளுங்கள். வாரணாவத நகரத்துக்கு அவர்களை அனுப்புங்கள்.
அவர்கள் அங்கே சென்றதும் அவர்களை நான் தீர்த்துக்கட்டி விடுகிறேன்.
பாண்டவர்கள் சாகவேண்டும். அப்போதுதான்
எங்களால் நிம்மதியாக நாட்டை ஆள முடியும் என்றான். திருதராஷ்டிரனனும்
வேறு வழியின்றி இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான். மந்திரி
புரோசனன் வாரணாவத நகரத்திற்கு புறப்பட்டான். பாண்டவர்களை
நம்ப வைப்பதற்கு அந்நகரில் மாடமாளிகைகளை எழுப்பினான். இந்திரலோக
தலைநகரான அமராவதி கூட இந்த அளவுக்கு அழகாக இருக்குமா? என்று
பிறர் சொல்லும் அளவிற்கு பல இடங்களில் கோபுரங்களை கட்டினான். எங்கு பார்த்தாலும் சிற்பங்கள். மாளிகைகளைச் சுற்றி
சோலைகளை அமைத்தான். அந்த நகரம் புதுப்பிக்கப்பட்ட பிறகு
தர்மரை அழைத்தான் திருதராஷ்டிரன்.
No comments:
Post a Comment