Monday, 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் மீனம்



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)மீனம்:

 (பூரட்டாதி4, உத்திரட்டாதி, ரேவதி) 75/100 (கையிருப்பு ஏறும்! உடல்நிலை வாட்டும்!)
கருணை மனப்பான்மை கொண்ட மீனராசி அன்பர்களே!

குருபகவான் இது வரை 4 ல் இருந்து பல்வேறு இன்னலைத் தந்திருப்பார். அவர் குடும்பத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களுடன் வீண் சச்சரவு ஏற்பட்டிருக்கும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாகி இருக்கலாம். இந்த நிலையில் குரு பகவான் ராசிக்கு 5ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான நிலை. இதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வில் பொருளாதார வளம் காணலாம். இது தவிர குருவின் 5,7 ம் பார்வைகளாலும் நன்மை அதிகரிக்கும். தடைகள் நீங்கி முயற்சி அனைத்தும் எளிதாக நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிப்பதால் சேமிப்பு கூடும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.

கடந்த ஆண்டு இருந்து வந்த குடும்ப பூசல் மறையும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்று சேரும். தடைப்பட்டு வந்த திருமணம் இனி மளமளவென நிறைவேறும். சிலருக்கு வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும். உறவினர் வகையில் விருந்து, விழா என்று அடிக்கடி சென்று வருவீர்கள். சிலருக்கு ஆன்மிக திருத்தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கப் பெறுவீர்கள். மனம் விரும்பிய வகையில் புத்தாடை அணிகலன் வாங்கி மகிழ்வீர்கள். உச்சவீடான கடகத்தில் இருக்கும் குருவின் 5,7,9ம் பார்வைகள் மூன்றும் முறையே ராசி, 9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. இதன் மூலம் வாழ்வில் நன்மை உண்டாகும். ராசியில் பதிவதால் செய்யும் எதிர்கால நன்மை கருதிச் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தந்தையின் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவரின் அன்பும், ஆசியும் வாழ்விற்கு துணைநிற்கும். சிலருக்கு பூர்வீக வழியில் சொத்து கிடைக்க யோகமுண்டு. மூத்த சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்பு நீங்கி, இணக்கம் அதிகரிக்கும். அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பது வாழ்வில் நன்மையளிக்கும். செய் தொழிலில் சிறிய முயற்சிக்குக் கூட நிறைய பலனை எதிர்பார்க்க முடியும். தான தரும சிந்தனை மனதில் மேலோங்கும். அதனால், பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் அமோக வளர்ச்சியும், அதிக லாபமும் கிடைக்கும். இதுவரை இருந்து வந்த  இடையூறுகள் அடியோடு மறையும். கூட்டாளிகளிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, ஒற்றுமை ஏற்படும். சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியிலும் ஈடுபடுவர். சனியால் பளு அதிகரித்தாலும் அதற்கான வருமானமும் அதிகமாகும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில் மேற்கொள்பவர்கள் கூட நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவர். எதிர்காலத்தில் அதுவும் நல்ல வளர்ச்சியை அடையும். சிலர் தொழில், வியாபார விஷயமாக நீண்டதூர பயணமாக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

பணியாளர்கள்: பணியாளர்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு இனி கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்த்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு பணி,இட மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.சக பெண் ஊழியர்களால் நன்மை உண்டாகும்.

பெண்கள்:  வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்கும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். உறவினர் இல்ல விசேஷங்களை தலைமையேற்று நடத்தி வைப்பீர்கள். கன்னியருக்கு விரும்பிய வகையில் மணவாழ்வு அமையும். புதுமண
தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.

கலைஞர்கள்:  நல்ல புகழும் பெருமையும் கிடைக்க பெறுவர். புதிய ஒப்பந்தம் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். சிலருக்கு அரசிடம் இருந்து விருது கிடைக்க வாய்ப்புண்டு.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். மக்கள்நலப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவர். அரசியல் வாழ்வோடு தொழிலும் சிலர் சாதனை படைக்க இடமுண்டு.

மாணவர்கள்:  நன்கு படிப்பதால் இந்த ஆண்டு கல்வியில் சிறப்பான பலனை காணலாம். கடந்த ஆண்டில் இருந்த தேக்க நிலை மாறும். மேற்படிப்பு படிக்க நினைப்போருக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு சென்று படிக்க யோகமுண்டாகும்.

விவசாயிகள்:  நல்ல விளைச்சலால் வருமானம் கூடும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்புண்டாகும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். கூலி வேலை செய்பவர்களும் மன நிம்மதியுடன் காணப்படுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். நிலப்பிரச்னையில் சாதகமான முடிவு கிடைக்கும்.

உடல்நலம்:   2014 டிசம்பருக்கு பிறகு அவ்வப்போது உடல்நலக்குறைவு உருவாகலாம். அதனால் மருத்துவச் செலவு செய்ய நேரிடும்.

குரு அதிசார பலன்!

குருபகவான் டிசம்பர் 3ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22ம் தேதி வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் மன உளைச்சலையும், உறவினர் வகையில் பகையையும் உருவாக்குவார். பணத்தட்டுப்பாடும் உருவாகும். முயற்சியில் தடைகளும் உருவாகி மறையும்.

பரிகாரம்!

ராகு-கேது சாதகமற்ற நிலையில் உள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும்போது அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை அம்மனை எலுமிச்சை விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் வீட்டில் விளக்கு ஏற்றி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள்.

பரிகாரப் பாடல்!

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும்  இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer