Wednesday, 19 November 2014

மகாபாரதம் பகுதி 070


மகாபாரதம் பகுதி-70

ஆனால்... என இழுத்த தேவேந்திரனை கர்ணன் கேள்விக்குறியுடன் பார்த்தான். கர்ணா... இந்த வேலை நீ அர்ஜுனன் மீது வீசக்கூடாது. பீமனின் மகன் கடோத்கஜன், பாரதப்போரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களில் ஒருவனாக இருப்பான். கவுரவப்படையில் பெரும்பகுதியை அழிப்பான். அவனைக் கொல்ல நீ இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் கவுரவ சேனைக்கு நீ அதிகத் தொண்டு செய்தவன் ஆவாய். மேலும், பீமனின் மகனைக் கொன்றால், உன் நண்பன் துரியோதனன் மகிழ்ச்சியின் எல்லையை அடைவான். உன்னை இன்னும் அன்புடன் நடத்துவான், என்றான். கர்ணன் தேவேந்திரனை வணங்கி அந்த வேலாயுதத்தை வாங்கிக் கொண்டான். பின்னர் தேவேந்திரன் வந்த வேலை சிறப்பாக முடிந்த சந்தோஷத்துடன் புறப்பட்டுச் சென்று, கிருஷ்ணரிடம் தகவல் சொன்னான். இதுகேட்ட கிருஷ்ணர், அடுத்த கட்ட வேலையை உடனடியாக ஆரம்பித்தார். குந்திதேவியை அணுகி, அத்தை! நீ உடனே கர்ணனைச் சந்தித்து, முன்பு நான் உன்னிடம் சொன்னது போல் வரங்களைப் பெற்று வா. நினைவில் வைத்துக் கொள். நாகாஸ்திரத்தை ஒரு தடவைக்கு மேல் அர்ஜுனன் மீது பிரயோகிக்க கூடாது என்பது முக்கிய வரம் என்பதை மறந்து விடாதே, என்று சொல்லி அனுப்பினார்.

குந்திதேவி கர்ணனின் மாளிகையை அடைந்தாள். ஏற்கனவே கிருஷ்ணர் கர்ணனிடம், குந்தி தான் அவனது தாய் எனச் சொல்லியிருந்தாலும், அவர் ஒரு மாயக்காரர் என்பதால், கர்ணன் அவரது வார்த்தையை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தான். இப்போது, அந்தத்தாயே திடீரென வந்தது குழப்பத்தை இன்னும் அதிகமாக்கியது. ஆனாலும், எதிரியையும் வரவேற்கும் கர்ணன், அந்தத்தாயை வரவேற்றான். அம்மா! தாங்கள் எனது அரண்மனைக்கு எழுந்தருள என்ன தவம் செய்தேனோ? என மனதார அவளை உபசார வார்த்தைகள் சொல்லி மகிழ்வித்தான். தாயே! தாங்கள் இங்கு வந்ததன் காரணத்தை இந்தச்  சிறுவன் அறிந்து கொள்ளலாமா? என அவளது பாதத்தின் அருகே அமர்ந்து கொண்டு குழந்தை போல கேட்டான். மகனே! என ஆரம்பித்த குந்திதேவி ஏங்கி ஏங்கி அழுதாள். எப்படி சொல்வேனடா... என் செல்வமே! நான் ஒரு கொடுமைக்காரி. கொடுமையின் சின்னமாக உன் முன்னால் வந்து நிற்கிறேன். குற்றவாளியான எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு, என புடவைத்தலைப்பில் முகத்தைப் புதைத்து அழுதாள். கர்ணன் கலங்கி விட்டான். தாயே! அன்பு, அரவணைப்பு, கருணை, சாந்தம் ஆகிய வார்த்தைகளே உங்களைப் பார்த்து தான் அம்மா... இவ்வுலகிலேயே பிறந்தன. அப்படிப்பட்ட குணவதியான தாங்களா கொடுமைக்காரி... குற்றவாளி... ஐயோ! இதைக் கேட்கவே காது கூசுகிறதே. மற்றும் ஒருமுறை அப்படி சொல்லாதீர்கள். என் பிராணன் போய்விடும், என்று கண்ணீர் மல்கச் சொன்னான் கர்ணன். இல்லையப்பா... நிஜத்தைத் தான் சொல்கிறேன். கர்ணா... நடந்ததைக் கேள், என்றவள், அவனைப் பெற்றது, ஆற்றில் விட்டதையெல்லாம் விபரமாகச் சொல்லி முடித்தாள்.

