Wednesday, 19 November 2014

மகாபாரதம் பகுதி 072


மகாபாரதம் பகுதி-72

எல்லா நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்ததும், போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தன்னை கவுரவர்கள் ஆளாக்கி விட்டதை எடுத்துக் கூறினார். அவர்கள், தர்மத்தைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் தருவதாக வாக்களித்தனர். இதே போல துரியோதனனும் தன் ஆதரவாளர்களை வரவழைத்தான். தனக்கு ஆதரவு தர மறுப்பவர்கள் கொல்லப்படுவர் என அறிவித்து ஓலை அனுப்பினான். பயந்து போன அவர்கள் துரியோதனனின் பக்கம் சேர்ந்தனர். இந்நேரத்தில், மந்திர தேசத்து மன்னனும், தனது தங்கை மாத்ரியை பாண்டவர்களின்  தகப்பனான பாண்டுவுக்கு திருமணம் செய்து கொடுத்தவனுமான சல்லியன் (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரி என்பதும், அவர்களின் தாய்மாமனே இந்த சல்லியன் என்பதும் தொடரை ஆரம்பம் முதலே படித்து வருபவர்கள் அறிவார்கள்) தனது மருமகன்களுக்கு போரில் உதவி செய்ய படைகளுடன் புறப்பட்டு வந்தான்.
அவன் சொன்ன வாக்கு தவறாதவன், நன்றி மறக்காதவன். அவன் தன் படைகளுடன் தர்மர் தங்கியிருந்த உபப்லாவியத்தை நோக்கி சென்ற போது, செல்லும் வழியில் துரியோதனன் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

அவை துரியோதனனால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பதை அறியாத சல்லியனும், அவனது படைகளும் அங்கேயே சாப்பிட்டனர். அங்கு ஏராளமாக கட்டப்பட்டிருந்த சத்திரங்களில் தங்கி ஓய்வெடுத்தனர். அதன்பிறகே, அவை துரியோதனனால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த சல்லியன், வேறு வழியில்லாமல் துரியோதனனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானான். சல்லியனைத்தவிர கலிங்கம், காம்பிலி, போஜம், தெலுங்கு நாடு, கேகயம் உள்ளிட்ட பல நாட்டு அரசர்களும் துரியோதனின் படையில் சேர்ந்தனர். பீஷ்மர், கிருபாச்சாரியார், துரோணாச்சாரியார், கர்ணன், விகத்தசேனன், பகதத்தன் ஆகிய ஏழு சேனாதிபதிகள் துரியோதனனின் படையில் இருந்தனர். இவர்கள் அனைவருமே யாராலும் வெல்ல முடியாத திறமைசாலிகள். படைகள் ஒன்று கூடிய பிறகு, துரியோதனன் அவர்கள் மத்தியில் நின்று, அந்த படைக்கு பிதாமகர் பீஷ்மரை தலைமை சேனாதிபதியாக்குவதாக அறிவித்தான். பின்பு பீஷ்மரின் பாதத்தில் விழுந்து ஆசி பெற்று,தளபதியே! போர் தொடங்கப்போகிறது. அதற்கு முன் நாம் களபலி கொடுக்க வேண்டும். களபலி கொடுக்க தகுதியானவர் யார்? அதற்கு உரிய நல்ல நாள் எது என்பதை தாங்கள் தான் சொல்ல வேண்டும்,என்றான். பீஷ்மர் சிரித்தார்.

துரியோதனா! நான் சிறந்த வில்லாளி. போர்களத்திலே உனக்கு வெற்றி பெற்று தருவேன். ஆனால் நீ கேட்கும் விஷயம் ஜோதிடம் சார்ந்தது. ஜோதிடத்தில் உன் தம்பி சகாதேவனைப்போல் சிறந்தவர்கள் உலகில் யாரும் இல்லை. அவன் உனக்கு எதிரியாயினும், நீ போய் கேட்டால் நல்ல நாள் குறித்து தந்து விடுவான். அவனிடம் உள்ள சிறந்த பண்பு அது. நீ உடனே புறப்படு. பாண்டவர்களின் பக்கம் அரவான் என்ற மாபெரும் வீரன் இருக்கிறான். அவன் இருக்கும் வரை வெற்றி என்பது நம் பக்கம் இல்லை. சகாதேவனைப்போல, யார் என்ன கேட்டாலும் கொடுக்கும் பண்பை உடைய அவனிடம் நீ ஒன்று கேட்க வேண்டும், என்று சொன்ன பீஷ்மரை துரியோதனன் கேள்வி குறியுடன் நோக்கினான். பீஷ்மர் தொடர்ந்தார். துரியோதனா! களப்பலி கொடுப்பதற்கு மிகச்சிறந்தவன் அரவான். எதற்கும் அஞ்சாதவனை களப்பலி கொடுத்தால் தான் போரில் வெற்றி கிடைக்கும். அத்தகைய வீரன் அர்ஜுனனின் மகனான அரவான். அவனிடம் நீ நேரில் சென்று அவனே உனக்காக களபலி ஆக வேண்டும் என்று கேள். உடனடியாக அவன் சம்மதிப்பான். இந்த இரண்டு வேலைகளையும் உடனடியாக முடித்து வா,என்றார். துரியோதனன் தனது தேரில் ஏறி சகாதேவனிடம் சென்றார். போர் துவங்குவதற்கு நல்ல நாள் குறித்து தரச்சொன்னான். தனது சகோதரன் தன்னை தேடி வந்தது சகாதேவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அண்ணனை அன்புடன் வரவேற்று ஆசனத்தில் அமர வைத்து, உணவருந்த செய்து, மார்கழி மாத அமாவாசை இரவில் களபலி கொடுத்தால், பகைவர்களை நீ ஜெயித்து விடலாம்,என சொன்னான்.


வந்த ஒரு வேலை வெற்றியுடன் முடிந்த மகிழ்ச்சியில் அரவானிடம் சென்றான் துரியோதனன். சகாதேவனை விட உயர்ந்த பண்புள்ள அரவான், துரியோதனனை நோக்கி,என் அன்பு தந்தையே வருக,என்று கூறி வரவேற்று, உங்களுக்காக நான் என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டான். துரியோதனன், தனக்காக அவன் களபலி ஆக வேண்டும் எனக்கேட்ட உடனேயே,தந்தைக்காக மகன் உயிரைக் கொடுக்கிறான் என்றால் அதை விட சிறந்த பாக்கியம் ஏது. உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். அமாவாசையன்று நீங்கள் தவறாமல் களபலி களத்திற்கு வந்து விடுங்கள்,எனச் சொல்லி உபசரணை செய்து அனுப்பி வைத்தான். துரியோதனனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அஸ்தினாபுரம் சென்று பீஷ்மரிடம் நடந்ததை சொன்னான். இந்த விஷயங்கள் அனைத்தும் கிருஷ்ணருக்கு தெரிய வந்தது. அவர் சகாதேவனிடம் சென்று,எதிரிக்கே நாள் குறித்து தரும் பைத்தியக்காரனாக இருக்கிறாயே. உனக்கெல்லாம் நான் உதவி செய்ய வந்தேனே,என்று அவனிடம் கடிந்து கொள்வது போல நடித்தார். மனிதனை அவ்வப்போது தெய்வம் சோதித்து பார்க்கும். அந்த சோதனைகளில் மனிதன் ஜெயித்து காட்ட வேண்டும். அப்போது சகாதேவன் கண்ணனிடம்,என் எதிரிக்காக நாள் குறித்து கொடுத்தது சகாதேவன் என்ற சாதாரண மனிதன். ஆனால், என் அருகில் இருப்பதோ ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமாகிய கண்ணன். அவன் இருக்கும் போது நாளும் நட்சத்திரமும் என்னை ஏதும் செய்ய முடியாதென்பதில் தீவிர நம்பிக்கை வைத்திருக்கிறேன்,என்று சொல்லவும் கிருஷ்ணர் பெரிதும் மகிழ்ந்தார். தன் மீது சகாதேவன் கொண்டிருக்கும் பக்திக்காக அவனை மனதுக்குள் வாழ்த்தினார். உலகம் உள்ளளவும் சகாதேவனின் இந்த செயல் மெச்சத்தக்கதாக போற்றப்படும் என அருளாசி வழங்கினார். அடுத்து அரவானை களபலி களத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திலும் அவர் இருந்தார். அதற்காக ஒரு தந்திரம் செய்தார்.


             
               
               
               
               

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer