ராகு-கேது
பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) சிம்மம்:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 55/100 சிரமமான சூழ்நிலை
வெற்றி மேல் வெற்றி குவிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். அதாவது காரிய அனுகூலத்தையும், நல்ல வருவாயையும் தந்திருப்பார். அதன் மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கண்டிருக்கலாம். பல்வேறு முன்னேற்றத்தையும் பெற்றிருக்கலாம். இப்படி நன்மை தந்த ராகு, இப்போது 2-ம் இடமான கன்னி ராசிக்கு வந்துள்ளார். இது சிறப்பான இடம் இல்லை. இங்கு அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளையும், துõரதேச பயணத்தையும் ஏற்படுத்துவார். ராகுவுக்கு இணையான இன்னொரு கிரகம் கேது இதுவரை 9-ம் இடமான மேஷத்தில் இருந்து வந்தார். அவரால் பொருள் இழப்பையும், காரியத்தில் தோல்வியையும் கண்டிருக்கலாம். அவர் இப்போது 8-ம் இடத்திற்கு மாறுவதன் மூலம் இந்த கெடுபலன்கள் நடக்காது. அதேநேரம் அவர் மீனத்திற்கு மாறுவதும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண், தோல், தொடர்பான நோய் வரலாம். சற்று கவனம் தேவை. லேசான பாதிப்பு வந்தால்கூட உடனே சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் மருத்துவ செலவு குறையும்.
தொழில், வியாபாரம்: நல்ல வருமானம் கிடைக்கும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு சென்று வருவார்கள். பங்குதாரர்கள்இடையே ஒற்றுமை ஏற்படும். டிசம்பருக்கு பிறகு அதிக அலைச்சல் இருக்கும். கடின உழைப்புக்கு தகுந்த லாபம் இருக்கும். சிலர் வியாபாரத்தை ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறுகள் வரலாம். அவர்கள் வகையில் ஒருகண் இருப்பது நல்லது. புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. தொழிலில் போட்டி உருவாகும். பண விஷயத்தில் சற்று அக்கறை தேவை. பணத்தைவிட உங்கள் அறிவை பயன்படுத்தி எத்துறையிலும் சிறப்படையலாம். பத்திரிகை தொழில், தானியம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய கிளைகள் துவங்குவதை மிகுந்த கவனத்தின் பேரில் செய்யுங்கள்.
பணியாளர்கள்: கடந்த காலத்தைப்போல அனுகூலங்கள் இருக்கும் என்று எண்ண வேண்டாம். அதிக வேலைப்பளுவை சுமக்க வேண்டியிருக்கும். வழக்கமான சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். இதனால் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகும். எதிர்பார்த்த சலுகைகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். ஓரளவுக்கு சம்பாதிக்க முடியும்.
அரசியல்வாதிகள்: எதிர்பார்த்த பதவி கிடைப்பது சிரமம். தலைமையிடம் அனுசரிப்பும், தொண்டர்களிடம் கண்டிப்பும் காட்டுவது பதவிக்கு வரும் இடையூறைத் தவிர்க்கும்.
மாணவர்கள்: முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிதாகும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள்: கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காவிட்டாலும் உழைப்புக்கு தகுந்த வருமானம் வரும். அதிக முதலீடு செய்யும் விவசாயத்தை தவிர்க்கவும். நெல், கோதுமை, கேழ்வரகு பயிர்களில் நல்ல மகசூல் பெறலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது. புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள்: கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். நகை, ஆடம்பரப்பொருட்கள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேற தாமதமாகும்.
பரிகாரப்பாடல்!
ஆடிப் பாடி அகம் கரைந்து இசைப் பாடிப் பாடி கண்ணீர் மல்கி நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாணுதலே
ராகு, கேதுவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். திருநாகேசுவரம், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, சங்கரன் கோவில், நாகர்கோவில் ஆகிய தலங்களில் ஏதாவது ஒன்றுக்கு சென்று வரலாம். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்திற்கு துணை நிற்கும். நரசிம்மரை வழிபடுவதன் மூலம் வருகின்ற சிரமங்களைத் துõள் துõளாக்கி விடலாம்.
No comments:
Post a Comment