தியானத்தின்
சிறப்பு!
ஆத்மன்
அல்லது கடவுளைப் பற்றிய தொடர்ந்த எண்ணப்பெருக்கே
தியானம். தியான சமயத்தில் மனம்
ஒருநிலைப்பட்டு, நாடி நிற்கும் பொருளின்
உருவத்தைக் கொள்கிறது. சிதறுண்ட மனக்கதிர்கள் மெதுவாக ஒன்று திரட்டப்பட்டு
மனம் ஒருநிலைப்படுகையில் தியானத்தில் நீங்கள் இன்பத்தை அனுபவிப்பீர்கள்.
தியானத்தில் நீங்கள் ஒழுங்காக இருத்தல்
வேண்டும். காலை நான்கு மணி
முதல் ஆறு மணி வரை
உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் தியானத்தை
நீங்கள் பயிற்சி செய்தல் வேண்டும்.
தியானத்திற்காக இரண்டு அல்லது மூன்று
இருக்கைகளைக் கொள்ளுங்கள். வைராக்கியத்தை வளருங்கள். மௌனத்தைக் கடைப்பிடியுங்கள். பிரம்மச்சரியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். படிப்படியாக தியானத்திற்குரிய காலஅளவை உயர்த்துங்கள். நீங்கள்
தியானத்திற்கு அமருகையில் மனம் ஒருவிதக் குறிக்கோளுமின்றி
சுற்றித் திரிந்தாலும், தெய்வீக எண்ணங்கள் தோற்றுவிக்கப்படாவிட்டாலும்,
தியானப் பயிற்சியை நீங்கள் விட்டுவிடுதல் கூடாது.
மெல்ல மெல்ல நீங்கள் மனஅமைதியைப்
பெறுவீர்கள். மனம் சூனிய நிலையை
அடையும்போதெல்லாம் சர்வ வல்லமை, சர்வ
வியாபகத்தன்மை, சர்வக்ஞத்துவம், சச்சிதானந்த ஸ்வரூபம், பரிசுத்தத் தன்மை, தூய்மை எல்லையற்ற
தன்மை, என்றுமழியாத்தன்மை, நித்தியத் தன்மை போன்ற இறைவனது
திருப்பண்புகளை மானஸீகமாக திரும்பத் திரும்ப நினையுங்கள். குரு
ஸ்தோத்திரங்களையோ, தேவ கீதமொன்றையோ பண்ணுடன்
இசையுங்கள். படிப்படியாக நீங்கள் தெய்வீக எண்ணங்களை
வளரச் செய்வீர்கள். மனம் கட்டுக்கடங்காது நிற்கும்
நேரம், ஆன்மீக எண்ணத்தைப் பின்னணியாகக்
கொண்டு நீங்கள் நித்திய கர்மங்களைச்
செய்து துவங்கலாம். மனதைத் தொழிலற்ற நிலையில்
வைத்துக் கொள்ளுதலால் மாத்திரம் ஆத்மனை அறிவதாகாது. உங்களுக்கு
அது சிறிதளவு உபயோககரமாக இருக்கும். இடைவிடாது நீங்கள் பிரம்மகார விருத்தியை
உருவாக்க வேண்டியதிருக்கும். மனத்தில் அழுக்குகள் அதிகமாக இருக்கின்றன. தியானத்தின்போது
நீங்கள் ஒருவிதத் திருப்தியும் அடையாமலிருக்கக் காரணம் அதுவேயாகும். கடவுள்
தன்மையை அடைதல், ஆத்மீக அறிவைப்
பெறுதல், ஆத்மனிலிருந்து நீங்கள் வேறுபட்டவர்களல்ல என்பதை
அறிதல், உண்மையில் நீங்கள் அந்த அமர
அழியா ஆத்மனே என்பதை உணர்தல்
முதலியவை தியானத்தின் நோக்கமாகும். தெய்வீகத் தன்மையைப் பெறுவதற்கான வேட்கை உங்களிடம் இன்னும்
தோன்றவில்லை. தேவை இருக்கையில் தான்
விநியோகம் நடைபெறுகிறது. ஆகையால் தெய்வீகத்தில் வாழ
இடையறாது விரும்புங்கள். நம்பிக்கை குன்ற அனுமதிக்காதீர்கள். பின்புதான்
நிலைத்த மனமும், தியானத்தில் ஊக்கமும்
உண்டாகின்றன.
தியானிக்குங்கால்
சாதகன் கடைப்பிடிக்கும் மார்க்கத்தையொட்டியோ, ஜிஜ்ஞாசுவின் இயற்கைத் தன்மைக்கு ஒத்தவாறே மனநிலை வேறுபடுகிறது. அவன்
ஒரு பக்தனாக இருப்பானேயாகில் வேலைக்காரனொருவன்
தன் எஜமானனிடம் காட்டிக்கொள்ள வேண்டிய பணிவு, சரணாகதி
முதலிய உயர்குணங்களைப் பெற்றிருக்கிறான். கடவுளைத் துதிக்கிறான். அவன் புகழைப் பாடுகிறான்.
கடவுளையே எப்பொழுதும் நினைவிலிருத்துகிறான். அவனை வணங்கி, பெருமைபடுத்துகிறான்.
அவனுக்கு சேவை செய்யவும், அவனை
இன்புறச் செய்வற்காகவுமே அப்பக்தன் வாழ்கிறான். தன் இஷ்ட தேவதையின்
உருவிலேயே சாதகன் இடையறாது தியானிக்க
வேண்டும். அவன் ஓர் வேதாந்த
மாணாக்கனாயிருப்பானேயாகில்
நானே அந்த அழியா ஆத்மன்,
நானே எல்லாவற்றிலும் எல்லாம்; நானே சச்சிதானந்தப் பிரம்மன்
என்பதை உணர்கிறான். பிரிக்க முடியாத சுதந்திரமான
அழியாத, சர்வ வியாபியான ஆத்மனுடன்
தன்னை ஒன்றுபடுத்திக் கொள்கிறான். சமாதி நிலையை அடையும்
பொழுதுதான் தியானம் பூரண நிலையை
அடைந்துவிட்டதென்று சொல்லலாம். தியானிப்பவரும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றாகவே ஆகிவிட வேண்டும். நிறைவு,
உயரியசாந்தி, சமநிலை, மனபலம், தூய்மை
இணையிலா இன்பம், மனதில் ஒரு
பிரத்யேக புனித உற்சாகம் முதலியவைகளே
நீங்கள் தியானத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளங்களாகும்.
No comments:
Post a Comment