மகாபாரதம்
பகுதி-19
பீமன்
மயங்கி விட்டான். இனி அவன் இறப்பது உறுதி என முடிவு செய்த துரியோதனனுக்கு உள்ளத்தில்
திடீரென சந்தேகம் ஏற்பட்டது. யாராவது இவனைப் பார்த்து
காப்பாற்றிவிட்டால்.... சந்தேகம் பெரிய வியாதி. அது இருப்பவன் எதிலும் திடமான முடிவெடுக்க முடியாது. அந்த சந்தேகம் அவர்களையே அழித்து விடும். துரியோதனன்
என்ற இந்த சந்தேகப்பேர்வழி என்ன செய்தான் தெரியுமா? மயக்கமடைந்த
பீமனை கயிறால் கட்டி, மீண்டும் கங்கையில் தூக்கி
வீசிவிட்டான். மயக்கமடைந்து விட்ட பீமன், தண்ணீரின் அடிக்கே போய் விட்டான். அவன் போன இடத்தின்
அடிப்பாகம் மிகப்பெரிய துவாரமாக இருந்தது. அந்த
துவாரத்தினுள் புகுந்து விட்ட அவனை அங்கிருந்த நாகங்கள் கடித்தன. அதனால் நிலைமை எதிர்மறையானது.
நாகங்கள் கக்கிய கடும் விஷம், ஏற்கனவே
அவனது உடலில் இருந்த விஷத்தை முறிக்கவே, அவன் மயக்கம்
தெளிந்தான். தண்ணீரின் அடியில் கிடப்பதைப் பார்த்து
சுதாரித்துக் கொண்டான். தன்னைச் சுற்றிலும் கிடந்த
நாகங்களைப் பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டான். நாகங்கள்
அந்த பலசாலியைக் கண்டு நடுங்கின. சில நாகங்கள் ஓடிப்போய்
தங்கள் தலைவனிடம் விஷயத்தைக் கூறின. நாகராஜன் விரைந்து
வந்தான். வந்திருப்பது பீமன் என்பது அவனுக்குத் தெரியும்.
அவனது பெயர் வாசுகி. பாற்கடலை தேவர்கள்
கடைந்தபோது, மேருமலைக்கு மத்தாக இருந்தவன் இந்த வாசுகி.
அதற்குப் பரிசாக அமுதத்தை குடம் குடமாகப் பெற்றிருந்தான். அதை கங்கைக்குள் இருக்கும் தன் சாம்ராஜ்யத்தில் பாதுகாப்பாக
வைத்திருந்தான்.
கங்கையில்
அப்படி என்ன விசேஷம் என்பவர்கள் இந்த இடத்தை உற்றுக்கவனிக்க வேண்டும். அமுதம் ஆயுளை
அதிகரிக்கக் கூடியது. சாகாவரம் தருவது. தேவர்கள் சாகாமல் இருப்பார்கள். மனிதர்களுக்கு அது
கிடைத்தால், தீர்க்காயுளுடன் வாழ்வதுடன், அதன்பின் பிறப்பற்ற நிலையடைந்து பரமானந்தம் பெறுவார்கள். அதனால் தான் கங்கையில் ஒரு தடவையாவது நீராடி விட வேண்டும் என
துடிக்கிறார்கள் பக்தர்கள். வாசுகி, பீமனின்
பலம் பற்றி அறிந்தவன். அவன் நினைத்தால் தங்கள் இனத்தையே
நசுக்கி விடுவான் என அவனுக்குத் தெரியும். அவன் தன்
லோகத்துக்கு அவனை அழைத்துச் சென்று குடம் குடமாக அமுதம் கொடுத்து உபசரித்தான்.
இதைக் குடித்ததால், பீமனின் மேனி ஒளிபெற்றது.
அவன் தீர்க்காயுளுடன் வாழும் வரத்தை பெற்று விட்டான். அழிக்க நினைத்து ஆற்றுக்குள் வீசப்பட்டவன் இங்கே ஆனந்தத்தை அனுபவித்துக்
கொண்டிருந்தான். வாசுகி அவனை எட்டு நாட்கள் தன்னுடன் தங்க
வைத்தான். சாப்பிடப் போன பிள்ளை திரும்பவில்லை என்றதும்,
குந்தி கவலையடைந்தாள். நாட்கள் அதிகமாகவே அழ
ஆரம்பித்து விட்டாள். விதுரர் அவளைத் தேற்றினார். அண்ணன் தர்மரும், மற்ற தம்பிகளும் காடு, ஆற்றங்கரை என எங்கெல்லாமோ சுற்றிப்பார்த்து ஆளைக் காணாமல் கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தனர். அம்மாவோ பீமன் இல்லாமல் யாரும் வீட்டுப்பக்கம்
வரக்கூடாது என விரட்டி விட்டாள். துரியோதனனுக்கு ஏகப்பட்ட
சந்தோஷம், நாள் எட்டைக் கடந்து விட்டதால். எதுவுமே தெரியாதவன் போல, அவனும் நல்லவன் போல்,
பீமனைத் தேட ஆரம்பித்தான். அவன் முகத்தை
வைத்தே, அவன் தான் பீமனுக்கு தீங்கிழைத்து விட்டான் என்பதை
பாண்டவர்கள் புரிந்து கொண்டனர். இருந்தாலும் கேட்க முடியாத
நிலை.
