ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (21.6.2014 முதல் 7.1.2016 வரை) விருச்சிகம்:
விருச்சிகள்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 75/100 ஏழரையிலும் நன்மை!
கண்ணியம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே!
ராகு இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடமான துலாமில் இருந்ததால் பண இழப்பையும், சில துயர சம்பவங்களையும் சந்தித்திருக்கலாம். உங்கள் முயற்சிகளில் தடைகளும் ஏற்பட்டு இருக்கும். இனி இந்த இடர்பாடுகளுக்கு விடை கொடுக்கலாம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடமான கன்னி ராசிக்கு செல்வது மிகச்சிறப்பானது. பொருளாதாரத்தில் நல்ல வளத்தை தருவார். உபரியாகக் கிடைக்கும் பணத்தைச் சேமிப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பணமுடையில் இருந்து பாதுகாப்பு தரும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.ராகு நன்மை தந்தாலும் கேதுவால் நன்மை கிடைக்காது. அவர் இதுவரை 6ம் இடமான மேஷத்தில் இருந்து பொன்னையும், பொருளையும் தந்தார். இப்போது 5-ம் இடமான மீனத்திற்கு வந்துள்ளதால் அரசு வகையில் சில பிரச்னைகளைத் தரலாம். திருட்டு பயமும் ஏற்படலாம். ராகு, குருவால் தடைகள் அனைத்தும் விலகும். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கலாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
தொழில், வியாபாரம்: அதிக வருமானம் காணலாம். கடந்த கால நஷ்டம் இருக்காது. ஓரளவு சேமிப்பு இருக்கும். இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். போட்டியாளர்ள் தொல்லை இருக்கத்தான் செய்யும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும்.
பணியாளர்கள்: மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்பர் பெறுவர். திறமை பளிச்சிடும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். வேலையை இழந்தவர்கள் மீண்டும் வேலை கிடைக்க பெறுவர். வேலையோடு பக்கத் தொழில் செய்பவர்கள் நல்ல வளத்தோடு இருப்பர்.
கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும்.
அரசியல்வாதிகள்: பதவியும், பணமும் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தோல்வி இனி இருக்காது. பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்.
மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பைக் காணலாம். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றிபெறவும் வாய்ப்பு உண்டு. விரும்பிய பாடம் கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவும் சிலர் வாய்ப்பு பெறலாம்.
விவசாயிகள்: நல்ல வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்கலாம். எள், பனை பொருள், நெல், சோளம் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: மகிழும் வகையிலான பலனைக் காண்பர். வருகின்ற சிரமங்களை சாதுரியத்தால் எளிதில் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.கணவரின் அன்பு கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
பரிகாரப்பாடல்!
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்- விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.
சனியும், கேதுவும் சிறப்பாக காணப்படவில்லை. அவர்களுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு இயன்றதை தானம் செய்யுங்கள். விநாயகருக்கு திங்கள் தோறும் அருகம்புல் மாலை ‹ட்டுங்கள். கேதுவின் அனுக்கிரகம் பெறும் வகையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது நன்மையைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment