Tuesday, 3 June 2014

இராமேஸ்வரம் ஆலயம்

இராமேஸ்வரம் ஆலயம் :

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.


1 comment:

  1. வெம்பாக்கம் ஸ்ரீசொர்ணகால பைரவர் கோயில் பற்றிய தகவல் அறிய கீழ்க்கண்ட வலைத்தலைத்தை பார்க்கவும்.
    Sriswernakalapairavar.blogspot.com

    ReplyDelete

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer