Monday, 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் சிம்மம்



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 60/100 (மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லே! பூசலுக்கும் குறைவில்லே!)
எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் சிம்மராசி அன்பர்களே!

இதுவரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்திருப்பார். பணப்புழக்கம் மேம்பட்டிருக்கும். எடுத்த செயல்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திருப்பீர்கள். பல்வேறு நன்மைகளை தந்த குரு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைத்துள்ளார். இது சுமாரான நிலையே. இனி அவரால் நன்மை தர இயலாது. குரு 12-ம் இடத்தில் இருக்கும்போது பொருள் பற்றாக்குறை ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும் என்பது பொதுவான பலன். இதனால் நீங்கள் மனம் ஒடிந்துபோய்விட வேண்டாம். குரு பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் இறுதியில் உங்களுக்கு நன்மையிலேயே முடியும். ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றே, குரு பகவானின் தண்டனை அமையும். மாணவனை ஆசிரியர் அடிப்பது நன்மைக்கே. அதேபோல் குரு பகவானின் கெடு பலன்கள்  உங்களுக்கு இறுதியில் நன்மையே தரும். சனிபகவானின் பார்வையால் உங்கள் நிலை சற்றும் குறையாது. எதையும் சமாளித்து முன்னேற அவர் கருணை காட்டுவார்.வீட்டில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிறுசிறு பூசல்கள் வரலாம். ஒருவருக்கொருவர் பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் போக வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். அதே நேரம் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். அப்படி தாமதம் ஆவதும் ஏதோ ஒரு வகைக்கு நல்லதற்கே என்று நினைக்கவும். சிலரது வீடுகளில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. எனவே சற்று கவனமாக இருக்கவும். நவம்பர் மாதத்தில் சுக்கிரனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரம்:  நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவீர்கள். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். டிசம்பருக்கு பிறகு அதிக அலைச்சலும், கடின உழைப்புக்கு தகுந்த லாபமும் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் வைப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. நல்லவர்கள்போல் பழகி உங்களிடம் பணமோசடி செய்ய சிலர் முனையலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம்.

பணியாளர்கள்: பணியில் இருப்பவர்கள் கடந்த காலத்தைப்போல அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்கான மதிப்பும், வருவாயும் இருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும்.டிசம்பர் மாதத்தில் பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு அபார ஆற்றல்  பிறக்கும். நகை-ஆபரணங்கள், வீட்டு மனை வாங்கலாம். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள்  உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் மற்றும் பொது நல சேவகர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிதாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.

விவசாயிகள்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த கூலி வரும். அதிக முதலீடு செய்யும் விவசாயத்தை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

உடல் நலம்: உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை.

குரு அதிசாரப் பலன்!

குருபகவான் டிசம்பர் 3-ந் தேதி அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22-ந் தேதி வரைஅதில் இருப்பார் . இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு.  இருப்பினும் இக்காலத்தில் சீரான முன்னேற்றத்தைக் காணலாம். பொருளாதார வளம் சிறப்படையும். எதிலும் எளிதில் வெற்றி காணலாம். டிசம்பருக்கு பிறகு எடுத்த காரியத்தை முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். எனவே அனாவசிய செலவை குறைக்கவும். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்!

பத்திரகாளியம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி பூஜை செய்யவும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். டிசம்பரில் இருந்து ராமபக்தர் ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும், கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப்பாடல்!

பன்மணி சந்திரகோடி திருமுடிசொன்மணி குண்டலக் காதியுழைக் கண்ணிநன்மணி சூரிய சோம நயனத்தள் பொன்மணி வன்னியும்பூசிக்கின்றாளே!




No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer