மகாபாரதம்
பகுதி-35
அர்ஜூனனைக்
கண்டஅவுடனேயே ராஜகுமாரி சித்திராங்கதை அவன் மீது காதல் கொண்டுவிட்டாள். அர்ஜூனனுக்கும் அவள்
மீது கொள்ளை ஆசை பிறந்தது. இருவரும் காந்தர்வ மணம் செய்து
கொண்டனர். விஷயம் பாண்டியமகாராஜாவை எட்டியது. வந்திருப்பது அர்ஜூனன் என்பதை அறிந்த பாண்டியராஜா மகிழ்ச்சியடைந்தார்.
தன் மகள் சரியான கணவனைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்பதை
எண்ணி மகிழ்ந்தார். முறைப்படியாக அர்ஜூனனுக்கு தன் மகளை தாரை
வார்த்துக் கொடுத்தார். மருமகனிடம், அர்ஜூனரே!
எங்கள் குலத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மிகச்சிறந்த
குழந்தையாக இருக்கும் என்று எங்கள் முன்னோர்களில் ஒருவர் தவப்பயன் காரணமாக வரம்
பெற்றார். அவரது காலத்துக்குப் பிறகு வந்த என்
முன்னோர்களுக்கு ஆண்குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சிறப்பாக
ஆட்சியும் செய்தனர். எனக்கோ பெண் பிறந்தாள். எனவே, அவளது காலத்துக்குப் பின் ஆளும் குழந்தைக்கு
நீர் உரிமை கொண்டாடக் கூடாது. அவன் இந்திரபிரஸ்தத்துக்கு
வரமாட்டான். எங்கள் பாண்டிய நாட்டையே ஆளுவதற்கு அனுமதிக்க
வேண்டும், என்றான்.
அர்ஜூனனும்
மகிழ்ச்சியுடன் சம்மதித்தான்.
அந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பப்புருவாகனன் என குழந்தைக்கு பெயரிட்டனர். அந்தக்குழந்தையையும்,
மனைவியையும் மாமனார் பொறுப்பில் விட்டுவிட்டு அர்ஜூனன் தீர்த்த
யாத்திரையைத் தொடர்ந்தான். சேது சமுத்திரத்தில் நீராடிய
பிறகு, பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் குளித்து பாவங்களைக்
கழுவினான். கன்னியாகுமரியில் புனித நீராடினான். பின்னர் வடதிசை நோக்கி பயணம் செய்து, துவாரகையை
அடைந்தான். அங்கே கண்ணன் தன் தாய் தேவகி, அண்ணன் பலராமன், சகோதரி சுபத்ரா ஆகியோருடன்
வசித்தார். கண்ணனின் தரிசனம் பெற அவரைச் சந்தித்தான்.
கண்ணன் அர்ஜூனனுக்கு ஆசிர்வாதம் செய்தார். இவ்வளவு
நாளும் பிராமணவேடம் தரித்த அவன், இப்போது சன்னியாசியாக
மாறியிருந்தான். கண்ணனுடைய சகோதரி சுபத்ரா, அர்ஜூனனை யார் என அறியாமலேயே அவன் மீது காதல் கொண்டிருந்தாள். அர்ஜூனனின் வில் வித்தை பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாள். அந்த வீரனுக்கு மனைவியாக வேண்டும் என்பது அவளது நீண்டநாள் கனவு. இதை கண்ணனும் அறிவார். தங்கையை அர்ஜூனனுக்கு மணம்
முடித்து வைப்பதில் அவருக்கு அலாதி பிரியம். ஆனால், கண்ணனின் யதுகுல மக்கள் இதுபோன்ற திருமணங்களை ஆதரிக்கமாட்டார்கள் என்பது
தெரியும்.
சகோதரன்
பலராமனோ, யதுகுலத்தைச்
சேர்ந்தவனுக்கே தங்கையை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கொள்கை உடையவன்.
அர்ஜூனனிடம் கண்ணன், அர்ஜூனா, நீ என் மைத்துனன் ஆக வேண்டும். அதற்கு என் தங்கையை
மணக்க வேண்டும். நீ அவளுடன் அந்தப்புரத்தில் தங்கியிரு இதே
சன்னியாசி வேடத்தில். சமயம் வரும் போது, அவளை கடத்திச்சென்று விடு. ஒரு பெண் மன்னர்களை
விரும்பும்போது, மன்னர்கள் அவளைக் கடத்திச்செல்வது என்பது
அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். என் தங்கை உன்னை விரும்புகிறாள்.
அவளை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.
