மகாபாரதம்
பகுதி-66
அவ்வாறு
ஏக்கப்பார்வை பார்த்த குந்தியிடம், அத்தை!
உனக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச்
சொல்லப் போகிறேன். முன்னொரு காலத்தில், நீ துர்வாச முனிவரிடம்
சகல தேவர்களையும் அழைக்கும் வரம் ஒன்றைப் பெற்றது
நினைவிருக்கிறதா? என்றார் கிருஷ்ணர். குந்திதேவி
அதிர்ந்தாள். இந்த விஷயம் இவனுக்கு
எப்படி தெரிந்தது? அவ்வாறு சிந்தித்த அடுத்தகணமே,
அந்த அதிர்ச்சி நியாயமற்றது என்பதையும், லோக நாயகனான இந்த
திருமாலுக்கு எது தான் தெரியாது
என்பதையும் தெரிந்து கொண்டு, கண்ணா! இப்போது
அதற்கென்ன! என்றாள். நீ சூரிய பகவானை
நினைத்த போது என்ன நடந்தது?
என அடுத்த கேள்வியை கிருஷ்ணர்
வீச, குந்திதேவி அவமானத்தால் தலைகுனிந்தாள். கிருஷ்ணர் அவளைத் தேற்றினார். அத்தை!
இதில் வருத்தப் படுவதற்கு ஏதுமில்லை. நடந்தவற்றையும், முடிந்தவற் றையும் நினைத்து வருத்தப்படுபவர்கள்,
உலகில் வாழ்வதற்கே தகுதியில்லாதவர்கள். அப்போது, உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததும்,
அவனை நீங்கள் பெட்டியில் வைத்து
ஆற்றில் விட்டதும் தெரிந்த விஷயங்கள். அதன்
பிறகு என்ன நடந்தது தெரியுமா?
என்றதும், அவமானமாக இருந்தாலும், தன் குழந்தையை பற்றி
இந்த வெண்ணெய் திருடன் ஏதோ சொல்ல
வருகிறான் என்பது மட்டும் அவளுக்கு
புரிந்து விட்டது.
அவள் ஆர்வத்துடன், கிருஷ்ணா! அவன் இருக்குமிடம் உனக்குத்
தெரியும். அவன் நிச்சயமாக உயிருடன்
தான் இருக்கிறான். சொல், என் செல்வத்தை
நீ பார்த்தாயா? என்றதும், கிருஷ்ணர் மீண்டும் சிரித்தார். அத்தை! உனக்கு அன்றைக்கு
அந்த சூரியன் விஷயத்திலும் அவசரம்தான்.
இப்போது, அந்த சூரிய மைந்தனின்
விஷயத்திலும் அவசரம் தான். ரகசி
யம் பேசும் போது அவசரம்
கூடாது. ஏனெனில், சுவர்கள் கூட அதை ஒட்டுக்கேட்டு,
தெரியக்கூடாதவர்களுக்கு தெரிய வைத்து விடும்,
என்ற கண்ணன், அவளுக்கு மட்டுமே
கேட்கும்படியாக, கர்ணன்... கர்ணன்... கர்ணன் என்றதும், குந்திதேவி
அகம் மகிழ்ந்தாள். யார்...கொடை வள்ளல்
கர்ணனா? வந்தவர்க்கு இல்லை என சொல்லாத
அந்த தெய்வ மகனா? ஐயோ!
அவன் இப்போது, துரியோதனனிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறான்?
அவனா, என் பிள்ளைகளை எதிர்த்து
போரிடப் போகிறான்? அர்ஜுனன் தன் தம்பி என்பது
தெரிந்தால் அவன் நிச்சயம் போர்க்
களத்துக்கு வரமாட்டான், என்று அவசரப்பட்டு சொன்னாள்
குந்தி. அதையே தான் நானும்
சொல்கிறேன், அத்தை. நீ கர்ணனிடம்
போ. நீயே அவனது தாய்
என்பதைச் சொல். அண்ணன், தம்பிகள்
சண்டை போட்டால், உலகம் பழி தூற்றும்
என எடுத்துச் சொல். பாசத்துக்கு கட்டுப்பட்டு
அவன் நம் பக்கம் வந்து
விடுவான். ஒருவேளை, அவன் மறுத்தால், நீ
அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல்
அர்ஜுனன் மீது எய்யக் கூடாது
என உறுதி வாங்கி விடு.
மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்,
என்றார் கிருஷ்ணர்.
கிருஷ்ணா!
