மகாபாரதம்
பகுதி-63
போர் நடப்பது என்பது உறுதியாகி
விட்டது. கிருஷ்ணர் பாண்டவர்களுக்கு ஆதரவு திரட்ட நல்ல
மனிதர்கள் ஒவ்வொருவரிடமும்
சென்றார். அதில் விதுரரும் ஒருவர்.
கிருஷ்ணர் விதுரரை சந்திக்க சென்ற
போது, விதுரர்
கிருஷ்ணரின் பாதக் கமலங்களைப் பணிந்து
வரவேற்றார். கண்ணா! அஸ்தினா புரத்துக்கு
எழுந்தருளிய நீ எனது இல்லத்திற்கு
வர வேண்டும், என அழைத்தார். நல்லவர்களின்
அழைப்பை ஆண்டவன் காலம் தாழ்த்தி
ஏற்பானே ஒழிய வராமல் இருக்க
மாட்டேன். பகவான் கிருஷ்ணர் அந்த
அழைப்பே ஏற்றார். செல்லலாம் விதுரரே! தங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கிறது,
போகலாம் என்றார். கிருஷ்ணர் தன்னுடன் ஐம்பது லட்சம் ராஜாக்கள்
புடைசூழ வந்திருந்தார். அவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப்
பின்தொடர்ந்து விதுரரின் மாளிகைக்குள் சென்றனர். எல்லோரையும் வரவேற்ற விதுரர், கண்ணா!
நீ இந்த ஏழையின் குடிசைக்கு
எழுந்தருளியது நான் செய்த பாக்கியம்.
ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே! உன் திருவடியை பணிகிறேன்,
என்றவர், கண்ணனின் கால்களைத் தூக்கி தன் தலை
மேல் வைத்தாரோ இல்லையோ! நல்வினை, தீவினை ஆகியவற்றால் ஏற்பட்ட
ஜனன, மரண துன்பங்கள் விதுரரை
விட்டு அகன்றன. இனி பிறவியில்லை
என்ற மகிழ்ச்சி ஏற்பட்டதும், கண்ணா! இந்த ஏழை
தரும் விருந்தையும் ஏற்றருள வேண்டும், என்றார்.
கிருஷ்ணர்
புன்னகையுடன் அதை ஏற்று, நல்லவர்களின்
இல்லத்தில் தரப்படுவது சிற்றுண்டியே ஆயினும், அதை பேருண்டியாக நினைத்து
ஏற்பேன், என்றார். விதுரர் மகிழ்ச்சியுடன், கண்களை
சற்றே திருப்ப அங்கே நின்ற
ஆறு லட்சம் சமையல்காரர்கள், விதுரரின்
கட்டளையைப் புரிந்து கொண்டு படபடவென வேலைகளைத்
துவங்கினர். சில மணி நேரங்களில்
உணவு தயாராகி விட்டது. ஐம்பது
லட்சம் பேர் வந்திருக்கிறார்களே! அத்தனை
பேருக்கும் சாப்பாடு தயார், அறுசுவை உண்ட
அவர்களுக்கு விதுரர் சந்தனமும், தாம்பூலமும்
தந்து உபசரித்தார். விதுரரின் இல்லத்திலேயே கிருஷ்ணர் சற்றுநேரம் ஓய்வும் எடுத்தார். பின்னர்
சம்பாஷணை துவங்கியது. கிருஷ்ணா! நீ இங்கே வந்த
காரணத்தை நான் அறியலாமா? என
விதுரர் கேட்டதும், விதுரரே! பாண்டவர்கள் வனவாசத்தை முடித்து விட்டு வந்து விட்டார்கள்.
அவர்களுக்குரிய இடத்தை அவர்களிடம் ஒப்படைக்க
வேண்டும். மறுத்தால், அவர்கள் துரியோதனனுடன் போரிடுவார்கள்.
கவுரவர்கள் அந்தப் போரில் அழிவது
உறுதி என்றதும், விதுரர் அவரிடம். கண்ணா!
அது நடப்பது போல் எனக்குத்
தெரியவில்லை. கவுரவர்கள் இவ்விஷயத்தில் வாதமாக உள்ளனர், என்றார்.
விதுரரே!
ஏழை ஒருவன் தன் எஜமானனிடம்
வயிற்றுப்பசி நீங்க பொருள் கேட்பான்.
எஜமானனே மறுப்பான். அதே ஏழை, உணர்ச்சிவசப்பட்டு
தன் மேல் அம்புகளை எய்ய
வருகிறான் என்றால், உயிருக்கு பயந்து எதை வேண்டுமானாலும்
கொடுத்து விடுவான். இதுதான் உலக நியதி.
துரியோதனனும் அந்த எஜமானனைப் போன்றவன்
தான். அவன் அடிப்பட்டுத்தான், ராஜ்யத்தை
திருப்பித்தர வேண்டும் போல் தெரிகிறது, என்ற
கிருஷ்ணர், விதுரரே! உம்மைப் போன்ற நல்லவர்
இல்லத்தில் சாப்பிட்டதும், உறங்கியதும், பேசியதும் மனதிற்கு இனிமையைத் தருகிறது. இதே உணர்வுடன் போய்,
துரியோதனனிடம் நான் பேச வேண்டும்,
என்று புறப்பட்டார். துரியோதனன் மூன்றரை லட்சம் அரசர்கள்
புடைசூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். சிற்றரசர்களே! நீங்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்
என்பதை மறந்து விடாதீர்கள். இப்போது
இங்கே கிருஷ்ணன் பாண்டவர்களுக்கு ஆதரவாக தூதனாக வரப்போகிறான்.
அவன் வரும்போது, மரியாதையாக யாரும் எழுந்து நிற்கக்கூடாது.
அவனை அலட்சியம் செய்ய வேண்டும், என
உத்தரவிட்டான்.
மன்னர்கள்
தலையை ஆட்டி வைத்தனர். இந்நேரத்தில்
கண்ணபிரான் துரியோதனனின் அவைக்கு வந்தார். அவர்
வந்தாரோ இல்லையோ! அந்த சுயரூபத்தை பார்த்தவுடனேயே
அவர்களையும் அறியாமல் எழுந்து நின்றனர் குறுநில
மன்னர்கள். மகாத்மா விதுரர், பீஷ்மர்,
துரோணர் அவர் மகன் அஸ்வத்தாமன்
எல்லாருமே எழுந்து நின்று அவரை
வரவேற்றனர். அவர்கள் கண்ணனின் திருவடியை
தரிசித்தார்கள். துரியோதனனின் நண்பன் கர்ணன் என்ன
செய்வதென தெரியாமல் மன அலைக் கழிக்கப்பட்டு
அமர்ந்திருந்தான். துரியோதனன் முகத்தைத் திருப்பி கொண்டான். சகுனிக்கோ அவமானம் பிடுங்கித் தின்றது.
தன் மருமகனைத் தூண்டி விட்டு, சிற்றரசர்களையும்,
மற்றவர்களையும் ஒடுக்கி வைத்தும் பயனில்லாமல்
போய்விட்டதே என மனம் வெதும்பினான்.
மூன்றரை லட்சம் பேரையும் ஒரே
நாளில் விரட்டியடித்து விட்டால் போரிட ஆள் வேண்டுமா?
என்ன செய்வதென தெரியாமல் துரியோதனன் கையைப் பிசைந்தான்.
எல்லாவற்றையும்
ஓரக் கண்ணால் நோட்டமிட்டபடியே வந்த
மாயக்கண்ணன், தன் சேஷ்டையைத் துவங்கினார்.
கால்விரலை பூமியில் பதித்து அழுத்தினார். உலகமே
ஒரு நிமிடம் ஆடியது போன்ற
உணர்வு எல்லோருக்கும் ஏற்பட்டது. இறைவனுக்கு மதிப்பு தராத நாடு
பூகம்பத்தில் சிக்கி அழியும் என்பதை
இதன் மூலம் கிருஷ்ணர் உலகத்துக்கு
உணர்த்தினார். எல்லாரும் சற்றே திகைத்தாலும், துரியோதனின்
சிம்மாசனம் மட்டும் கவிழ்ந்தே விட்டது.
அவன் படிக்கட்டுகளில் தவறிவிழுந்து, கண்ணனின் திருப்பாதத்தில் கிடந்தான். இறைவனுக்கு நல்லவன், கெட்டவன் என்ற பாகுபாடில்லை. எல்லாருக்குமே
தன் திருவடியைத் தர அவர் காத்திருக்கிறார்.
ஆனால், சில பாழும் மனிதர்கள்,
அதை அலட்சியம் செய்கிறார்கள். துரியோதனா! எழுந்திரு! வணக்கம் செய்யும் அவசரத்தில்
இப்படியா தவறி விழுவது! எந்த
ஒரு சூழ்நிலையிலும், மனிதர்கள் நிலை தடுமாறவே கூடாது,
என்று அறிவுரை சொல்பவர் போல
நடித்தார். துரியோதனன் வெட்கம் மேலிட சமாளித்து
எழுந்தான். கோபத்துடன் ஆசனத்தில் போய் அமர்ந்தான். துரியோதனா!
நான் உன் வீடு தேடி
வந்திருக்கிறேன். நீ என்னிடம் எதுவுமே
பேசவில்லையே! என பீடிகையைப் போட்டார்
பரந்தாமன் கிருஷ்ணன்.
No comments:
Post a Comment