அர்ஜூனனுக்கும் சுபத்ரையை பற்றி நன்றாகத் தெரியும். அவள் பேரழகி, அறிவிலும், வீரத்திலும்
சிறந்தவள் என்று. தேர்களை செலுத்துவதில் அவளுக்கு நிகர் அவளே.
அவளைத் திருமணம் செய்து கொள்வதில், அவனுக்கு
கொள்ளை ஆசை. கண்ணனின் திட்டப்படி, சன்னியாச
வேடத்திலேயே அந்தப்புரத்தில் தங்கினான் அர்ஜூனன். கண்ணன்
தங்கையிடம், சுபத்ரா! வந்திருப்பவர்
மகாதபஸ்வி. அவருக்கு நல்லமுறையில் பணிவிடை செய், என்றார்.
வந்திருப்பது
அர்ஜூனன் என்பதை அறியாத சுபத்ரா அவனை சன்னியாசியாக கருதி, கால் பிடித்தாள்,
கை பிடித்தாள். விதவிதமாய் உணவு படைத்தாள்.
ஒருமுறை அவனது மார்பை பார்த்துவிட்டாள். வயதானவர்
போல் இல்லாமல், வீரத்தழும்பு களுடன் காட்சியளித்தது. அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனைப் பற்றி
அறிவதற்காக, சுவாமி! தாங்கள்
இந்திரபிரஸ்தத்தில் இருந்து வருவதாக அறிந்தேன். அங்கே
தர்மமகாராஜா, பீமன், நகுலன், சகாதேவன், குந்திதேவியார் எல்லாரும் நலம்தானே?
என்றாள். ஆம் என்ற அர்ஜூனன், பெண்ணே! எல்லாரையும் விசாரித்தாய், அர்ஜூனனை பற்றி ஏன் விசாரிக்கவில்லை, என்றான்.
அவள் வெட்கத்தால் தலை குனிந்தாள். அர்ஜூனன்
அவளை வற்புறுத்தவே, அருகிலிருந்த தோழிப்பெண்கள், துறவியே! எங்கள் தலைவி, அர்ஜூனனை
விரும்புகிறாள். அதன் காரணமாக வெட்கத்தால், அவரைப் பற்றி விசாரிக்கவில்லை, என்றாள். நீ விசாரிக்காவிட்டாலும் சொல்கிறேன் பெண்ணே! அந்த
அர்ஜூனன், இப்போது இதே ஊரில் தான் இருக்கிறான், என்றவனை சுபத்ரா ஆச்சரியத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். அவர் எங்கு தங்கியிருக்கிறார்? என ஆர்வத்துடன் கேட்க,
இதோ! உன் முன்னால் சன்னியாசி வேடத்தில் இத்தனை
நாளும் இருந்தான். இப்போது வேஷம் கலைத்து உன் முன்னால்
வருவான், என்ற அர்ஜூனன்,
வேஷத்தைக்
கலைத்தான். அவள்
மகிழ்ச்சியும், நாணமும் கலந்து நின்ற போது, கண்ணன் அங்கு வந்தார். பார்த்தீபா! நீ சுபத்ரையை தேரில் ஏற்றிக்கொள். அவள் தேரை
ஓட்டட்டும். நீ தேரில் அமர்ந்து, உன்னை
தடுக்க வருபவர்களை வெற்றிகொண்டு, ஊர் போய் சேர், என்றார். பின்னர் பலராமனிடமும் யதுகுலத்தவரிடமும்
சென்று, அர்ஜூனன் சுபத்ராவை கடத்திச்செல்கிறான் என
நல்லபிள்ளை போல் முறையிட்டார். சுபத்ரா தேர் ஓட்ட, அர்ஜூனனைப் பின்தொடர்ந்த பலராமன் மற்றும் யதுவீரர்களை அம்புமழை பெய்து
விரட்டியடித்தான் அர்ஜூனன். பின்னர் நாடு போய் சேர்ந்தான்.
அங்கே சுபத்ரையை மணந்து கொண்டான். விஷயமறிந்த
கண்ணன், பலராமனை சமாதானப்படுத்தி, சீதனப்பொருட்க
ளுடன் இந்திரபிரஸ்தம் சென்றான். அங்கே சுபத்ராவுக்கும்,
அர்ஜூனக்கும் திருமணம் செய்து வைக்க வசிஷ்டரை மனதால் நினைத்தான்.
வசிஷ்டர் வந்தார். அவரது தலைமையில் மந்திரம்
ஓதி திருமணமும் முடிந்தது. சுபத்ரா கர்ப்பமானாள். அவளுக்கு குரு÷க்ஷத்ர போரில் சரித்திரம்
படைக்கப்போகும் ஒரு வீரமகன் பிறந்தான்.
No comments:
Post a Comment