நீ வெண்ணெயையும், பக்தர்களின் உள்ளங்களையும் மட்டும் தான் திருடுவாய்
என நினைத்திருந்தேன். ஆனால், கர்ணன் துரியோதனனிடம்
போய் சேருவதற்கு முன்பே, அவன் இந்த
இடத்தில் இருக்கிறான் என்பதை என்னிடம் சொல்லாமல்
மறைத்து விட்ட பெரும் திருடனாகி
விட்டாய். இதை முன்பே, என்னிடம்
சொல்லியிருந்தால், அவன் துரியோதனன் பக்கம்
செல்லாமல் தடுத்திருப்பேன். தெய்வமே! நீ என்ன நினைத்து
இப்படி ஒரு நாடகத்தை நடத்தினாய்!
ஒரு தாயின் உணர்வை நீ
புரிந்து கொண்டாயா? நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல்
பிரயோகித் தால் அர்ஜுனன் மடிவான்.
அப்படி பயன்படுத்தாவிட்டால், கர்ணன் அழிவான். எப்படி
பார்த்தாலும், என் பிள்ளைகளில் ஒருவரை
நான் இழக்க வேண்டி இருக்கிறது,
எனச்சொல்லி அழுதாள். கிருஷ்ணர் இப்போதும் சிரித்தார். எல்லோருமே தனக்கு சாதகமாக நடக்க
வேண்டும் என்றே என்னிடம் கேட்கிறார்கள்.
நான் என்ன செய்வேன்? துரியோதனனுக்கு
கூட அவன் பக்கம் நான்
இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது.
ஒன்றை யோசித்துப் பார் அத்தை. கர்ணனிடம்,
நீ இந்த வரத்தைக் கேட்பதால்,
அவன் ஒருவன் மட்டுமே அழிவான்.
அதற்கு நீ விரும்பாவிட்டால், ஐந்து
பிள்ளைகளை இழப்பாய். ஒன்று பெரிதா... ஐந்து
பெரிதா என்பது உனக்குத் தெரியும்
என்ற கிருஷ்ணர், அழுது புலம்பிய அவளைத்
தேற்றி விட்டு விடைபெற்றார். அவசரமும்,
பெரியவர்களைச் சோதித்துப் பார்ப்பதும் வாழ்க்கையில் பல துன்பங் களுக்கு
காரணமாக அமைகிறது.
குந்திதேவிக்கு
துர்வாச முனிவர், தேவர்களை அழைத்தால் அவர்கள் அவள் முன்
வந்து நிற்பார்கள் என்ற வரத்தைக் கொடுத்தார்.
திருமணத்துக்கு முன்னமே அவசரப்பட்டு, அவள்
அதைச் சோதித்துப் பார்த்ததன் விளைவாக கர்ணன் பிறந்து
விட்டான். இதனால் இப்போது அவஸ்தைப்படுகிறாள்.
தீ சுடும் என்று தெரிந்தும்,
அதைக் கையால் தொட்டுப்பார்த்தால் எப்படியோ?
அப்படித்தான், மூத்தவர் சொல் உண்மை தானா
என்று சோதித்துப் பார்ப்பதும். மூத்தோர் தங்கள் அனுபவங்களையே இளைய
தலைமுறைக்கு கற்றுத்தரு கிறார்கள். அது உண்மையென நம்ப
வேண்டும். அதைச் சோதித்துப் பார்க்க
நினைத்தால், கடவுள் கூட கைவிட்டு
விடுவார் என்பதை பாரதத்தின் இப்பகுதி
உணர்த்துகிறது. கிருஷ்ணர் அவளை கர்ணன் இல்லத்துக்கு
புறப்படும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். இந்த
சமயத்தில், அதிபயங்கர சதித்திட்டம் ஒன்று திருதராஷ்டிரனால் வகுக்கப்பட்டது.
அவன், தன் மகன் துரியோதனன்,
துச்சாதனன் மற்றும் மைத்துனன் சகுனி,
மந்திரி பிரதானிகளை வரவழைத்தான். போர் பற்றி ஆலோசித்தான்.
அப்போது துரியோதனன், தந்தையே! காட்டில் இருந்த பாண்டவர்களை வலுக்
கட்டாயமாக வரவழைத்து, நாட்டைத் திருப்பிக் கேட்கச் சொல்பவன் இந்த
கிருஷ்ணன் தான். அவன் தன்
மாயாவித் தனத்தை நம்மிடம் காட்டுகிறான்.
அவனை என்ன செய்யலாம்? என்றான்.
அதற்கு திருதராஷ்டிரன், மகனே! ஒரு புலி
தானாகவே வந்து வலையில் மாட்டிக்
கொண்டால், வேடன் அதை விட்டு
வைப்பானா? அதுபோல், நம் ஊருக்கு வந்து,
விதுரனின் மாளிகையில் தங்கியிருக்கும் கண்ணனையும் கொன்று விட வேண்டியது
தான், என்றான். இதுகேட்டு, கவுரவர்களில் நியாயஸ்தனான விகர்ணன் கொதித்துப் போனான்.
No comments:
Post a Comment