இந்நிலையில்
குந்தி பிள்ளையை காணாமல் சாப்பிட மறுத்து விட்டாள். பீஷ்மருக்கு தெரிந்து விட்டது. பீமன் பத்திரமாக நாகலோகத்தில் இருக்கிறான் என்று. ஏனெனில்,
அவர் முக்காலமும் அறிந்த ஞானி. இருந்தாலும்,
இதை வெளியிடவில்லை. பிற்காலத்தில் அவன்
நிகழ்த்தப்போகும் அற்புதங்களுக்கு அவனுக்கு நாகலோகத்தில் கிடைக்கும் அமிர்தமே பலம்
என்பதை அவர் அறியாதவரா என்ன! குந்தி! கவலைப்படாதே,
பீமன் வந்து விடுவான், என தேற்றினார். இக்காலத்தில் கோயில்களில் சாமியாடி குறி சொல்கிறார்கள் இல்லையா? அந்த வழக்கம் அப்போதும் இருந்தது. அரண்மனையில் உள்ள
சில சாமியாடுபவர்கள், ஆட்டம் போட்டு, பீமன்
வருவான் என்று குறி சொன்னார்கள். இருந்தாலும், பெற்ற மனம் பிள்ளையைக் காணாமல் தவித்தது. அது சரி...கங்கையில் மூழ்கியவனுக்கு மூச்சு அடைக்காதா! அவன்
எப்படி தண்ணீருக்குள் அப்படி கிடக்க முடிந்தது, என்றும்
நீங்கள் கேட்பீர்கள். பீமன் யாருடைய மகன்? வாயு பகவானின் மகனல்லவா! பிறகென்ன கவலை! காற்றின் மைந்தனை அந்த காற்றே கொல்லுமா? அதனால் அவன்
அனாயசமாகத் தண்ணீரில் கிடந்தான். எட்டுநாள் கழிந்ததும்,
பல வலிமை மிக்க நாகங்களை அழைத்த வாசுகி, பீமனை
மேற்பரப்பு வரை சுமந்து சென்று கொண்டுவிட உத்தரவிட்டான். பீமன்
அவனிடம் விடைபெற்று, மேலே வந்து சேர்ந்தான். அம்மா தன்னைத் தேடி அழுவாள் என்று அவனுக்குத் தெரியும். ஒரு தாய்க்கு தான் பெற்ற எல்லா குழந்தைகளையுமே பிடிக்கும். அதிலும், அதிகமாகச் சமர்த்தாக சாப்பிடும் பிள்ளைகளை
ரொம்பவே பிடிக்கும். சில பிள்ளைகள் எனக்கு அவியல் வேண்டாம்,
எனக்கு சாம்பார் பிடிக்காது, எனக்கு தேங்காய்
சட்னி பிடிக்காது, எனக்கு சப்பாத்தி ஒத்துவராது என
அடம்பிடிப்பார்கள். இவர்களை சமாதானம் செய்து சாப்பிட
வைப்பதற்குள் அம்மாவுக்கு போதும் போதுமென்றாகி விடும். நம்ம
பீமன் இருக்கிறானே! அவன் அப்படிப்பட்ட ரகம் கிடையாது.
என்ன கொடுத்தாலும் சரி... ஐம்பது, நூறு என வயிற்றுக்குள் அடுக்கி விடுவான். அப்படிப்பட்ட
சமர்த்து பிள்ளையைத் தாய் மனம் தேடாதா என்ன! அவன் வேகமாக
வந்தான். அம்மாவின் பாதத்தில் விழுந்தான். மற்ற பிள்ளைகள் என்றால் என்ன சொல்வார்கள்? அம்மா!
அவன் என்னை ஆற்றுக்குள் பிடித்து தள்ளி விட்டான். அவன் பள்ளிக்கூடத்தில் என்னை கிள்ளி விட்டான், என்று.
பீமன் தன் தம்பி அண்ணன் துரியோதனனைக் காட்டிக் கொடுக்கவில்லை.
அங்கு போனேன், இங்கு போனேன் என சமாளித்து
விட்டான். எப்படியோ, மகன் வந்தானே...என்று குந்தியும் மகிழ்ந்து போனாள்.
No comments:
Post a Comment