கர்ணன் எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டான். அம்மா! இதென்ன புதுக்கதை. பாண்டவர்களை அழிக்கும் ஒரே சக்தி நான் மட்டுமே என்பதால், அவர்களைக் காப்பாற்ற இப்படி சொல்கிறீர்களா? இதை என்னால் நம்ப முடியவில்லை. தாயே! என் பணத்திற்கு ஆசைப்பட்டு, இந்த மாளிகைக்கு ஆசைப்பட்டு, பல பெண்கள் இங்கே வந்தனர். அவர்கள், நான் தான் உன் தாய் என்றனர். இதுபற்றி நான் தேவர்களிடம் முறையிட்டேன். அவர்கள்
என்னிடம் ஒரு வஸ்திரத்தைக் கொடுத்து, உன்னைத் தேடி வரும் பெண்களிடம் இதைக் கொடு. உன்னிடம் பொய் சொல்பவர்கள், இதை அணிந்தால் எரிந்து சாம்பலாவார்கள் என்றனர். அப்படி பல பெண்கள் இறந்து போனார்கள். தாங்களோ ராஜமாதா. எங்கள் தலைவி. உங்களை பரீட்சிக்கும் தைரியம் எனக்கில்லை என்றாலும், சூழ்நிலை என்னை தங்கள் முன் கைதியாக்கி நிறுத்தி விட்டிருக்கிறது, என்று கர்ணன் சொன்னதும், அகம் மகிழ்ந்து போனாள் குந்தி. கர்ணா! இதை விட நிரூபணம் என்ன வேண்டும்? தேவ சாட்சியாக, நானே உன் தாய் என்பதை நிரூபிக்கிறேன். கொடு அந்த வஸ்திரத்தை, என்றாள். கைகள் நடுங்க, என்னாகப் போகிறதோ என்ற அச்சத்துடன் கலங்காத கர்ணன் அவளிடம் வஸ்திரத்தை எடுத்து வந்து நீட்டினான். அதை தன்மேல் வெகு லாவகமாக அணிந்து கொண்டாள் குந்தி. அவளுக்கு ஏதும் ஆகவில்லை. தாயே! என அவளை அப்படியே அணைத்துக் கொண்ட கர்ணன், குழந்தையிலும் சிறியவனாகி அழுது தீர்த்தான்.என்னை ஏன் தாயே வெறுத்தீர்கள்! நான் என்ன பாவம் செய்தேன் அம்மா.. தர்மனைப் போல, பீமனைப் போல, மாவீரன் அர்ஜுனனை போல, நானும் உன் வீரப்பிள்ளை தானே தாயே! அப்படியிருந்தும், ஊர் சொல்லுக்கு அஞ்சி என்னை ஆற்றில் விட்டு விட்டீர்களே! நான் பாவி...நான் பிறந்திருக்கவே கூடாது. என் முன்வினைப் பயனே என்னை அன்பு வடிவான தங்களிடமிருந்து பிரித்தது, என புலம்பி அழவும், தாய் குந்தியின் மார்பில் இருந்து பால் சுரந்தது.மகனே! அழாதே. அன் றைய சூழ்நிலை அப்படி... இன்று நிலைமை மாறிவிட்டது. என்னைத் தாயென்று அறிந்த பின்பும், நீ இனி இங்கிருப்பது தவறு. வா... என்னோடு! நம் இருப்பிடத்திற்கு போய் விடலாம். உன் தம்பிமார், நீயே அவர்களது சகோதரன் என தெரிந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவர். நீயும் பாண்டவர் குலத்தவன் என தெரிந்து விட்டால், இந்த உலகமே உனக்கு தலைவணங்கும். உன்னிலும் உயர்ந்தவர் வேறு யாரும் இருக்க முடியாது, என பாசத்தோடு சொன்னாள்.

கர்ணன் சிரித்தான்.



             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer