Monday, 16 June 2014

குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம்



குரு பெயர்ச்சி பலன்கள் (13.06.14 முதல் 04.07.15 வரை)மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) 55/100 (கை நிறைய பணம்! வந்ததும் செலவாயிடும்!)
மன உறுதியுடன் உழைத்திடும் மேஷராசிஅன்பர்களே!

குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடை ஏற்பட்டு இருக்கும். இந்த நிலையில் குரு பகவான் 3-ம் இடத்திலிருந்து   4-ம் இடத்துக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. சோதனைகளை கொடுத்தாலும் அது உங்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்வார் என்பதை மறப்பது கூடாது. மாணவனுக்கு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பது போல குரு உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பார். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் இப்போதைய நிலையை விட மேலும் வாழ்வில் முன்னேற்றம் காண குருவின் பார்வை பலம் உங்களுக்கு துணை செய்யும். கோச்சார பலனை பார்க்கும் போது மற்ற கிரகங்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக எதையும் சற்று முயற்சி எடுக்க வேண்டிய திருக்கும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். தேவை அனைத்தும் கிடைக்கும். வீடு, மனைவாங்க யோகம் கூடி வரும். கணவன்,மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை குறையும். குடும்பத்தில் தேவையான வசதிகள் இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபட வாய்ப்புண்டு. அதுவும் கூட உங்களின் நல்லதுக்குத் தான். புதிய வீடு வாகனம் வாங்க கடின முயற்சி தேவைப்படும். உறவினர்கள் வகையில் அடிக்கடி பிரச்னை உருவாகலாம். ஆகஸ்டு மாதம் சுக்கிரனின் பலத்தால் உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் குடும்ப குழப்பம் அனைத்தும் படிப்படியாக நீங்கும். புதனால் எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சி நடக்கும். சுக்கிரனால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். டிசம்பருக்கு பிறகு மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.

தொழில், வியாபாரம்: போட்டியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அனைத்தும் மறையும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வெகு தூர அலைச்சல் உருவாகலாம். பண விரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினாலே போதும். அதே போல் எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். சிறு தொழில் செய்பவர்கள் சீரான வருமானம் காணலாம். தொழிலை பெருக்க வழிவகை தெரியாமல் சிலர் தவிப்பர்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் தொடர்ந்து சீரான வளர்ச்சி நிலை இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அதிக முயற்சி செய்தால் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்கள் வகையில் உதவி கிடைக்காது. செப்டம்பர் மாதத்தில் புதனால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூலி தொழில் செய்பவர்களுக்கும் தேவைக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும்.

பெண்கள்:  கணவரின் அன்பு கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்ப நன்மைக்காக எதையும் தியாகம் செய்வர்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெற முடியாது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். ஆகஸ்டில் சுக்கிரனின் பலத்தால் தடைகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். அவரால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள்:  உழைப்புக்கு தகுந்த மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். ஆசிரியர்களின் அறிவுரை பயன் கொடுக்கும்.

விவசாயிகள்:  அதிக முதலீடு எதிலும் செய்ய வேண்டாம். கால்நடை மூலம் சீரான வருமானம் இருக்கும். பயறு வகை மூலம் நல்ல மகசூல் வரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைவிட்டு போகலாம். வழக்கு விவகாரத்தில் சாதகபலன் கிடைக்காது. சிலருக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு. புதிய வழக்குகள் எதிலும் சிக்க வேண்டாம்.

உடல்நலம்:  கேதுவால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். டிசம்பருக்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான உபாதை உண்டாகலாம். எதிரிகளின் தொல்லை ஏற்படும். பயணத்தின் போது கவனம் தேவை. சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். எனவே சற்று ஒதுங்கி இருக்கவும்.

குரு அதிசார பலன்!

குருபகவான் டிச.3ல் அதிசாரம் பெற்று சிம்ம ராசிக்கு மாறுகிறார். 22 வரைஅதில் இருப்பார். இந்த காலத்தில் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்!

சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி
செய்யுங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் ஏழைகளுக்கு ஆடு வளர்க்க உதவி செய்யலாம்.

பரிகாரப்பாடல்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்கு.






No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer