Wednesday, 19 November 2014

மகாபாரதம் பகுதி 073


மகாபாரதம் பகுதி-73

மாயங்கள் புரிவதில் வல்லவரான கிருஷ்ணரின் யோசனையில் உதித்தது ஒரு திட்டம். அமாவாசையன்று அரவானை களபலி கொடுத்தால், கவுரவர்களின் வெற்றி உறுதியாகி விடும். எனவே, அமாவாசையையே மாற்றி விட்டால் என்ன! அதெப்படி முடியும், கிரகங்களின் சஞ்சாரத்தை யாரால் கட்டுப்படுத்த முடியும்! கடவுளால் அது முடியும். ஏனெனில், கிரகங்கள் அவரால் படைக்கப்பட்டவை. அவர் சொல்வதைக் கேட்டு நடப்பவை. கிருஷ்ணர், நாராயணனின் அம்சம் தான். கடவுள் தான்! இருப்பினும், இப்போதைக்கு அவர் பூமியில் மனிதனாக பிறந்திருக்கிறாரே! அப்படியிருக்க ஒரு மனிதனுக்கு கிரகம் எப்போது கட்டுப்படும்? அவன் புத்தியை பயன் படுத்தும் போது! கிரகங்களின் சாரத்தைப் பற்றி நீங்கள் படிக்கிறீர்கள். ராசிபலன் அவ்வளவு சரியில்லை என்றால், அதில் என்ன பலன் சொல்லப்பட்டுள்ளதோ, அதற்கேற்ப நமது நடை முறையை மாற்றி மைத்துக் கொண்டால்,கிரகங்கள் அந்த கடமை யுணர்வுக்கு மகிழ்ந்து, தாங்கள் தர இருந்த கெடுபலனை விலக்கிக் கொள்ளும்.

பணம் வராது என போட்டிருந்தால், நாம் வீட்டுக்கள் முடங்கி விடக்கூடாது. இன்று பத்து ரூபாயாவது சம்பாதித்து விட வேண்டும் என்ற முயற்சி எடுத்து, எவ்வளவு கடினமான பணியென்றாலும் செய்து வந்து விட்டால், கிரகங்கள் நமக்கு அடிமையாகி விடும். இந்த அடிப்படைத் தத்துவத்தை தான் உலக மக்களுக்கு தனது செயல் மூலம் கிருஷ்ணர் இப்பகுதியில் எடுத்துக் காட்டுகிறார். அமாவாசைக்கு முதல் நாளான சதுர்த்தசியன்றே, அமாவாசை திதியை வரவழைத்து குழப்பத்தை விளைவித்து விட்டால் என்ன என்று யோசித்தார். சில அந்தணர்களை அழைத்தார். ஓய்! இன்று தான் அமாவாசை. தர்ப்பணம் செய்ய வாருங்கள், என்று அழைத்தார். அவர்களுக்கு சந்தேகம். கிருஷ்ணா! நாளையல்லவா அமாவாசை! நீர் இன்றே தர்ப் பணம் செய்ய  சொல்கிறீரே! என்றவர்களை, தன் சாமர்த்தியத்தால் பேசியே கட்டுப்பட வைத்தார்.

தர்ப்பணத்தை அவர் தொடங்கினர். இதைப் பார்த்து, மற்ற அந்தணர்களும் குழம்பிப்போய்கிருஷ்ணரே தர்ப்பணம் செய்கிறார், இன்றுதான் அமாவாசையாக இருக்கும், எனக்கருதி தர்ப்பணம் செய்ய, வானில் சஞ்சாரம் செய்த சூரிய, சந்திரர் குழப்பமடைந்தனர். அவர்கள் நேராக பூமிக்கு வந்து,கிருஷ்ணா! நாங்கள் இணைந்திருக்கும் நாள் நாளை தானே வருகிறது. நாளை அமாவாசையாக இருக்க, நீர் இன்றே தர்ப்பணம் செய்கிறீரே! என்ன நியாயம்? என்றார். உடனே கிருஷ்ணர் சமயோசிதமாக, நீங்கள் இணைந்திருக்கும் நாட்களெல்லாம் அமாவாசை என்றால், இன்றும் அமாவாசை தான். இப்போது, இருவரும் இணைந்து தானே வந்திருக்கிறீர்கள், என்றதும், அவர்களால் ஏதும் பேச முடியவில்லை.தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிருஷ்ணரின் இந்த நாடகத்தில், தங்கள் பங்கும் எதிர்காலத்தில் பேசப்படும் என்ற மகிழ்ச்சியுடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். பின்னர், அவசரமாக பாண்டவர்களின் இருப்பிடத்திற்குச் சென்ற கிருஷ்ணர், தர்மா! இன்று சூரியசந்திரர் ஒன்றாக இணைந்து வந்து விட்டனர்.

ஆகவே, அமாவாசையான இன்றே களபலி கொடுத்து விட வேண்டும். ஏற்பாடு செய், என்ற கிருஷ்ணரிடம், களபலியாக யாரைக் கொடுப்பது? என்று கேட்டார் தர்மர். இதென்ன கேள்வி தர்மா! என் மைத்துனர்களுக்காக என்னை பலி கொடுக்க சம்மதிக்கமாட்டேனா! என்னையே பலி கொடு, என்று அவர்களைச் சோதிக்கும் வகையில் கிருஷ்ணர் சொல்லவும், அதிர்ந்து போன பாண்டவர்கள் அவரது பாதங்களில்  சரணடைந்தனர். மைத்துனா! உம்மை பலி கொடுத்து தான், நாங்கள் நாடாள வேண்டும் என்றால், அந்த நாடும் எங்களுக்கு தேவையில்லை, இந்த உயிரும் தேவையில்லை. நீர் இல்லாமல், நாங்கள் ஏது? தர்மம் ஏது? இந்த உலகம் தான் ஏது? என்று அவர்கள் கண்ணீர் சிந்தினர். கிருஷ்ணர் அவர்களின் பக்தி கண்டு மகிழ்ந்தார்.அந்நேரத்தில் அங்கு வந்த அரவான், பரமாத்மாவே! தாங்கள் இப்படியா விபரீத மாகப் பேசுவது.


அமாவாசையன்று என்னை களபலி கொடுக்க பெரியப்பா துரியோதனனிடம் சம்மதித்திருந்தேன்அவரோ, நாளை தான் அமாவாசை என நினைத்து இதுவரை வராமல் இருக்கிறார். ஆனால், தங்கள் சக்தியால், இன்றே அமாவாசை வந்து விட்டது. பெரியப்பா சொன்ன நேரத்துக்கு வராததால்அவருக்காக குறிக்கப்பட்ட அதே சமயத்தில், பாண்டவர்களுக்காக பலியாகிறேன். என்னை பலி பீடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், என அவசரப்படுத்தினான். கிருஷ்ணருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. அரவான்! தியாகம் என்றால் இது தான் தியாகம்! பிறர் வாழ எவனொருவன் தன்னுயிரை துச்சமெனக் கருதி உயிர் விடுகிறானோ, அவன் எனக்குச் சமமானவன். இனி நீயும், நானும் ஒன்றென்றே உலகம் சொல்லும், எனச் சொல்லி அவனை அணைத்துக் கொண்டார். அப்போது அரவான் கிருஷ்ணரிடம், ஸ்ரீகிருஷ்ணா! வாழ்வின்  இறுதிக்கட்டத்திலுள்ள நான், ஒரு வரம் கேட்கலாமா? என்றான்.தாராளமாகக் கேள், தருகிறேன், என்ற கிருஷ்ணரிடம், கிருஷ்ணா! என்னை பலி கொடுத்து விட்டாலும், என் உயிர் பிரியக்கூடாது. குரு÷க்ஷத்திரப் போர் உக்கிரமாக நடக்கும். அந்த போர்க்காட்சிகளை சில நாட்களாவது நான் பார்க்க வேண்டும், என்றான். கிருஷ்ணரும் அந்த வரத்தைக் கொடுத்தார்.


             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer